அஞ்சலி: பால்ய பருவத்து நண்பர் மெளலி! - வ.ந.கிரிதரன் -
வவுனியா மகாவித்தியாலயத்தில் என் பால்ய பருவம் கழிந்தபோது ,ஏழாம் வகுப்பில் என்னுடன் படித்த மாணவர்களில் என்னுடன் நன்கு பழகியவர்களை முகநூல் மீண்டும் என்னுடன் இணைத்துள்ளது. விக்கி (எழுத்தாளர் ஶ்ரீராம் விக்னேஸ்) , திருநாவுக்கரசன் (Thirunavukkarasan Sittampalam) , சண்முகராஜா இவர்களெல்லாரும் இன்று என்னுடன் முகநூலிலுள்ளார்கள். இந்நிலையில் நேற்று திருநாவுக்கரசன் பதிந்திருந்த அஞ்சலிச் செய்தியொன்று என் கவனத்தைக் கவர்ந்தது. அது ஏழாம் வகுப்பில் எம்முடன் வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்த நண்பர் மெளலியின் மறைவைப் பற்றியது. மெளலீஸ்வரன் என்பது முழுப்பெயராக இருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். ஶ்ரீமுருகன் திரையரங்குக்கு அருகிலிருந்த வீதியில் இவரது இல்லமிருந்தது நினைவுக்கு வருகின்றது. சில சமயங்களில் இவருடன் ஶ்ரீ மூருகன் திரையரங்கில் பின் பகுதியில் எரிந்த நிலையில் எறியப்பட்டிருக்கும் திரைப்பட ஃபிலிம் சுருளின் துண்டுகளைத் தேடித்திரிந்ததும் நினைவுக்கு வருகின்றது.
இவரை நினைக்கையில் இவரது சிரித்த முகத்துடன் கூடிய தோற்றம் நினைவுக்கு வருகின்றது. வவுனியா மகா வித்தியாலயத்தை வீட்டு நீங்கிய பின்னர் இவரை இதுவரை நான் சந்தித்ததில்லை. ஆனால் இவரது நினைவு அழியாமல் இருக்கும் வகையில் என்னிடமொரு நினைவுச் சின்னம் இன்னுமுண்டு. அது இவருடன் நானும் , தம்பியும் இன்னுமொரு நண்பர் நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த பேரின்பராசாவும் சேர்ந்து எடுத்த புகைப்படம்தான். அக்காலகட்டத்தை நினைவு படுத்தும் வகையில் தற்போது என்னிடமுள்ள ஒரேயொரு நினைவுச்சின்னம் இதுதான். இப்புகைப்படம் எடுத்தது தற்செயலானது. எட்டாம் வகுப்பிலிருந்து நான் யாழ் இந்துக்கல்லூரிக்குச் செல்லும் திட்டத்தில் இருந்ததால், தற்செயலாலத் தீர்மானித்து இப்புகைபபடத்தை ஶ்ரீ முருகன் திரையரங்குக்கு முன்பாக அமைந்திருந்த அஜந்தா ஸ்டுடியோவில் எடுத்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன்.