அஞ்சலி: மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது மறைவு! ஆழ்ந்த இரங்கல்!
மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது அவர்கள் இன்று மறைந்ததாக அறிந்தோம். உலகத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். அவருக்குப் பதிவுகள் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்கள் ' சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை 'யில் அறிமுகப்படுத்திய எழுத்தாளர் சை.பீர்முகம்மது பற்றிய குறிப்பையும், அறிமுகப்படுத்திய சை பீர்முகம்மது அவர்களின் சிறுகதையினையும் அவர் நினைவாக மீள்பிரசுரம் செய்கின்றோம்.
சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை - 8!
அறிமுகம்: (மலேசியா) சை.பீர்முகம்மது - ஜெயந்தி சங்கர் -
மலேசியத் தலைநகரான குவாலலம்பூரில் 1942ல் பிறந்த சை.பீர்முகம்மது 1959 முதல் எழுதி வருகிற மூத்த எழுத்தாளர்களுள் முக்கியமானவர். கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக இவர் ஏதோவொரு விதத்தில் தன்னை இலக்கியத்துடன் இணைத்துக் கொண்டு வந்திருக்கிறார். 12 வயதுமுதலே தன் எழுத்தார்வம் தொடங்கியதாகச் சொல்லும் இவர் மலேசியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது ஏற்பட்ட வெடிச் சத்தத்துடன் பிறந்ததாக வேடிக்கையாகச் சொல்வார். தனது கட்டுமானத்துறை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் இவர் தனது குடும்ப உணவகங்களையும் கவனித்துக் கொள்பவராக இருந்து வருகிறார்.
பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் போதான காலங்களில் சிங்கப்பூரின் தமிழ்முரசு இவருக்குப் படிக்கக் கிடைக்கும். அதில் மாணவர் மணி மன்றம் என்ற ஒருபகுதி ஒவ்வொரு திங்கட்கிழமையும் வரும். வீட்டில் 1954முதல் தொடர்ந்து வீட்டில் வாங்கியதால் விடாமல் வாசித்தார். மாணவர் மணிமன்றத்தில் நிறைய மாணவர்கள் எழுதினார்கள். தானும் எழுதிப்பார்த்தால் என்ன என்று யோசித்தவர் சின்னச்சின்ன கட்டுரைகள் எழுதி அனுப்பியிருக்கிறார். அதன்பிறகு பேச்சுப்போட்டிகளில் கலந்து பரிசுகளும் பெற்றார். பள்ளியில் சை.பீர்முகம்மது மட்டும் தான் இஸ்லாமியர். பெரும்பாலோர் யாழ்ப்பாணத்தமிழர்கள்.