சென்ற சனிக்கிழைம யூலை மாதம் 27 ஆம் திகதி 2024 அன்று மலை 6:00 மணியளவில் ரெறன்ரோவில் உள்ள சீன கலாச்சாரமண்டபத்தில் செல்வி சாக்ஸவி திலீபனின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது. நண்பர் திலீபனின் அழைப்பை ஏற்று நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். இது போன்ற பரதநாட்டிய, இசை அரங்கேற்றங்கள் சிலவற்றுக்குச் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொண்டிருந்தாலும், அன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டது போல இசை, நடன ஆசிரியர்களை நான் ஒரு போதும் இப்படியான நிகழ்வுகளில் சந்திக்கவில்லை. இந்த நிகழ்வில் பல புதிய இசை, நடன ஆசிரியர்களையும் சந்தித்து உரையாடவும் முடிந்தது குறிப்பிடத் தக்கது.
சாக்ஸவியின் தாயார் ஸ்ரீமதி சுதர்சினி அவர்கள் நடன ஆசிரியராக இருப்பதும் இவர்களின் வருகைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை கனடா வளாகத்தைச் சேர்ந்த டாக்டர் சூரியகலா சந்திரிகா ஜீவானந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த அரங்கேற்ற நிகழ்வுக்கு அற்புத நர்த்தனாலய அதிபர் ஸ்ரீமதி அற்புதராணி கிருபராஜ் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் தனது உரையில் ‘செல்வி சாக்ஸவி திலீபன் மிகவும் திறமை உள்ள பாத்திரலட்சணங்கள் பொருந்திய அன்பும், அடக்கமும், பணிவும் உள்ள சிறந்த மாணவி. நல்ல அங்கசுத்தம், சிறந்த வயப்பிடிப்பு, உணர்ந்த பாவம் என்பனவற்றை சாக்ஸவியின் இந்த நடனத்தில் கண்டு மகிழ்ந்தேன். இந்த அரிய கலையைப் புலம்பெயர்ந்த இந்த மண்ணில் உள்ள அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய பொறுப்பு சாக்ஸவி போன்றவர்களிடமே இருக்கிறது, அவரது எதிர்காலம் சிறக்க எனது வாழ்த்துக்கள்’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
சாக்ஸவி தனது 5 வது வயதில் சலங்கைப் பூசையை செய்திருந்தார். இவர் நடன ஆசிரியையான ஸ்ரீமதி சுதர்சினி திலீபன் அவர்களின் மாணவி மட்டுமல்ல, அவரது மகளுமாவார். பதின்நான்கு வயது நிரம்பிய இவர் தனது பாடசாலைப் படிப்போடு பரதநாட்டியத்தைவிட வாய்ப்பாட்டு, வீணை, வயலின் போன்றவற்றையும் கற்று வருகின்றார். விளையாட்டுத் துறையிலும் ஈடுபாடு கொண்டிருக்கின்றார். இவரது இசைத் திறமையையும், தமிழ் ஆளுமையையும் பல மேடைகளில் பார்த்துப் பாராட்டியிருக்கின்றேன்.
அணிசேர் கலைஞர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் ஸ்ரீ கே. எஸ். பாலகிருஸ்னன் நட்டுவாங்கம் செய்வதாக இருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக ஸ்ரீமதி சுதர்சினி திலீபனும், கார்த்திகா நாராயணனும் நட்டுவாங்கம் செய்தார்கள். திரு. அருண் கோபிநாத், ஸ்ரீமதி பிரபா தயாளன், ரதிரூபன் பரம்சோதி, ஸ்ரீ விஸ்ணு ஆகியோர் தங்கள் இசைத்திறமையை அணிசேர் கலைஞர்களாக மேடையில் வெளிப்படுத்திச் சபையோரின் பாராட்டைப் பெற்றிருந்தனர்.
செல்வி சாக்ஸவியை குரும்பசிட்டி நலன்புரி சங்கத்தினர் பாராட்டிக் கௌரவித்ததைத் தொடர்ந்து, நிகழ்வின் முடிவில் பங்குபற்றிய கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். திரு. ராகவன் பரம்சோதி அவர்கள் தனது பேச்சுத் திறனால் இந்த நிகழ்வைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கியிருந்தார். இரவு விருந்துபசாரத்துடன் அரங்கேற்ற நிகழ்வு சிறப்பாக நிறைவேறியது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.