இன்று நண்பர் தயாநிதி (பொறியியலாளர், யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர், ஓராயம் அமைப்பின் தலைவர்) அவர்களின் தந்தையார் அமரர் பண்டிதர், சைவப்புலவர் ஏகாம்பரநாதன் பரஞ்சோதி அவர்களின் ஒராண்டு நிறைவையொட்டி நடைபெற்ற நினைவு கூர்தல் மற்றும் மதியபோசன நிகழ்வுக்கு நண்பர் பேரா சவுந்தரநாதனுடன் சென்றிருந்தேன். அங்கு என் பால்ய, பதின்மப் பருவத்து நண்பர்களான ஈஸ்வரமூர்த்தி (சிவா முருகுப்பிள்ளை), பிறேமச்சந்திரா, குருபரன் மற்றும் கலை, இலக்கிய ஆளுமைகளான மீரா பாரதி, திவ்வியராஜன், ஶ்ரீரஞ்சனி, அகணி சுரேஷ், யாழ் இந்து பழைய மாணவர்கள் எனப் பலரைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. தயாநிதி அவரது மனைவு முனைவர் மைதிலி, தயாநிதியின் சகோதரி ரஞ்சனி அவரது கணவர் ஶ்ரீகதிர்காமநாதன் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது.
நிகழ்வில் ஶ்ரீகதிர்காமநாதன் தனது ஆசிரியரும், மாமானாருமான பரஞ்சோதி ஆசிரியரைப்பற்றி நினைவு கூர்ந்தார். தயாநிதி தனது தந்தையாரின் ஞானத்தேடலைப்பற்றிய சித்திரத்தை எமக்கு வழங்கினார். தந்தையாரின் அத்வைத சிந்தனை மீதான ஈர்ப்பினையும் சுட்டிக்காட்டினார். அவரது மனைவி முனைவர் மைதிலி தயாநிதி தனது மாமனாரைப்பற்றிக் குறிப்பிடுகையில் அவர் சித்தர் என்று குறிப்பிட்டார். எழுத்தாளரும் கலைஞருமான திவ்வியராஜன் தனது ஆசிரியரைப்பற்றிச் சுவையான சம்பவங்களை நினைவு கூர்ந்ததுடன் தானே இயற்றிய சிறு பாடலையும் சிறப்பாகப் பாடி அனைவரையும் மெய்ம்மறக்க வைத்தார். இறுதியில் ரஞ்சனி ஶ்ரீகதிர்காமநாதன் நன்றியுரை வழங்கியதுடன் உரிய நேரத்தில் மதிய போசனம் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக நான் கருதுவது 'பண்டிதர் பரஞ்சோதி சிந்தனைகள்' என்னும் நூலாகும், பண்டிதர் பரஞ்சோதி அவர்கள் தாமிருந்த வரையில் தான் எழுதிய எவற்றையும் நூலாக்குவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. தனது மறைவுக்குப் பின்னரும் தனது உடலை யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் உடற்கூறியல் கற்கைக்காக வழங்குபடி அறிவுறுத்தியவர். இந்நிலையில் அவர் அவ்வப்போது தனது குறிப்புகளாக எழுதி வைத்திருந்த கவிதைகள், சிந்தனைக்குறிப்புகள் சிலவற்றைத் தொகுத்து நூலாக்கியிருக்கின்றார்கள். இந்நூல் மிகவும் முக்கியமானது. இதுவரையில் நான் பரஞ்சோதி ஆசிரியரைப்பற்றி பத்தோடு பதினொன்றாகவே கருதியிருந்தேன். அதனை உடைத்தெறிந்தன நிகழ்வில் அவரைப்பற்றிக் கூறப்பட்ட கருத்துகளும், இந்நூலிலுள்ள அவரது எழுத்துகளும்.
அவர் அத்வைத வேதாந்த சிந்தனையால் கவரப்பட்ட ஒருவர். மதம், மொழி, இனம் இவற்றுக்கப்பால் நின்று மனிதரை நோக்கிய மனித நேயம் மிக்கவர். இவ்விடயத்தில் 'யாதும் ஊரே.யாவரும் கேளிர்' எனப் பல நூறு வருடங்களுக்கு முன்னர் பாடிச் சென்ற புலவர் கணியன் பூங்குன்றனாரை நினைவூட்டினார். சித்தர்களைப்போல் ஜீவமுக்தியில் நம்பிக்கை மிக்கவர். காந்தி, ஜிட்டு கிருஷணமூர்த்தி போன்றோரை நவீன புத்தர்களாகக் கருதுபவர். வர்ண வேறுபாடுகளை வெறுத்தவர். இவ்விதமாக அவரைப்பற்றிய ஆளுமையை உணர வைக்கும் எழுத்துகளை உள்ளடக்கியுள்ள நூலிது. இந்நூலினை வெளியிட்டதற்காக நிச்சயம் அவரது குடும்பத்தவர்கள் மகிழ்ச்சியடையலாம்.
நூலிலுள்ள கவிதைகளில் பரஞ்சோதி ஆசிரியரின் எனக்குப் பிடித்த சிந்தனைத் துளிகள் சில :
1.
எத்தனை கோடி இன்பம் இந்த உலகத்திலே உண்டு - அவை
அத்தனையும் விட்டவலங் கொள்ளல் எதற்கோநீ கண்டு.
2.
உலகமெலாம் ஒரேசமயம் ஒரேகடவுள்
ஒரேநோக்கம் அதுதான் அன்பு.
.....
கலகமினி வேண்டாம்நாம் அன்பினால்
ஒன்றாகி உதவி வாழ்வோம்.
3.
புத்தரின் புத்தி மார்க்கம்
யேசுவின் அன்பு மார்க்கம்
வித்தக நபியின் மார்க்கம்
வீறு சங்கரரின் நோக்கு
சித்தரின் சைவ மார்க்கம்
சீர்பெறு மாக்சின் திட்டம்
அத்தனை நெறியும் ஒன்றே
அனைவரும் வாழும் திட்டம்.
*மாக்சை இவ்விதம் நினைவு கூர்ந்த பண்டிதர்கள், சைவப்புலவர்கள் வேறெவரோ நானறியேன்.
4.
சுதந்திரத்தை விரும்புவது அறிவின் தன்மை
சுதந்திரத்தைத் தடுப்பதுவோ சடத்தின் தன்மை.
5.
உலகெல்லாம் ஒருகுடும்பம் என்ற உணர்வோடே
ஊரினையும் நாட்டினையும் இனத்தினையும் வளர்க்க
...
வல்ல கல்வி எது? அதுவே மாணவர்கள் தங்கள்
வாழ்க்கைக்கு வளம்சேர்க்கும் கல்விஎனல் தகுமே.
6.
பறந்து செல்லடா - தம்பி
பறந்து செல்லடா
நானென்ற எல்லை தாண்டி
என் குடும்ப எல்லை தாண்டி
எம்தம்வழி எம்தம்மொழி
என்ற பந்தத் தெல்லை தாண்டி
எங்கள் இனம் எங்கள் சனம்
எங்கள் மனம் வென்று தாண்டி
எங்கள் சாமி எங்கள் பூமி
என்ற எல்லை தாண்டி உயர்
பறந்து செல்லடா - தம்பி
பறந்து செல்லடா
நூலிலுள்ள கட்டுரைகளும் முக்கியமானவை. இவையும் மேற்படி கவிதைகளில் தென்படும் சிந்தனைகளை விரிவாக எடுத்துரைக்கின்றன.