சங்க இலக்கியங்களில் சிறுதானியங்கள் - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி,சென்னை- 42. -
முன்னுரை
மக்களின் வாழ்வாதரமாக அமைவதும் முதன்மை பெறுவதும் உணவாகும். உணவு வகைகளுள் தானியங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. இதில் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருப்பது சிறுதானியங்கள் ஆகும். சிறுதானிய வகைகளில் மிகவும் பழமை வாய்ந்தவையாக கேழ்வரகு, சாமை, தினை, கம்பு, சோளம். வரகு குதிரைவாலி போன்றவை அடங்கியுள்ளன. சிறுதானியங்களை சங்ககால மக்கள் மிகுதியாக பயன்படுத்தியுள்ளன. அவர்களைப் போல் இன்றையக் காலக்கட்ட மக்களும் மிகுதியாக பயன்படுத்தி வருகின்றன, சிறுதானியங்கள் சங்ககால மக்கள் பயன்படுத்திய உணவு வகைகளில் பெரும்பங்கு வகித்துள்ளன என்பதை சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்துரைத்துள்ளதை காணமுடிகின்றது. அது மட்டுமின்றி நீதி இலக்கியமான திருக்குறளில் பல்வேறு குறட்பாக்களில் 'தினை' என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளதையும் பார்க்கமுடிகிறது. எனவே. சங்ககாலம் முதல் சிறுதானியங்களை மக்கள் பயன்படுத்தினர் என்பதையும் அறியமுடிகிறது.
சங்க இலக்கியங்களில் சிறுதானியங்கள்
சங்ககால மக்கள் சிறுதானியங்களைச் சோறாக அவித்தும், தின்பண்டமாகவும், மாவாக இடித்து இனிப்பு சேர்த்தும் உண்டுள்ளனர். தினையரிசிச் சோற்றை நெய்யில் பொரித்த இறைச்சியுடன் சேர்த்து உணவாக உண்டனர் என்பதை,
பருஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேலையொடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர் (மலைபடு. 168-169)
என மலைபடுகடாம் பாடல் வரிகளின் மூலம் அறியமுடிகிறது.
ஆடு, மாடுகளை மேய்த்தல் தொழிற்புரியும் ஆயர்குலப் பெண்கள் மோர், நெய் ஆகியவற்றை விற்று, பின் கடும்பசியுடன் தன் வீட்டை அடைவாள். அவள் தினையால் ஆக்கிய சோற்றைப் பாலுடன் சேர்த்து உண்பாள் என்பதை பெரும்பாணாற்றுப்படை (பெரும்பாண்.100-103) உணர்த்துகின்றது.