சேரனின் “காஞ்சி” கவிதைத் திரட்டு - ஒரு சிறிய கண்ணோட்டம்! - க. நவம் -
மிக நீண்டகால வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்க் கவிதை மரபில், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர், பாரதி. தமிழுக்குக் கிடைத்த அரும்பெருஞ் சொத்து என்பதை தமிழினம் உணரத்தவறியிருந்த காலத்தினைக் கடந்து, மறைந்துபோன பாரதியை, கற்றோரும் மற்றோரும் இனங்காணக்கூடிய வகையில், சரிவர அறிமுகம் செய்தவர்களில், ஈழத்து அறிஞர்கள் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் சுவாமி விபுலானந்த அடிகள்; மற்றவர் பேராசிரியர் கைலாசபதி.
தமிழ்க் கவிதை இலக்கியம் நவீன தமிழ்க் கவிதை எனும் வடிவத்தினைக் கண்டடைந்த போது, அதன் பிதாமகராக இன்றும் நன்றியோடு நினைவுகூரப்படுபவர், திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட, இன்னொரு ஈழத்தவரான ’பிரமிள்’ எனப்படும் அரூப் தர்மு சிவராமு (தருமலிங்கம் சிவராமலிங்கம்).
தமிழ்ப் புதுக் கவிதையினை, ஈழத்தில் பிறிதொரு தளத்தில் நின்று, பரிசோதித்து, வெற்றி கண்டவர், உருத்திரமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட மஹாகவி. இவரது வழிநடந்து, கவிதை படைத்து, ஈழத் தமிழ்ப் புதுக்கவிதை மரபின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களில் சண்முகம் சிவலிங்கம், நுஃமான், வில்வரத்தினம் ஆகியோர் முக்கியமானவர்கள்.
இன்று, சேரன், ஜெயபாலன் உட்பட, எண்ணிறந்த நவீன தமிழ்க் கவிஞர்கள் பலரும் ஈழத்திலும் சரி, புலம்பெயர் தேசங்களிலும்சரி காத்திரமான ஒரு நவீன தமிழ்க் கவிஞர் பரம்பரையினராகத் தோற்றம் பெறுவதற்கு, இவர்கள் காரணர்களாக அமைந்திருந்தனர் எனத் துணிந்து கூறலாம்.