கலாநிதி எம்.எம்.ஜெய்சீலன், திறனாய்வாளர் எஸ்.கேசவன் ஆகியோரின் இலங்கைத் தமிழ்க் கவிதையின் முன்னோடிகள் பற்றிய கருத்துகள் பற்றி.... வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 20 கவிதைகளை உள்ளடக்கிய தொகுதி 'எதிர்காலச்சித்தன் பாடல்' என்னும் தலைப்பில் அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது. அதனை வெளியிட்டிருப்பது பதிவுகள்.காம்.
அண்மையில் நிகழ்ந்த இலக்கியவெளி அமைப்பின் மெய்நிகர் நிகழ்வான '“நீலாவணன் குறித்து வந்த திறனாய்வுக் கட்டுரைகள்” நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி எம்.எம்.ஜெய்சீலன், திறனாய்வாளர் எஸ்.கேசவன் ஆகியோரின் உரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விடயம் என் கவனத்தை ஈர்த்தது. அதில் அவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கையின் நவீனத்தமிழ்க் கவிதையின் முன்னோடிகளாக மூவரை குறிப்பிட்டிருந்தார்கள். கவிஞர்களான மஹாகவி, இ.முருகையன் மற்றும் நீலாவணன் ஆகியோரே அவர்கள். ஒரு தவறான கூற்று. இதற்குக் காரணம் இவர்கள் இம்முடிவுக்கு வர இவர்கள் தம் தேடலை நம்பியிருக்காமல் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், எழுத்தாளர் அ.யேசுராசா மற்றும் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் ஆகியோரின் சிந்தனைகளே இம்முடிவுக்கு வரக் காரணமாகவிருந்ததுதான் எனத் தமது உரைகளில் இவர்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றார்கள்.
நுஃமான், அ.யேசுராசா மற்றும் குழந்தை சண்முகலிங்கன் நிச்சயம் இம்மூவரையும் இலங்கையின் நவீனத்தமிழ்க் கவிதையின் முன்னோடிகளாகக் குறிப்பிட்டிருக்கமாட்டார்கள் என்று நான் கருதுகின்றேன். ஆனால் நிச்சயம் முக்கியமான கவிஞர்களாக இவர்களை இனங்கண்டு திறனாய்வுக் கட்டுரைகள் பலர் எழுதியிருக்கின்றார்கள். இலங்கையின் நவீனத் தமிழ்க்கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக நான் நிச்சயம் கவீந்திரனைக் (அ.ந.கந்தசாமி) குறிப்பிடுவேன்.