இலங்கைத் தமிழர் அரசியல்: வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மூன்று அவதானிப்புகள் - ஜோதிகுமார் -
I
கீழே காணக்கிட்டும், மூன்று அவதானிப்புகள், ஓரளவில், வரலாற்று முக்கியத்துவம் கொண்டன. ‘வீரசேகரியின்’ பத்தி எழுத்தாளர் ‘கபில்’ பின்வருமாறு தெரிவித்திருந்தார்:
“அண்மை காலத்தில் தமிழ் தேசிய அரசியலின் செல்நெறி குறித்து, தமிழ் மக்கள் ஆழமான அதிருப்திகளையும் வெறுப்பையும் கொண்டிருந்தனர்…. தமிழ் கட்சிகள் தங்களுக்கிடையில் முட்டிக் கொண்டு வெளியிட்ட கருத்துக்களால், தமிழ் மக்கள் சோர்வடைந்து இருக்கின்றார்கள்….” (வீரகேசரி : 08.10.2023)
இவ் அவதானிப்புக்கு சமதையாக, அரவிந்தன் எனும் போராளி, இரு கிழமைகளுக்கு முன்பு தனது நீண்ட பேட்டி ஒன்றினை வழங்கும் போது குறிப்பிட்டிருந்தார் : “நாம் முட்டாள் சமூகமாக வழிநடத்தப்பட்டு கொண்டிருக்கின்றோம் - முட்டாள் தனமாக வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்”. (YouTube பேட்டி :- 30.09.2023)
“தற்சமயம் , தமிழ் மக்களுக்கு தலைமை இல்லை. கூட்டு தலைமைதாணும் கிடையாது. மேய்ப்பவரற்ற மந்தைகள் போலிருக்கின்றார்கள்”. (திபாகரன்: 15.10.2023:தமிழ்வின்)
மேற்படி மூன்று கூற்றுக்களிலும், மூவரதும் வேதனைகள் பிண்ணிப்படர்வதாக உள்ளது வெளிப்படை.
இவ் அவதானிப்புகளுக்கு தளம் அமைப்பது போல், பின்வரும் இரு செய்திகள் அண்மையில் வெளியாகி இருந்தன.
‘தினக்குரலின்’ தலைப்பு செய்தி பின்வருமாறு குறித்தது: “09 பேர் கொண்ட விசேட நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு வரைபில், 13வது திருத்தச் சட்டம் உள்ளடக்கப்பட வில்லை” (ஞாயிறு தினக்குரல் : 15.10.2023)