இலண்டன் ஊடாகக் கங்காரு தேசம் – 2 - ஶ்ரீரஞ்சனி -
இம்முறை லண்டன் போக ஆயத்தமானபோது, சந்திக்கவேண்டுமென நான் விரும்பியவர்களில் கெளரி பரா முக்கியமான ஒருவராக இருந்தா. 2019இல் லண்டனில் நிகழ்ந்த ‘உதிர்தலில்லை இனி’ என்ற எனது நூல் அறிமுகத்தின்போது கெளரியை ஒரு தடவை சந்தித்திருந்தாலும்கூட, அவவுடன் உரையாடியிருக்கவில்லை. அந்தச் சந்திப்புக்குப் பின்னர்தான், நிறைந்த அர்த்தங்களுடனும் வித்தியாசமான பார்வையிலும் அவ செய்யும் பக்கச்சார்பற்ற நூல் விமர்சனங்களைக் கேட்கக் கிடைத்திருந்தது. அதனால் கவரப்பட்டிருந்த எனக்கு, 'ஒன்றே வேறே' என்ற என் சிறுகதைத் தொகுதி பற்றிய அவவின் கருத்தை அறிய வேண்டுமென்ற அவா ஏற்பட்டிருந்தது.
மச்சாளின் மகள் சூட்டா வீட்டில் சாப்பாட்டின் பின்னர் ஆறஅமரக் கதைத்துக்கொண்டிருந்தபோதே, அவவுக்கு அண்மையில் கெளரி பரா வசிப்பதாக அறிந்தேன். உடனே, கெளரியைச் சந்திக்கும் என் ஆவலைப் பூர்த்திசெய்வதற்கான ஒரு வழியைச் சூட்டா கண்டுபிடித்தா. இருவரினதும் வீடுகளுக்கு இடையிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் என்னைக் கொண்டுபோய் விட்டுவிட்டு, சூட்டாவும் திவ்வியாவும் அங்கு காத்திருந்தனர். சூடான கோப்பியுடனும் ருசியான சிற்றுண்டியுடனும், பல நாட்கள் பழகியவர்கள்போல மிக இயல்பாக நாங்கள் இருவரும் பேசினோம், சிரித்தோம், மகிழ்ந்தோம். திவ்வியாவையும் சூட்டாவையும் அதிக நேரம் காத்திருக்கவைக்க விரும்பாததால், நீண்ட நேரத்தைச் செலவழிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் விடைபெற வேண்டியிருந்தது.