- பதிவுகளில் (ஜூன் 2004 ) தான்யா கவிஞர் மைதிலியின் 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' என்னும் தொகுப்பை விமர்சித்துக் கட்டுரையொன்றை 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' நூலை முன் வைத்து... ' என்னும் தலைப்பில் எழுதியிருந்தார். இது பெரியதொரு விவாதத்தைக் கிளப்பியது. விவாதத்தில் சூடு பறந்தது. விவாதத்தில் செல்வி .வ. உருத்திரா (மட்டக்களப்பு, இலங்கை) , எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் , எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன், எழுத்தாளர் அநந்திதா (வினோதினி) - யாழ்ப்பாணம், எழுத்தாளர் நளாயினி தாமரைச்செல்வன், எழுத்தாளர் உமையாள் ஆகியோர் பங்குபற்றினர். விவாத்ததைத் தொடக்கி வைத்த கட்டுரையிது. ஏனைய கட்டுரைகளும் தொடர்ந்து பிரசுரமாகும். -
எதிர்வினைகளின் விபரங்கள் வருமாறு:
1. தான்யாவின் கட்டுரை தொடர்பான சில கருத்துக்கள்! - செல்வி .வ. உருத்திரா (மட்டக்களப்பு, இலங்கை) -
2. செல்வி உருத்திராவின் மறுபெயர் சித்ரலேகா மெளனகுருவா? -தான்யா-
3. Regarding dhanya's articles on women who write poetry! - Latha Ramakrishnan -
4. லதா ராமகிருஷ்ணன் கட்டுரை தொடர்பாக.... அநந்திதா (வினோதினி) - யாழ்ப்பாணம்.
5. In Response to Latha Ramakrishnan... - Nadchaththiran Chevinthianne
6. ஒரு பெண்ணின் எழுதுகோலுக்குப் பின்...!!!!!? - நளாயினி தாமரைச்செல்வன் -
7 . ஆண்களின் வன்முறை! - உமையாள் -
8. Being A Part-Time Agent of Male Chauvenism is Better Than Being A Full-Time Pseudo-Feminist! - Latha Ramakrishnan
'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' நூலை முன் வைத்து... - தான்யா -
இன்று பெண்மொழி, பெண்களின் எழுத்து என்பன பரவலாகப் பேசப்படுகிறது. அவை குறித்த சர்ச்சைகளும், விவாதங்களும் பரவலாக இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் மைதிலியின் 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' என்ற நூல் வெளிவந்திருக்கிறது. சல்மாவின் 'ஒரு மாலையும் இன்னொரு மாலையும்' மாலதி மைத்ரியின் 'சங்கராபரணி' மற்றும் குட்டிரேவதியின் 'முலைகள்' தொகுப்பைத் தொடர்ந்து பெண்களின் வெளிப்படையான எழுத்துத் தொடர்பாய் சர்ச்சைகள் வெகுசன ஊடகங்களிலும் சிற்றிதழ்களிலும் இடம்பெற்று வருகிறது. அடக்குமுறை சார்ந்த வாழ்வின் வலியைச் சொல்லும் சல்மாவின் 'ஒப்பந்தம்' என்ற கவிதையில் கூட
'எல்லா அறிதல்களுடனும்
விரிகிறதென் யோனி'
என்ற இறுதி வரிகளையே பத்திரிகைகளில் எடுத்துப் போட்டிருந்தார்கள். அதனூடாகச் சர்ச்சையில் குளிர்காயும் ஒரு வியாபாரத் தன்மைதான் தென்படுகிறது. 'காமத்துப்பால் கவிதைகள்' என்ற தலைப்பில் இந்தியா ருடே எடுத்துப் போட்டிருக்கிறது. இவற்றிலெல்லாம் மிகுந்த அக்கறையுடன் ஊடகங்கள் செயற்ப்பட்டு வருகின்றன. 'முலைகள்' போன்ற பெண்களின் தொகுப்புக்களுக்கான விமர்சனங்களைப் பார்க்கையில், முலைகள் யோனி போன்றவைகள் ஆண்களுக்குச் சொந்தமானது போலவும் அவர்கள்தான் அதைப்பற்றி எழுத முடியும் என்பது போலவும் இருக்கிறது. சமகால சூழல் இப்படியிருக்க, ஈழத்தில், தொண்ணூறுகளிலேயே வெளிப்படைத் தன்மை கொண்ட கவிதைகளை மைதிலி எழுதியுள்ளார்.