கம்பராமாயணத்தில் சிரஞ்சீவிகள் குறித்த பதிவுகள்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061-
முன்னுரைசிரஞ்சீவி என்றால் சாகா வரம் பெற்றவர்கள் என்று பொருள். பூமியில் பிறந்த அனைத்து உயிர்களும் இறந்துவிடும் என்பது நியதி. ஆனால் சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்களுக்கு இறப்பு என்பது கிடையாது. சிரஞ்சீவி என்பது சிலருக்கு வரமாகவும், சிலருக்கு சாபமாகவும் கிடைக்கின்றது என்பதை இலக்கியங்களின் வழி நாம் அறிந்து கொள்ள முடிகிறது. கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ள சிரஞ்சீவிகள் குறித்து இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.
கம்பராமாயணத்தில் சிரஞ்சீவிகள்
மகாபலி சக்கரவர்த்தி, அனுமன், வீடணன், பரசுராமர், பிரகலாதன் ஆகியோர் கம்பராமாயணத்தில் சிரஞ்சீவிகள் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
1.மகாபலி சக்கரவர்த்தி
கம்பராமாயணத்தில் மகாபலி சக்கரவர்த்தி குறித்த பதிவுகள் பாலகாண்டம் வேள்விப் படலத்தில் காணப்படுகிறது. வேள்வியைக் காக்கவும், தாடகையை வதம் செய்யவும் விசுவாமித்திரர், இராமலக்ஷ்மணர்களை அழைத்துச் சென்ற போது அவரே, மகாபலி சக்கரவர்த்தி குறித்து பேசுகிறார். அசுர அரசன் மகாபலி விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் வென்று தன்வயப்படுத்திக் கொண்டான். வேள்விகள் செய்து தானம் செய்ய முடிவு செய்தான். தேவர்கள் திருமாலை வணங்கி ’கொடியவனான மகாபலியின் கொடுஞ்செயலை ஒழித்திடுக’ என்று யாசித்தனர். திருமாலும் அவர்களைக் காக்க வேண்டி காசிப முனிவருக்கும், அதிதிக்கும் ஒரு குழந்தையாக பெரிய ஆலமரம் முழுவதும் அடங்கியுள்ள சிறிய ஆலம் விதையைப் போல, மிகக் குறுகிய வடிவத்தோடு அவதரித்தார். மகாபலிடம் சென்று மூன்றடி மண் தானமாகக் கேட்டார். மகாபலியும் நீர் வார்த்து மூன்று அடி மண்ணைத் தர, வாமன அவதார திருமால், விஸ்வரூபம் எடுத்து ஒரு அடியில் பூமி முழுவதையும், மற்றொரு அடியில் வானுலகம் முழுவதையும் அளந்தார். மூன்றாவது அடியை எங்கு வைக்க என்ற போது, மகாபலி ஆணவம் அழிந்து தன் தலை மேல் வைக்க வேண்டினார். பாதாள உலகின் மன்னன் ஆனார் மகாபலி சக்கரவர்த்தி. இன்னும் அங்கேயே சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார்.