எவாலின் ரீட் , Evelyn Reed  (1905 - 1979)

எவாலின் ரீட் ஓர் அமெரிக்க கம்யூனிஸ்ட் மற்றும் பெண்ணியவாதி. 1940 ஜனவரி மாதத்தில் எவாலின் ரீட் நாடு கடத்தப்பட்ட ருஷ்யப்புரட்சியாளர் லியான் ட்ராட்ஸ்கி, அவருடைய மனைவி நடாலியா செடோவா இருவரையும் சந்திக்க மெக்சிக்கோவுக்குச் சென்றார். லியானின் இல்லத்தில் ரீட் அமெரிக்க ட்ராட்ஸ்கியின் தலைவரும் சோஷலிசத் தொழிலாளர் கட்சியின் தலைவருமான ஜேம்ஸ்.பி.கேனன் அவர்களைச் சந்தித்தார். அவ்வாண்டே ரீட் சோஷலிசத் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். அதன் பின் அவர் இறக்கும் வரை அக்கட்சியில் முன்னணித் தொண்டராகப் பணியாற்றினார். 1960-70 களில் பெண்விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஆழ்ந்து ஈடுபட்ட ரீட் பெண் கருக்கலைப்பு இயக்கக் கூட்டணியில் உறுப்பினராக இருந்தார். இக்காலகட்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், ஐயர்லாந்து, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் ஆகிய இடங்களில் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தார் . சொற்பொழிவாற்றினார். ஃப்ரெட்ரிக் ஏங்கெல்ஸ், அலெக்சாண்டிரா கோலண்டை ஆகியோரின் பெண், குடும்பம் சார்ந்த ஆய்வுகளால் ஈர்க்கப்பட்டு மார்க்சியப்பெண்ணியம், பெண்ணொடுக்குமுறை, பெண் விடுதலை ஆகியவற்றை மையமாகக் கொண்டு பல புத்தகங்களை எழுதினார்.

பெண்களின் விடுதலை எதிர்கொள்ளும் சிக்கல்கள், தாய்வழிக் குலமுறையிலிருந்து தந்தை வழிக்குடும்ப முறையை நோக்கிய பெண் பரிணாமவளர்ச்சி ஆகிய நூல்களும் ஜோசஃப் ஹான்சன், மேரி –(எ) வாட்டர் ஆகியோருடன் இணைந்து எழுதிய பெண்ணின் இலக்கு பெண்ணுயிரியா ? அழகுப்பொருட்கள், நாகரிகம், பெண்ணுழைப்புச் சுரண்டல் (பெண்மீதான சுரண்டல்) என்ற நூலும் ரீடினுடைய குறிப்பிடத்தக்க நூல்களாகும். 1972 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் அதிபர் தேர்தலில் இவர் சோஷலிசத் தொழிலாளர் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இண்டியா, நியூயார்க் , விஸ்காசின் ஆகிய மாநிலங்களில் 13,878 ஓட்டுகளைப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


பெண் ஒடுக்குமுறைக்கு மூலகாரணம் எது? என்ற வினாவுக்கு விடை தேடி பெண்கள் சாதியை அல்லது வர்க்கத்தை உருவாக்கியதே ஆணைப் பெண்ணுக்கு எதிரியாக்கியது, முதலாளித்துவம் அல்ல என்று விடை காணுவோமானால் அக்கருத்தியல் பெண் விடுதலைப்போரினைத் திசை திருப்புவதாக அமையும்.

கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட பெண்ணிய இயக்கங்களைவிடப் பெண் விடுதலைக்குப் போராடும் இன்றைய பெண்ணிய இயக்கங்கள் உயர்ந்த கருத்தியல்களை முன்வைத்துள்ளன. இன்றைய பெண்ணியவாதிகள் மார்க்சின் முதலாளித்துவம் குறித்த பகுப்பாய்வை மதிக்கிறார்கள். அதே நேரத்தில் பெண்ணொடுக்கு முறையின் மூலகாரணம் குறித்த ஏங்கெல்சின் புகழ்மிக்க விளக்கத்தினை ஏற்கிறார்கள். சமுதாயத்தினூடான குலம், குடும்ப அமைப்பு, தனியுடைமை, அரசு இவற்றின் வளர்ச்சியின் வழியாகப் பெண்ணொடுக்குமுறை ஏற்பட்டது. இன்னும் மார்க்சின் நிலைப்பாடு குறித்துத் தவறான புரிதல்களும் தவறான கருத்து விளக்கங்களும் இருக்கின்றன. இந்நிலை சில பெண்களைத் தீவிரவாதப் பெண்ணியவாதிகளாகவும் சமதர்மப் பெண்ணியவாதிகளாகவும் தங்களைக் கருதிக்கொள்ளும்படி தூண்டியிருக்கிறது. இது கருத்தியலுக்கு முரணான நிலை. குழந்தை வளர்ப்பு, பாலின வேறுபாடு போன்றவை பெண்ணை ஒடுக்கியது என்ற தொன்மைக்கட்டுருவாக்கம் அவர்களை அவ்வாறு சிந்திக்கத்தூண்டி யிருக்கிறது. ஆனால் உண்மையிலேயே பெண்ணொடுக்குமுறைக்கான காரணங்கள் வரலாற்று ரீதியானதாகவும் சமுதாய மயமாக்கப்பட்டதாகவும் இருக்கிறது. சில கருத்தியல்வாதிகள் பெண்களே குலம், சாதி அல்லது வர்க்கத்தை உருவாக்கினார்கள் என்ற கருத்தைக் கட்டமைக்கிறார்கள்.இந்த வாதத்திற்கு நான் சவால்விடுகிறேன். இந்த வரையறை மார்க்சின் கருத்துக்கு முரணானது மட்டுமல்ல; முதலாளித்துவத்தால் பெண்ணொடுக்கப்படுவதில்லை, ஆனால் பெண்ணுக்கு ஆணே முதல் எதிரி என்ற தவறான தீர்மானத்திற்கும் இட்டுச்செல்கிறது. பெண்ணின் இரண்டாம் படிநிலைக்கான காரணம் குறித்த மார்க்சின் முடிவுகளுக்கு அடிப்படை அமைத்துக்கொடுத்தவை பின்வரும் சிந்தனைகளாகும்.

முதலாவதாகப் பெண் என்பவள் எப்பொழுதும் ஒடுக்கப்பட்ட அல்லது இரண்டாம் பாலினமாக இருந்ததில்லை. மானுடவியலாளர்கள் அல்லது தொன்மை வரலாற்றறிஞர்கள் நமக்கு முரண்பட்ட கருத்துக்களைக் கூறியிருக்கின்றார்கள்.  மலைவாழ் மக்கள் கூட்டாண்மையுடன் வாழ்ந்த ஆதி சமுதாயத்தில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக வாழ்ந்தார்கள்; ஆண்களுக்குச் சமமாக அங்கீகரிக்கப்பட்டார்கள்

இரண்டாவதாகத் தாய்வழிச்சமுதாயத்தின் பொதுக்குடி மரபு வீழ்ச்சியுற்று அவ்விடம் தந்தைவழிச் சமுதாயத்தின் குடும்ப அமைப்பு, தனியுடைமை, அரசு அதிகாரம் இவற்றால் நிரப்பப்பட்டபோதே பெண்ணின் வீழ்ச்சி தற்செயலாக நடைபெற்றது.

மனிதனின் பண்பாட்டுப்படி நிலை உணவு சேகரிக்கும் வேட்டை சமுதாயத்திலிருந்து உணவுப்பொருட்களைச் சேமித்துவைக்கும் வேளாண்மை சமுதாயத்திற்கு மாறிய இடைக்காலத்திலேயே பெண்ணின் சமுதாய நிலையில் இத்தகைய நேர்மாறான மாற்றம் ஏற்பட்டிருக்கவேண்டும். ஆதி சமுதாயத்தில் பாலினங்களுக்கிடையேயான பணிப்பங்கீடு மேலும் சிக்கலான பிரிவுகளை உள்ளடகியதாக மாற்றமடைந்தது. மிகத்திறமையான பணியாளர்கள் மிகையான பொருட்களை உற்பத்தி செய்தார்கள். இதன் விளைவாக சமுதாயத்தில் பல்வேறு பிரிவுகள் உண்டாயின. விரிவுபடுத்தப்பட்ட வேளாண்மை, நீர்ப்பாசனம், கட்டமைப் புத்திட்டங்கள் , பொருட்களைச் சேகரித்தல் போன்றவற்றில் ஆண்களின் பங்களிப்பும் அதீத சொத்துக்களும் சிறிது சிறிதாக ஆணை உயர்நிலையை நோக்கிச் செலுத்தியது. ஆண்களும் தனிச்சொத்துரிமையைத் தமதாக்கினர். ஆணின் சொத்து பரம்பரை பரம்பரையாக அவனுடைய சந்ததிக்குச் செல்லத் திருமணம் என்ற நிறுவனமும் குடும்ப அமைப்பும் சட்டப்படி உரிமையை வழங்கின. ஒரு தார மணத்தில் பெண் கணவனின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தாள். அவள் வழியாகப்பிறந்த மகன்களுக்கு ஆணின் சொத்தை மரபாகப் (பரம்பரை ) பெறும் உரிமையிருந்தது.

சமூக உற்பத்தியில் ஆணின் பங்கு அதிகமானது. குடும்ப நிறுவனத்தின் வளர்ச்சியில் பெண் இல்லம் என்ற தளத்திற்குக் கடத்தப்பட்டாள். இழிவுபடுத்தப் பட்டாள். அங்கே அவளது கணவனுக்கும் குடும்பத்திற்கும் பணிசெய்யும் நிலையே அவளுக்கிருந்தது. தனியுடைமை, ஆணாதிக்கம், தந்தைத்தலைமைக் குடும்ப அமைப்பு போன்றவற்றைச் சமுதாயம் பாதுகாத்ததுடன் சட்டமுறைப்படுத்தவும் செய்தது. மேற்குறித்த கூறுகள் பிறகு ‘சமயம்’ என்ற நிறுவனத்தால் தூய்மைப் படுத்தப்பட்டது. இக்கருத்துக்களே மார்க்ஸ் முன்வைக்கும் பெண்ணொடுக் கத்திற்கான காரணங்களின் சுருக்கமாகும். பெண்ணின் இரண்டாம் படிநிலை என்பது பாலினத்தின் குறைபாட்டினால் ஏற்பட்டதல்ல. சமுதாயத்தில் ஏற்பட்ட புரட்சிகரமான மாறுதல்களே சமுதாயத்தின் சம நிலையைக் குலைத்துத் தாய்வழிச் சமுதாயம் அல்லது குலத்தை அழித்து மரபுவழிப்பட்ட தந்தைவழிச் சமுதாயம் கட்டமைக்கப்பட்டது. தந்தைவழிச் சமுதாயத்தின் தோற்றத்திலிருந்து பாரபட்சம், சமத்துவமின்மை, பாலினப்பாகுபாடு போன்றவை அடையாளப் படுத்தப்பட்டன. தந்தைவழிச் சமுதாயத்தின் வளர்ச்சியும் சமூகப் பொருளாதார அமைப்புமே வரலாற்று ரீதியிலான தாய்த்தலைமை வீழ்ச்சிக்குக் காரணமாயிருந்தது. பெண் வீழ்ச்சியடைந்த அதே நேரத்தில் ஆணுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் பெண் விடுதலைக்காக முன்வைக்கப்பட்ட சமூக அரசியல் தீர்வையும் அறிந்துகொள்ளாமல் பெண்வீழ்ச்சியை முழுமையாகப்புரிந்துகொள்ள இயலாது.

தாய்வழிச் சமுதாயத்தையும் அதன் சமூகப்பொருளாதார உறவுமுறைகளையும் சிதைத்த தந்தைவழிச் சமுதாயமானது பழங்குடியினச் சமுதாயத்தில் சகோதர உறவுமுறையைத் (இரத்த உறவுமுறையைத்) தகர்த்தது என்பதைப் பொதுவாகக் கவனிக்கத் தவறுகிறார்கள். பெண்களின் தோல்வி கடும் உழைப்பாளி அடிமைகளாயிருந்த ஆண் இனத்தைத் தலைமைத்தன்மையை நோக்கி முன்னேறச்செய்தது. மார்கன், ஏங்கெல்ஸ் முதலானோர் விளக்கிய தொன்மைச் சமுதாயத்தின் அடிப்படை அமைப்பை ஆய்வுசெய்தோமானால் மேற்குறித்த பொருளின் வளர்ச்சி நிலையை நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். குலக்குழுச் சமுதாயத்தில் பெண்ணின் ‘சகோதரி’ நிலையும் ஆணின் ‘சகோதர’ நிலையும் நிலை பெற்றிருந்தது. தாய்வழிச் சமுதாயத்தின் சாறான ‘சகோதரி’த்துவம்’ தாய்வழிச் சமுதாயத்தின் மொத்தப்பண்பைக் குறிப்பிடுவதாயிருக்கிறது. பெண்கள் சகோதரிகளாக ஒன்றிணைந்து பணிபுரிந்தனர். அவர்களுடைய சமுதாயப் பணியாளர்களால் சமுதாயம் நிலை பெற்றது.அவர்கள் குழந்தைகளையும் பொதுவாகவே பெற்றார்கள். தாயொருத்தி தன்னுடைய குழந்தைக்கும் சகோதரியின் குலம் சார்ந்த குழந்தைக்கும் இடையில் தனித்த வேறுபாடு காட்டுவதில்லை. அனைத்துக் குழந்தைக்கும் வயது முதிர்ந்த பெண்கள் அனைவரும் தாயே. வேறு சொற்களில் கூறவேண்டுமானால் சமுதாயத்தில் குழந்தைகளை அனைவருக்கும் பொதுவானவர்களாகப் பார்ப்பது என்ற நிலையுடன் சமுதாயத்தின் உற்பத்தியும் சொத்துடைமையும் சேர்ந்து கொண்டது. அதாவது சமுதாய உற்பத்தியும் சொத்தும் அனைவருக்கும் பொது என்ற நிலை. சகோதரித்துவத்தின் எதிர் இணை என்பது சகோதரத்துவம் என்பதாகும். சகோதரித்துவ சமுதாயத்தில் இருந்த பெண்களுக்குக் கட்டமைக்கப்பட்ட அதே நிலையே சகோதரர்களுக்கும் (ஆண்களுக்கும்) இருந்தது.

பழங்குடியின சமுதாயத்தில் இருந்த ஒவ்வொரு குலமும் அல்லது குருதியினக் குலமும் ஆணின் நிலையிலிருந்து சகோதரர் குலமாகவும் பெண்ணை மைய்யப்படுத்தும்போது சகோதரி குலமாக அல்லது தாய்க்குலமாக அடையாளப் படுத்தப்பட்டது. தாய்வழிச் சமுதாயத்தின் சகோதரர் குலத்தின் இரண்டு பாலினங்களும் வாழ்வின் தேவையைப் பூர்த்திசெய்வதை மட்டும் தமது நோக்க மாகக்கொண்டிருக்கவில்லை. குழந்தைகளைப் பாதுகாப்பதையும் கடமையாகக் கொண்டிருந்தனர்.

இப்பண்புகளே தொன்மைப் பொதுவுடைமைச் சமுதாயத்தை வளர்த்தெடுத்தது எனலாம். தந்தையைத் தலைமையாகக் கொண்ட குடும்ப அமைப்பு உருவாவதற்கு முன் ஆணின் ‘தந்தைமை’ சமுதாய நோக்குடை யதாயிருந்தது. அது குடும்ப அமைப்பிற்குள் அடக்கப்படவில்லை. மேலும் சமூக நோக்குடைய ‘தந்தைமை’ யுடன் செயல்பட்ட ஆண் சகோதரிகளின் கணவர்கள் அல்ல. சகோதரிகளின் குலச் சகோதரர்களாயிருந்தனர். இயற்கைச் செயல் பாடுகளைக் கொண்ட தொன்மைச் சமுதாயத்தில் ஆண்களின் தந்தைமை அறியப்படாமலிருந்தது. வாரிசுகளற்ற பொதுவான குழந்தைகளையும் பொது உற்பத்தியையும் கொண்டிருந்த பொதுவுடைமைச் சமுதாயத்தில் இவ்வுண்மை தொடர்பற்றிருந்தது. குடும்ப அமைப்பினூடாகக் குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் இன்றைய சமுதாயத்தினருக்கு இம்முறை வழக்கத்திற்கு மாறானது என்றாலும் தொன்மைச் சமுதாயத்தில் குலச்சகோதரர்கள் தங்களுடைய சகோதரியின் குழந்தைகளுக்குத் தந்தைமைப் பொறுப்பேற்றிருந்தார்கள். பிற்காலத்தில் தங்களது மனைவியின் குழந்தைகளுக்கு மட்டும் தந்தையானார்கள். சகோதர – சகோதரி குலத்தில் (இரத்தஉறவுக் குடும்ப முறை) இணை சோடி வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டபோது அல்லது மார்க்கன் ஏங்கெல்ஸ் அழைத்தது போல ‘இணைக்குடும்பங்கள்’ என்ற படிநிலையை நோக்கிச் சென்றபோது அதாவது திருமண உறவு இல்லாமல் ஒரே இனத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தார்கள் .

இது எப்படியாகிலும் கணவன் மனைவிபோல இணைந்து வாழும் இம்முறை முந்தைய குழுமண முறையிலோ அல்லது பெண்ணின் உற்பத்தித் திறனிலோ பெரிய அளவில் மாறுதலை ஏற்படுத்தவில்லை. குலச்சகோதர சகோதரிகளுக்கிடையில் பாலின அடிப்படையில் ஏற்பட்டிருந்த பணிப்பங்கீடு சிறிது சிறிதாக கணவன் – மனைவிக்கிடையிலான பணிப்பங்கீடாக மாற்றமடைந்தது. பொதுவுடைமைச் சமுதாயம் வழக்கிலிருந்த போது பெண் தொடர்ந்து சமூக உற்பத்தியில் தொடர்ந்து பங்கேற்றாள். ஆண் பெண் பாலினங்களுக்கிடையிலான இயல்பான ‘சம’ நிலை எஞ்சியிருந்தது. சமுதாயத்தில் இணையுறவு தோன்றிய நிலையிலும் சமுதாயத்தின் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தனக்கான பங்களிப்பைச் செய்தார்கள். குடும்ப அமைப்பின் தொன்மை வடிவமான இணைக்குடும்பம் இன்றைய தனித்த குடும்பத்திலிருந்து நிச்சயமாக வேறுபட்டிருந்தது.

இன்றைய இரக்கமற்ற முதலாளித்துவ அமைப்பில் ஒவ்வொரு ஒவ்வொரு தனித்த குடும்பமும் தனது வாழ்வாதாரத்திற்காகப் போராட வேண்டியிருக்கிறது. புறக்காரணிகளை எதிர்நோக்க முடியாது. மனைவி கணவனைச்சார்ந்து வாழவேண்டியிருக்கிறது. குழந்தைகள் தமது வாழ்வாதாரத் திற்காகப் பெற்றோரை எதிர்நோக்குகின்றனர். கூலித் தொழிலாளர்களான பெற்றோரோ வேலை யின்மையினாலோ நோயினாலோ அல்லது மரணத்தாலோ துன்பப்பட நேரிடுகிறது. இணைக்குடும்ப முறையில் இத்தகைய சார்பு நிலையோ குடும்பப்பொருளாதார முறையோ இருந்ததில்லை. . ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்குமுரிய பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான அடிப்படைத்தேவைகளை மொத்த சமுதாயமும் அக்கறை எடுத்துக்கொண்டு நிறைவேற்றியது.

தொன்மைச் சமுதாயத்தில் பொருளை அடிப்படையாகக்கொண்ட இன்றைய சமுதாய ஒடுக்கு முறையோ இன்றைய குடும்ப அமைப்பில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளோ இல்லை. ஆண்கள் ஆதிக்க முடையவர்களாகவும் பெண்களை முரட்டுத்தனமாக நடத்துபவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற கருத்து பொதுவாக முன்வைக்கப்படுகிறது. இதற்கு முரணான கருத்துப்பதிவும் உண்டு. தாய்த்தலைமைச் சமுதாயத்தில் பெண்கள் ஆண்களின்மீது ஆதிக்கமு டையவர்களாய் இருந்தனர் என்பதே அது. இக்கருத்து சான்றாதாரத்துடன் மானுடவியலாளர்களால் முன்மொழியப்பட்டுள்ளது. தொன்மைச் சமுதாயத்தை வானளாவப் புகழவேண்டுமென்பதோ ஆதிப்பொற் காலத்திற்குத் திரும்பவேண்டுமென வாதிடுவதோ என் நோக்கமல்ல. மனித சமுதாய வளர்ச்சியில் வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலை பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருந்தது. அச்சமுதாயத்தின் வாழ்நிலை வெகு இயற்கையாக முரட்டுத்தனமாக கரடுமுரடாயிருந்தது. அப்படியிருந்த போதிலும் அன்றைய சமுதாயத்தில் ஆண் பெண் உறவு நிலை இன்றைய சமுதாயத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது என்பதையும் நாம் உணரவேண்டும்.

குல அமைப்பு முறையில் சகோதரியான பெண்ணோ சகோதரனான ஆணோ ஒருவரையொருவர் ஆதிக்கம் செய்யவோ சுரண்டவோ எவ்வித வாய்ப்பும் இல்லை. மேலும் தொன்மைச்சமுதாயத்தில் பெண் உயர்வான நிலையைக்கொண்டிருந்தாள். ஏனெனில் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்பவளாயிருந்தாள். இனப்பெருக்கம் செய்வதும் அவளே என்ற புரிதல். இந்நிலையில் அவர்கள் ஆண்களின் மீது கொடுங்கோன்மை செலுத்தவில்லை. அவர்களுடைய சமுதாயம் குலம், இனம் அல்லது பாலினம் சார்ந்த ஒடுக்குமுறையைத் தவிர்த்திருந்தது. ஏங்கல்ஸ் கூறியது போலத் தனியுடைமை, ஒருதார மணம் (ஓருவரை மணம் புரிந்து வாழ்தல்) , தந்தைவழிக் குடும்ப அமைப்பு போன்றவை வளர்ச்சியடைந்த போது ஆண் பெண் சமுதாயத்திலும் குடும்ப அமைப்பின் மீதும் சமுதாயத்திலிருந்த சில புறக்காரணிகள் செயல்பட்டு தாய் வழிச்சமுதாயத்தில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகளை அழித்தன.

கணவன் மனைவி போல இணைந்து வாழ்வது என்ற நிலையிலிருந்து மிகக்கடுமையான முறைப்படுத்தப்பட்ட ஒருதார மண முறை ஏற்பட்டது. இதன் விளைவாக மனைவியும் அவள் பெற்ற குழந்தைகளும் கணவனின் (தந்தையின்) முழுக்கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். அவரே குடும்பத்தலைவர். குடும்பத்தைச் சேர்ந்தவரின் (மனைவி, குழந்தைகள்) வாழ்க்கையை முடிவுசெய்பவர் அவராகவே இருந்தார். தங்களுடைய சகோதரி (ர) சமுதாயத்தில் அனைத்துக் குழந்தைகளையும் தமது குழந்தையாகவே நினைத்து வளர்த்து அவர்களுக்காக ஒன்றிணைந்து உழைத்த சகோதரி சமுதாயப் பெண்கள் இப்பொழுது வீட்டில் தனது எஜமானாகிய தனி ஒரு ஆணின்கீழ் வீட்டில் பணிபுரியும் பெண்ணாக மாறிப்போனாள்.

முந்தைய சமுதாயத்தில் பாலினத்தை அடிப்படையாகக்கொண்ட பணிப்பங்கீடு குடும்ப அமைப்பில் பணிப்பங்கீடுக்கு வழிவகுத்தது. பெண் சமூக உற்பத்தியிலிருந்து முற்றிலும் விலக்கப்பட்டு கணவனின் இல்லத்தில் குடும்பத்துக்காக உழைக்கும் கொத்தடிமையாக மாறினாள். ஒரு காலத்தில் சமுதாயத்திற்குக் கற்பிக்கும் ஆசிரியர் போலிருந்த பெண் இனக்குழு உருவாக்கத்தின் கீழ் ஆணின் குழந்தைகளுக்கு வழிகாட்டுபவளாகவும் ஆணின் இல்லத்தில் பிரதானப் பணிப்பெண்ணாகவும் மாறினாள். பெண்கள் குடும்ப அலகுகளாகப் பிரிந்து போனபோது குடும்பத்திலும் இல்லத்திலும் அவள் அடிமையானாள். பெண்கள் தமது செல்வாக்கையும் அதிகாரத்தையும் மேன்மையையும் இழந்தனர். சமுதாயத்தில் ஏற்பட்ட தீவிர மாற்றங்களே எதிர் பாலினங்களுக்கிடையில் பகையை ஏற்படுத்தியிருக்க வேண்டுமென்பதில் விந்தையிருக்க முடியாது.

ஏங்கல்ஸ் கூறுவதைப்போல “ஓருதார மணமுறை என்பது ஆண் மற்றும் பெண் இணக்கமின்றி வரலாற்றில் நுழைய வாய்ப்பில்லை. ஒரு தார மண முறை திருமணம் என்ற அமைப்பின் அடிப்படையாயிருந்தது என்று கூறலாம். இவ்வாறுருக்க முரணாக ஒருதார மண முறை என்பது முந்தைய சமுதாயத்தில் காணப்படாத ஒரு பாலினம் மற்றொரு பாலினத்தை அடிமைப்படுத்துதல் இரண்டு பாலினங்களுக்கிடையே பகையை ஏற்படுத்துதல் என்ற நிலைப்பாட்டைக் கொண்டதாயிருந்தது. வரலாற்றில் ஏற்பட்ட முதல் இனப்பகை ஒருதார மண முறையில் ஆண் மற்றும் அவனது மனைவிக்கிடையில் ஏற்பட்ட முரணுடன் தற்செயலாகப் பொருந்துகிறது. முதல் இன ஒடுக்குமுறை என்பதும் பெண்ணின் மீது ஆணால் நிகழ்த்தப்பட்டதாகத்தான் இருக்கிறது.

தனியுடைமைச் சமுதாயத்தின் கீழான ஒரு தார மணமுறை அமைப்பில் பெண்ணொடுக்குமுறை நிகழ்ந்த இரு படிநிலைகளுக்கிடையேயான தனித்தன்மை யை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்றைய நுகர்பொளுள் சமுதாயத்தின் குடும்ப அமைப்பில் பெண் பெற்றிருக்கும் நிலையைவிடவும் தொழிலைக் கண்டறி வதற்கு முன்னான பொதுவுடைமைச்சமுதாயத்தில் பெண் மரியாதையையும் உயர்ந்த நிலையையும் பெற்றிருந்தாள். வேளாண்மையும் தொழிலும் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும்வரை இருந்த பண்ணைக்குடும்பம்/ பொதுக்குடும்பம் என்ற பெரிய பரந்துபட்ட குடும்ப அமைப்பு உற்பத்தி அலகாக நிலைபெற்றிருந்தது. குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் அவரவர் பாலினத்திற்கும் வயதுக்கும் ஏற்ற பணிப்பங்கீடு அனுமதிக்கப்பட்டிருந்தது. குழந்தைகளும் முதியோரும் அவரவர் தகுதிக்கு ஏற்ப உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும்போது குடும்பத்தில் இருந்த பெண்ணானவள் வேளாண்மை செய்வதிலும் இல்லத்தைப் பராமரிப்பதிலும் ஈடுபட்டிருந்தாள். தொழில் வளர்ச்சியும் ஏகபோகத் தனியுடைமை யும் முதலாளித்துவமும் தனிக்குடும்பமும் ஏற்பட்டபோது இந்நிலை மாறியது.

சிறு தொழிலும் சிறு நிலங்களும் பறிக்கப்பட்ட ஆண்களின் சமுதாயம் தொழிற்சாலைகளில் தினக்கூலிகளாக மாறியபோது அவர்களுடைய வாழ் வாதாரங்களுகாக முதலாளிமார்களிடம் கொடுக்க ஆண்களிடம் அவர்களுடைய உழைப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. பொதுவுடைமைச் சமுதாயத்திலிருந்து நீக்கப்பட்ட இன்றைய கூலித்தொழிலாளியின் மனைவிகள் தமக்கும் தமது குழந்தைகளுக்குமாக முழுமையாகக் கணவனைச்சார்ந்திருக்க வேண்டியவர் களானார்கள். உடைமை பறிக்கப்பட்டு பொருளாதாரச் சார்பு நிலை எய்திய பெண்கள் இவ்விரண்டு படிநிலைகளிலேயே வீழ்ச்சியடைந்து சுயமரியாதை இழந்தவர்களானார்கள். குலமரபு சமுதாயத்தில் சமூக உற்பத்தியிலிருந்தும் சமூகத்தலைமையிலிருந்தும் நீக்கப்பட்டு அவர்களது கணவரது குடும்பத்திற்கான உற்பத்தியாளர்களாக மாற்றமடைந்தார்கள். ஆனால் தொழில்மயமான நகர வாழ்க்கை வழங்கிய தனிக்குடும்பம் கூட்டு அல்லது பொது அல்லது பண்ணைக் குடும்பத்தின் இடத்தை நிரப்பிய போது பெண் தனது இறுதிக்காலடிச் சுவட்டையும் இழந்தவளானாள். அதன் பின் பெண் இரு துயர்மிகு நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒன்று நகர்ப்புற வீட்டிலோ அல்லது அடுக்குமாடிக் கட்டிடத்திலோ இல்லத்தரசி என்ற பெயரில் தன் கணவனின் ஆதரவில் அடுத்த தலைமுறைக்கான தினக்கூலி அடிமைகளை வளர்க்கவேண்டியிருந்தது. அல்லது மிகவும் வறுமை நிலையிலிருந்தவர்கள் தொழிற்சாலைகளில் தங்களுடைய குழந்தைகளுடன் கடைநிலை ஊழியர்களாக மிகவும் இழிந்த நிலையில் பணிபுரிய வேண்டியிருந்தது.

கடந்துவந்த சமுதாயத்தில் பெண்கள் தங்களது தொழில் மற்றும் ஊதிய உயர்வுக்கான போராட்டத்தை ஆண்களுடன் இணைந்து முன்னெடுத்துச் சென்றார்கள். ஆனால் இல்லத்தரசிகளுக்கு அத்தகைய போராட்டங்களுக்கான வாய்ப்பில்லை. அவர்களுடைய துயரமான வாழ்க்கையில் கணவனிடமும் குழந்தைகளிடமும் சண்டையிடுவது மட்டுமே அவர்களுக்கு இயலக்கூடியதாய் வடிகாலாய் இருந்தது. பெண்களின் ஆதரவற்ற இச்சார்பு நிலையால் பாலினங்களுக் கிடையேயான முரண் மிகவும் வலுவடைந்தது. பெண்கள் ஆண்களின் அடிவருடி யானார்கள். பெண்ணின் மீது கட்டமைக்கப்பட்ட புனிதத்தாய் தியாகி மனப்பான்மை அர்ப்பணிப்பு உணர்வுடைய இல்லத்தரசி போன்ற பொய்மைப் புனைவுகள் முதலாளித்துவ உலகில் பெண்களின் மதிப்பீட்டை மேலும் கீழ் நிலைக்குத் தள்ளியது. வியாபாரச்சந்தையில் இல்லதரசிகள் உற்பத்தியாளர்களாக வோ இலாபமளிப்பவர்களாகவோ இல்லையெனில் முதலாளித்துவத்தைத் திறம்படச் செயல்படுத்த அவர்கள் மையம் என்ற நிலையை அடைந்திருக்கவில்லை. இந்த முதலாளித்துவ சமுதாயத்தில் இன விருத்தியாளர்கள், இல்லத்தில் பணிபுரிந்து பாதுகாப்பவர்கள், தமது குடும்பத்திற்காகப் பொருட்களை வாங்குபவர்கள் என்ற மூன்று நிலை மட்டுமே பெண் இருப்பை உறுதி செய்வதாக இருக்கிறது.

மேல்தட்டு வர்க்கப்பெண்கள் தங்களது வீட்டு வேலைக்காக ஏழைப் பெண்களை அவர்களது வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய கடும் உழைப்பிற்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அடித்தட்டுப் பெண்கள் தங்களது குடும்பத்தின் பொருட்டாக மேல்தட்டுப் பெண்களிடம் அடிமையாக வேலை செய்ய வேண்டியிருந்தது. குடும்பம் என்ற ஒரு பொறுப்பை மட்டுமல்ல இருவிதமான பொறுப்பை ஏற்றதால் இத்தகைய பெண்கள் இருவிதமான ஒடுக்கு முறைக்கும் ஆளாகியிருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த நடுத்தட்டுப் பெண்கள் கூட முதாலாளித்துவத்திற்குப் பலியாகிப் போனார்கள். தனித்த சலிப்பு மிக்க எதையும் பொருட்படுத்தாத சூழலில் இருக்கும் பெண்கள் குழந்தைகளைப் பேணிக்காத்தலில் ஈடுபடும்போது நரம்புச்சிக்கல் நோய்க்கு ஆளாகிறார்கள். குடும்பம் துன்பத்தில் உழல்கிறது. பெண்களின் சலிப்புக்கான வடிகாலாய் அமைவது முதலாளிகளின் வியாபாரப் பொருட்களே. ஆண்களை உற்பத்தியாளர்களாக்கி அவர்களது உழைப்பைச்சுரண்டும் முதலாளித்துவ சமுதாயத்தில் பெண்கள் நுகர்வோர் என்ற நிலையில் சுரண்டப்படுவது சிறிதளவுதான்.

தனிக்குடும்பத்தினை உயர்த்திப்பிடிக்க முதலாளித்துவ உலகிற்குப் பெரும் காரணங்களுண்டு. முதலாளித்துவத்தின் அனைத்துவகை வியாபாரிகளுக்கும் (வீடு விற்பவரிலிருந்து அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பவர் வரை) குடும்பம் என்பது தங்கச்சுரங்கம் போன்றது. மனித சமுதாயத்திற்கு மிக அத்யாவசியத் தேவையான போக்குவரத்து வாகன வசதிகளைப் பெரிய அளவில் செய்வதற்கு மாறாகத் தனி மனிதர்களின் தேவையை நிறைவு செய்யும் விதமாக எளிய ரக வாகனங்களை உருவாக்கும் பெரிய நிறுவனங்களால் பெருமளவில் பணம் சம்பாதிக்க இயலும். துணி துவைக்கும் இயந்திரம், குளிர் சாதனப்பெட்டி போன்ற பொருட்களின் இலக்கு சிறு வீடுகளை நோக்கியதாய் இருக்கிறது.

இரண்டாவதாக வீடு என்ற தளத்தில் தனித்து சலிப்பூட்டக்கூடிய சமையல் பணிசெய்து குழந்தை வளர்ப்பில் ஈடுபட்டிருத்தல் என்ற என்ற நிலைப்பாடானது அதிகார அமைப்பை எதிர்த்து ஒரு பெரிய சமுதாய சக்தியாக அல்லது அரசியல் சக்தியாகப் பெண்கள் ஒன்றிணைந்து உருவாதலைத் தடுக்கும் தடைக்கல்லாகிறது. தொன்மைச் சமுதாயத்தில் சுதந்திரமாகவும் வலிமையுடனும் செயல்பட்ட பெண்கள். அதற்கு நேர்மாறாகக் குடும்ப அமைப்பினுள் பெண்மைச் சிறைக்குள் அடைந்து கிடக்க வர்க்க பேதமுடைய இச்சமுதாயம் அவர்களுக்கு எதைக்கற்றுக் கொடுத்திருக்கும். பெண்களின் உடலியல் கூறோ குழந்தைப்பேறு என்பதோ பெண்பாலின் இரண்டாம் நிலைக்குக்காரணமல்ல.

தொன்மைச்சமுதாயத்தில் பெண்ணுக்குச் சுமையில்லை. ஆனால் இன்றைய தனிக்குடும்பமே சுமையானது. குடும்பத்தைப் பாதுகாக்கப் பணிக்குச்செல்லும் பெண்கள் குழந்தை வளர்ப்பு, இல்லத்திற்கு வெளியில் பணிசெய்தல் என்ற இரு கடமைகளுக்கிடையில் போராடுகிறார்கள். வர்க்கம், இனம், நாடு என்ற படி நிலைகள் மற்றொரு வர்க்கம், இனம், நாடு போன்றவற்றை ஒடுக்கும் அதே சமுதாயத்தில் பெண்ணும் உறவுகளால் ஒடுக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்படுகிறாள். மார்க்சின் இக்கருத்தியலை எதிர்த்து சில பெண்ணியவாதிகள் தம் வாதத்தை முன்வைக்கிறார்கள். அவர்கள் கூற்றுப்படி பெண்கள் சாதியை அல்லது வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். டி கிரேஸ் அட்கின்சன், ‘பெண் தனித்த வர்க்கம்’ என்கிறார். ராக்சன் டர்பார் என்பவர், ’பெண் ஒரு தனித்த சமுதாயக்குழு அல்லது சாதி’ என்கிறார். நாம் இவ்விரு கருத்தியலையும் ஆய்வு செய்து அதிலிருந்து முடிவைப்பெறலாம்.

முதலில் பெண்கள் சாதியா? சாதியப்படி நிலையே வர்க்க அமைப்புக்கு மூல வடிவாகவும் மூதாதையாகவும் இருந்தது என்பது வரலாறு. தொன்மைப் பழங்குடியி னச்சமுதாயத்தின் சிதைவுக்குப்பின் புதிய பணிப்பங்கீடு, சமூகச் செயல்பாடுகள் எனப் பிரிக்கப்பட்டபோது சமுதாயத்தில் பிரிவினை ஏற்பட்டது. உயர்வு தாழ்வு என்ற நிலைப்பாடும் பிறப்பின் அடிப்படையில் அந்தந்தச் சாதியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. வர்க்க வேறுபாட்டுடன் சாதிவேறுபாடு இரண்டறக்கலந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சாதிய அமைப்பின் வளர்ச்சி நிலை இந்தியாவைப் போன்ற ஒருசில நாடுகளில் மட்டுமே இருக்கும் நிலையில் வர்க்கப் படிநிலையின் வளர்ச்சி உலகளாவியதாக ஆக வர்க்க அமைப்பு நெடுந்தொலைவு கடக்க வேண்டியிருக்கிறது.

வர்க்கபேதமானது சாதிய அமைப்பை விழுங்கிவிடக் கூடியதாய் இருக்கிறது. இதை இந்தியாவில் நாம் தெளிவாகக் காணலாம். சுரண்டக் கூடிய சமுதாயத்தில் அந்தணர், அரசர், வேளாளர், வணிகர், தொழிலாளர்கள், கடைநிலைப்பிரிவினரான பறையர் போன்றோருக்கு அவரவர்களுக்கென்று தனித்த இடமுண்டு. கிரேக்க ரோமானிய நாகரிகங்களில் தொடங்கி மேற்கத்திய நாகரிகங்கள் அடிமைச் சமுதாயத்திலிருந்து நிலவுடைமைச் சமுதாயம், வர்க்க சமுதாயம் , முதலாளித்துவச் சமுதாயமென வளச்ச்சியடைந்தது. சாதியச் சமுதாயத்திலோ வர்க்க சமுதாயத் திலோ அல்லது இரு படிநிலைகளும் இணைந்த சமுதாயத்திலோ பெண் தனித்த சாதியாக அல்லது வர்க்கமாக ஒடுக்கப்படுகிறாள். வர்க்கப்பிரிவினை, சாதிப் பிரிவினைகளைக் கொண்ட சமுதாயத்தில் பெண்கள் அவர்களாகவே சாதிகளாகவும் வர்க்கமாகவும் பிரிந்து நிற்கிறார்கள்.

பெண் ‘பாலினம்’ அடிப்படையில் இரண்டாம் நிலையைப் பெற்றிருப்பதால் அவ்வுண்மை காரணமாகவே பெண்கள் சாதி அல்லது வர்க்கம் அடிப்படையில் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் எனக்கூற இயலாது. இன்றைய முதலாளித்துவ உலகில் பெண்கள் பல்வேறு வகைகளாகப் பிரிந்திருப்பதைப் போலப் பண்டைய இந்தியாவில் பல்வேறு சாதிகளாகப் பிளவு பட்டிருந்தார்கள். பெண்களின் சமுதாயத்தகுதி ‘சாதி’ அடிப்படையில் அடையாளப் படுத்தப்பட்டது. மேலும் பெண்ணுடைய சமுதாயத் தகுதி கணவனுடைய சொத்தைச் சார்ந்ததாகவும் இருந்தது. ஆணைப்போலப் பெண்ணுக்கும் இவ்விரு நிலைகளும் இணைய முடியும். இரு பாலினமும் ஆதிக்க சாதியாக சொத்துடையவர்களாக அதிகாரமுடை யவர்களாக அமைய முடியும். பெண்கள் அனைவரும் தனித்த சாதியாக ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறும் ராக்சன்டன்பார் இதன்வழி என்ன தெரிவிக்க விரும்புகிறார்? இவ்வாறு வரையறுப்பதால் என்ன செயல் விளைவை அவர் முன்வைக்க விரும்புகிறார். அவருடைய குறிப்புகளோ முடிவுவோ எனக்குத் தெளிவாயில்லை. ஒருவேளை பலருக்கும் இந்நிலையிருக்கலாம். எனவே அவற்றை நுட்பமாக ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது.

பொதுவாகப் பெண்கள் ஒடுக்கப்பட்ட சாதியைச்சேர்ந்தவர்கள் என்றும் அடிமைகள் என்றும் கூறப்படுவதன் உள்நோக்கம் ஆணாதிக்க உலகில் பெண்கள் இரண்டாமிடத்தைப் பெறுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவதுதான். ‘சாதி’ என்ற சொல்லாட்சி நமது மொழி வளத்தை வலுவற்றதாக்குகிறது. ஒடுக்கப்பட்ட ‘பெண்மை’யைக் குறிக்க நமது மொழியில் தனித்ததொரு சொல்லாட்சி இல்லை. ராக்ஸனே டன்பாரின் 1970 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தைய கட்டுரை இவ் வினாக்களுக்கு அவரது முந்தைய நிலைப்பாட்டை விடையாக்குகிறது. அக் கட்டுரையில் சாதிய அடிப்படையில் பெண்கள் சுரண்டப்படுவது குறித்தான இத்தகைய வரையறை புதிதல்ல என்று கூறும் அவர், ‘மார்க்சும் எங்கல்சும் பெண்பாலினத்தின் நிலைப்பாட்டை இவ்வாறே ஆய்ந்துரைத்திருக்கிறார்கள், இது எளிதான ஒன்றல்ல; மார்க்சின் ‘மூலதனத்திலோ’ , எங்கல்சின் ‘குடும்பம் தனியுடைமை அரசு இவற்றின் தோற்றம்’ என்ற நூலிலோ குறிப்பிடத்தக்க மார்க்சியவாதிகளான லெனினிலிருந்து ரோசாலக்ஸெம்பர்க் வரையிலுமே கூட ‘பெண் என்பவள் அவளது கற்பொழுக்கம், பண்பு இவற்றைச் சார்ந்து சாதி என வரையறுக்கப்படுகிறாள்’ என்கிறார் . எனவே இந்நிலை தவறாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லாட்சிக்கு எதிரான போர்க்குரல் அல்ல. இது மார்க்சியத்திலிருந்து பிறழ்ந்த போதிலும் மார்க்சியத்தின் பெயராலேயே வழங்கப்படுகிறது.

ராக்சன்டன்பாரின் கோட்பாட்டிலிருந்து நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அனைத்துப் பெண்களும் தாழ்த்தப்பட்ட சாதியையும் அனைத்து ஆண்களும் உயர்ந்த சாதியையும் சேர்ந்தவரென்றால் பெண் விடுதலையின் மையமானது சாதியப் போராயிருக்கும். இப்போர் அனைத்து ஆண்களுக்கும் எதிராக அனைத்துப் பெண்களுக்கும் விடுதலையைத் தரும். இது அவருடைய ‘ நாம் அனைவரும் அனைத்து நாடுகளும் கீழான சாதிய அமைப்பின் கீழிருக்கிறோம்’ என்ற கூற்று மேற்கூறிய கருத்தை உறுதி செய்கிறது. இவ்வாறு வற்புறுத்துவது மார்க்சியத்திற்கு முரணாயிருக்கிறது.

மார்க்சியவாதிகள் நாம் பன்னாட்டு வர்க்க அமைப்பின் கீழ் வாழ்ந்து வருகிறோம் என்றார்கள். மேலும் அவர்கள் நமக்குச் சாதியப்போர் தேவையில்லை. ஆனால் வர்க்கப் போராட்டம் தேவை. ஆண், பெண், நுகர்பொருளான பெண்ணுடன் சேர்த்து அனைத்து ஒடுக்கப்பட்ட உயிரினங்களுக் குமான விடுதலைக்குப் போராட்டம் தேவை. இந்தக் கோணத்திலான வர்க்கப்போரை ராக்சன்டன்பார் ஏற்கிறாரா? மறுக்கிறார?. அவருடைய குழப்பம் மொழியில் துல்லியமான சொல்லாட்சி தேவை என்பதைச் சுட்டுவதாயிருக்கிறது. இது எவ்வாறாயினும் கொடுமைப் படுத்தப்பட்ட பெண்கள் முதலாளித்துவத்தின் கீழானவர்கள். அவர்கள் புலம் பெயர்ந்த அடிமைகளோ நிலப்பிரபுக்களின் அடிமைகளோ அல்லது ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் உறுப்பினர்களோ அல்ல.

சமுதாயத்தில் காணப்படும் பிரிவினைகளோ அடிமைத்தன்மையோ சாதிய அமைப்பு முறைகளோ கடந்த கால வரலாற்றின் படி நிலைகளை விளக்குகின்றனவே ஒழிய நமது சமூகத்தில் பெண்ணுக்குரிய சரியான நிலையை விளக்கவில்லை. நாம் துல்லியமாகவும் அறிவியல் பூர்வமாகவும் கூறவேண்டுமென்றால் பெண், ‘ஒடுக்கப்பட்ட பாலின’மென்றே வரையறுக்கப்பட வேண்டும். மற்றொரு கோணத்தில் நோக்கினால் பெண்ணை ‘ வர்க்கம்’ என்று வரையறைப்படுத்துவது கூட சரியான நிலைப்பாடு அல்ல. மார்க்சிய சமூகவியலில் ‘வர்க்கம்’ என்பது இரு விதங்களில் வரையறுக்கப்படும். உற்பத்தியில் ‘வர்க்கத்தின்’ பங்களிப்பு சொத்துடைமையாளர் களிடையே அது கொண்டிருக்கும் தவறான பொருண்மை. முதலாளிமார்கள் நமது சமுதாயத்தில் மிக வலிமையான சக்தியைக்கொண்டிருப்பது ஏனென்றால் அவர்கள் உற்பத்திப்பொருட்களுக்குச் சொந்தம் கொண்டாடுவதுடன் அரசையும் பொருளா தாரத்தையும் கட்டுப்படுத்துபவர்களாயிருக்கிறார்கள். சொத்தை உருவாக்கும் தொழிலாளர்களுக்கு, தங்களது வாழ்வாதாரத்திற்காகத் தமது உழைப்பை முதலாளிமார்களுக்கு விற்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த இரு (முதலாளிx தொழிலாளி) வர்க்க முரண்களுக்கிடையே பெண்கள் எத்தகைய உறவை அல்லது தொடர்பை அல்லது நிலைப்பாட்டைக்கொண்டிருக்கிறார்கள்? பெண்கள் சமுதாயப் பிரமிடின் அனைத்துப் படிநிலைகளிலும் இருப்பைக் கொண்டிருக்கிறார்கள். சில பெண்கள் பொருள் அதிகமுள்ள மேல்தட்டு வர்க்கத்தினருள் ஒருவராயிருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இடைத்தட்டு வர்க்கம். பெருவாரியானவர்கள் கடைத்தட்டி லிருக்கக்கூடிய பாட்டாளி வர்க்கமாயிருக்கிறார்கள். ராக்ஃபெல்லர், மார்க்கன் , ஃபோர்டு ஆகியோர் குறிப்பிடும் சில உயர்தட்டு செல்வச்சீமாட்டிகளிலிருந்து உதவித்தொகையை நம்பி வ்றுமையில் வாழும் ஏழைப்பெண்கள் வரை பெண்கள் பல வகையாகப் பரவிக் காணப்படுகிறார்கள்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பெண்களும் ஆண்களைப்போல் பல வகைப் பாலினமாயிருக்கிறார்கள். இது பெண்களிடையே வேறுபாடு காணும் முயற்சியல்ல. ஆனால் வேறுபட்டிருப்பதை அடையாளம் காண்பதெனலாம். பொதுவாகப் பெண்பாலினம் என்ற நிலையை விட ஒரு வர்க்கத்தைச் சார்ந்தவள் என்ற நிலையில் பெண் சிறப்பாகச் செயல்படுகிறாள் என்பது தவறான கருத்து . மேல் தட்டு வர்க்கத்தைச் சார்ந்த பெண்கள் அவர்களுடைய பணக்காரக் கணவர்களின் படுக்கையறைத் துணை மட்டுமல்ல; அவர்களிருவரும் பல கடமைகளால் ஒன்றிணைக்கப் பட்டவர்களாயிருக்கிறார்கள். அவர்களிருவரும் பொருளாதார சமூக அரசியல் துணைவர்கள் தனியுடைமையைப் பாதுகாப்பதிலும் இலாபம் சம்பதிப்பதிலும் போர் முனைப்பிலும் உணர்வுச்சிந்தனையிலும் மற்றும் பிற பெண்களைச் சுரண்டுவதிலும் ஒன்றிணைகிறார்கள். இதற்கு விதிவிலக்கும் உண்டு. குறிப்பாக இளம் பெண்களிடையில். இதற்குச் சான்றாக திருமதி ஃபிராங்க்லெஸ்லி அவர்கள் 2 மில்லியன் சொத்தைப் பெண்களின் வாக்குரிமைக் காகத் தந்ததையும் மேல்தட்டுப் பெண்கள் சிலர் பெண்களின் உரிமைக்காகச் செலவிட்டதையும் இங்கே நாம் நினைவுகூரலாம்.

முதலாளித்துவத்திற்கு ஆதரவு தரும் சொத்துடைய பெண்கள் தமது தனிச்சலு கைக்கும் முதலாளித்துவத்திற்கும் சவால் விடுக்கும் புரட்சிகரப் போராட்டத்திற்கும் இத்தகைய பெருவாரியான பெண்களின் ஆதரவு எவ்வளவு தொலைவு என்பது சிந்தனைக்குரியது. பெரும்பாலானவர்கள் பெண்விடுதலை இயக்கத்தை ஏளனமாக நோக்குவதுடன் வெளிப்படையாகவோ அல்லது குறிப்பாகவோ ‘விடுதலை பெற நமக்கு என்ன தேவை?’ என்று கேட்கிறார்கள். இக்கருத்தை வலியுறுத்தத் தேவையிருக்கிறதா? நவம்பர் 1969 மற்றும் மே 1970 ஆண்டுகளில் 10,000 பெண்கள் போருக்கெதிரான தீர்மானங்களை முன்வைக்க வாஷிங்டன்னில் ஒன்று கூடினார்கள். வாழ்வா சாவா என்றிருந்த அப்பெரும் சிக்கலின் முன் கூடியிருந்த திருமதி நிக்சன் , அவரது பெண்கள், சட்டத்துறைத் தலைவரின் மனைவி திருமதி மிட்செல் போன்றோரின் பின் ராணுவ வீரர்கள் அணிவகுத்திருந்தனரா? மேலும் அந்தக் கூட்டத்தில் மற்றொரு ரஷ்யப்புரட்சிக்கான அறிகுறி இருந்ததை உணர்ந்தவர் உணரச்செய்தவர் திருமதி மிட்செல் என்பது குறிப்பிடத்தக்கது. பெண் விடுதலைக் காகப் போராடும் கறுப்பு அல்லது வெள்ளையினப் பாட்டாளி ஆண்களைவிட வங்கிப்பணியாளர்கள் உயரதிகாரிகள், தரைப்படை அதிகாரிகள், வழக்குரைஞர்கள் பெரும் தொழிலதிபர்கள் போன்றோரின் மனைவிமார்கள் பெண் விடுதலைப் போராட்டத்தில் உறுதியாக நிற்பாரா? வர்க்கப்போராட்டத்தின் இரு புறமும் ஆணும் பெண்ணும் இருக்கப் போவதில்லை. அவ்வாறு இல்லையென்ற நிலையில் முதலாளித்துவத்திற்கு எதிரான போர் ஆண் பாலினத்துக்கு எதிரான போராக மடைமாற்றம் செய்யப்படும்.

அனைத்துப் படி நிலைகளிலும் ஆணானவன் பிறப்பு முதலாகவே ஆதிக்கம் நிறைந்தவனாக வளர்க்கப்படுகிறான் என்பது மெய். ஆனால் ஆண் மட்டுமே பெண்ணின் பிரதான எதிரி என்பது மெய்யல்ல. பெண்ணின் மைய்ய எதிரியான முதலாளித்துவத்தால் ஒடுக்கப்படும் பேரெண்ணிக்கையிலான சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை ஆண்களை இது ஊடறுக்கிறது. இத்தகைய ஆண்களும் பெண் விடுதலைப் போராட்டத்தில் பிணைந்திருக்கிறார்கள். அவர்கள் நமது துணையாகக்கூடும். பெண் விடுதலைப் போராட்டத்தில் ஆணாதிக்கத்தை எதிர்த்தல் இன்றியமையாத ஒன்று என்றாலும் கூட அதையே மைய்யச் சிக்க லாக்குவது சரியான நிலைப்பாடு அல்ல. இந்நிலை பல்வேறுபட்ட வர்க்கத் தினரையும் ஒடுக்கி உற்பத்தியை மேம்படுத்தி அதனை அனுபவிக்கும் முதலாளித்துவ சமுதாயத்தின் ஆதிக்கத்தை வேடத்தை பாதுகாப்பதாக அமையும். முதலாளித்துவ சமுதாயமே ஆணாதிக்கத்தை நிலைப்படுத்துவதாகவும் இருக்கிறது. சகோதர சகோதரிக் குழுக்களைக் கொண்டிருந்த தொன்மைச் சமுதாயத்தில் ஆணாதிக்கம் உச்ச நிலையை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன வாதத்தைப்போல பாலின வாதமும் தனியுடைமையிலேயே அதன் வேர்களைக் கொண்டிருக்கிறது. பெண் விடுதலைப் போரட்டத்தில் தவறான கருத்தியல் தவறான போர் முறைக்கு இட்டுச்செல்லும்.

ரெல்ஸ்டாக்கிங்க் இயக்கத்தினரின் கொள்கை விளக்கத்தின் ஒரு கருத்து, “பெண்கள் ஒடுக்கப்பட்ட பிரிவினர்“ என்பதாக இருப்பது கூட இவ்வாறு நிகழ்ந்ததுதான். பெண்கள் ஒரு வர்க்கம் என்ற நிலையை உருவாக்கினால் ஆண்கள் அனைவரும் எதிர் வர்க்கத்தை அல்லது கொடுங் கோலாட்சி வர்க்கத்தை உருவாக்க வேண்டும். இக்கருத்திலிருந்து எந்த முடிவுக்கு வரமுடிகிறது? ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் ஆண்களே இல்லையா? இந்நிலை ஏகாதிபத்தியத்தால் சுரண்டப்படும் பாட்டாளிவர்க்க வெள்ளையர் மற்றும் அவரால் விரும்பப்படும் கறுப்பின ஆண்கள், அமெரிக்கா வாழ் மெக்ஸிகர்கள் (chicanos சிக்கனோஸ்) மற்றும் பிற சிறுபான்மையினரின் நிலையை எங்கே கொண்டு செல்லும்? சமுதாயப்புரட்சிக்கு அவர்களுக்கான மைய்ய இடமில்லையா? ஒடுக்கப்பட்ட அனைத்து இனத்தையும் இரு பாலினத்தையும் சேர்ந்த இம்மக்கள் அவர்களுடைய எதிராளியை எதிர்த்து எந்தக்கொடியுடன் எந்தப்புள்ளியில் ஒன்றிணைவார்கள்? பெண்வர்க்கத்துக்கு எதிராக இருப்பது ஆண் வர்க்கம்தான் என்ற நிலைப்பாடு உண்மையான வர்க்கப்போரை மடைமாற்றம் செய்யும். இதே சிந்தனையை அதாவது சமுதாய விடுதலைக்குப் பெண் விடுதலையே அடிப்படை என்ற ஆலோசனையை ராக்சான் டன்பாரின் கட்டுரை முன்வைகவில்லையா? சரியான புரிதலை நோக்கித் திரும்பும் வரை பெண் விடுதலை மார்க்சியக் கருத்தியலுக்கு வெகுதொலைவில் இருந்தது.

சமுதாயப்புரட்சியே முழுமையான பெண்விடுதலைக்கு அடிப்படையாவ தைப்போல உலகெங்கிலுமான பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு அதுவே அடிப்படை என்பது மார்க்சியவாதிகளின் கருத்து. தமது சொந்தக்காரணங்களை அடிப்படையாகக்கொண்டு ஏகாதிபத்தியத்தின் விலங்குகளை, தடைகளை உடைத்தெறிய முன் வந்தோரே பெண்விடுதலைக்குத் தோள் கொடுப்பவர் களாயிருக்க முடியும். அனைத்து வர்க்கங்களிலிருந்தும் அவ்வப்போது சந்தர்ப் பவாதக் கூட்டணியில் இணையும் பெண்களாலோ சாமானியப் பெண்களாலோ பெண் ஒடுக்கு முறைக்கு அடிப்படையாயிருக்கும் முதலாளித்துவத்தை வேரோடு அழிக்க முடியாது.

ஐக்கிய நாடுகளில் கோலோட்சி வரும் முதலாளித்துவ அதிகார மைய்யத்தைத் தகர்த்து தொழிலாள சமுதாயம் வேண்டி நிற்கும் சமதர்மச் சமுதாயத்தை உருவாக்க உலகளவிலான போராட்டம் தேவை. ஒடுக்கப்பட்ட பெண்களும் ஆண்களும் அதில் ஒன்றிணைய வேண்டும். முடிவாகப் பெண் விடுதலைக்கும் சமதர்மச் சமுதாயத்திற்குமான போராட்டத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியை முன்வைக்கலாம். முதலில் பெண் விடுதலை என்பது சிறிய சமுதாய மாற்றத்தால் அல்லது புரட்சியால் மட்டும் வந்துவிடாது. ஆனால் அது வரை இந்நிலையைச் சீர்படுத்தக்கூடிய போரட்டத்தைத் தள்ளிப்போட வேண்டியதில்லை. குறிப்பிடத்தக்க கருதுகோளை நோக்கி நீண்டகாலப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நமது சகோதரிகளுடன் தோளோடு தோள் சேர்ந்து போர்க்களத்தில் அணிவகுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பது இன்றைய மார்க்சியப் பெண்களின் நிலைப்பாடாகும். பெண்விடுதலைப்போரில் இப்புதிய கோணம் ஏற்கப்படும் முன்பே நமது கொள்கை இதுவாகத்தானிருந்தது.

பிற விடுதலை இயக்கங்களைப் போலவே பெண்களின் விடுதலை இயக்கமும் முதலில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் கோரிக்கைகளையே கொண்டி ருந்தது. ஆணுக்கு நிகரான வேலை வாய்ப்பு, கல்வி வாய்ப்பு, ஊதியம் , இலவசக் கருக்கலைப்பு, சமுதாயத்தால் இயக்கப்படும் அரசு குழந்தைகள் பாதுகாப்பகங்கள் போன்ற கோரிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. இத்தகைய கோரிக்கைகள் வேலைக்குச் செல்லும் பெண்களுக்குச் சில முன்னேற்றத்தைக் கொடுத்தாலும் இந்த வளர்ச்சிகளும் பெண்களின் இரண்டாம் நிலைக்கான கோணத்தை வலுபடுத்துபவையாகவே இருந்தன. சமுதாயப் புரட்சியின் வெற்றியை நோக்கிய பயணத்தில், முதலாளித்துவத்திற்கு எதிரான ஆக்ரமிப்பை நிகழ்த்த பாட்டாளி வர்க்கமும் தேவை என்ற நிலையில் பெண்கள் தங்கள் விடுதலைக்காக இதில் இணந்து போராட வேண்டியதன் தேவை என்ன? ஒடுக்கத்திற்குள்ளான சமுதாயம் மூன்றாம் உலகின் ஆண்களையும் பெண்களையும் கொண்டிருந்தாலும் பிற சக்திகள் அவர்களுக்குத் துணையாக விளங்கும் நிலையில் அவர்கள் அவர்களுடைய விடுதலைக்காகத் தலைமைப் பொறுப்பேற்க முடியும். மார்க்சியவாதிகளாயிருப்பினும் பெண்கள் அவர்களே ஒன்றிணைந்து வழிநடத்திச் சென்று சம உரிமைக்கான விடுதலைப் போரில் ஈடுபட வேண்டுமென்பதை மார்க்சியவாதிகளே ஏற்கமாட்டார்கள் என்று கூறும் அரசியல் மனோப்பான்மையை நாம் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் கறுப்பர்களும் இதையே ஏற்றுச் செயல்பட வேண்டும். அல்லது ஏன் இதையே ஏற்றுச் செயல்பட வேண்டும் என்பதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாததைப்போல ‘யார் விடுதலை பெற வேண்டுமோ அவர்களே போராட வேண்டும் என்ற ஐரிஷ் புரட்சியாளர்களின் பழமொழியை பெண் விடுதலைப் போராட்டத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம்.

பெண்கள் விடுதலைப் போர் முழக்கம் செய்ய வேண்டும். இது முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிக்கு வெற்றியைத்தரும். அதே நேரத்தில் பெண் விடுதலையையும் தரும். போராட்டத்தின் ஒரு படியாக ‘பெண்கள் அவர்களது உடற்குறைபாட்டினால் இரண்டாம் பாலினம் என்ற நிலையிலிருக்கிறார்கள்’ என மூளைச்சலவை செய்யப்பட்ட ஆண்களுக்கு நாம் சில விஷ்யங்களைக் கற்றுத்தர வேண்டும். முதலாளித்துவமே ஒடுக்குமுறையை உருவாக்குகிறது. முதலாளித் துவத்தின் அதிகாரத்தைத் தக்க வைக்கும் ஆயுதமே ‘ஆணாதிக்கம்’ என்பதை ஆண்கள் கற்க வேண்டும். சுரண்டப்படும் பாட்டாளி வர்க்கம் தன்னைச் சார்ந்திருக்கும் மனைவிக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளுடன் முரண்படுகிறார்கள். மனம் நிறை வடையாத பாட்டாளி வர்க்கம் அவர்களிருவரையும் ஒடுக்கும் அல்லது கீழ்நிலைக்குத் தள்ளும் அதிகார வர்க்கத்தை எதிர் நோக்குகிறார்கள் . பெண்கள் தனியொரு வர்க்கத்தை அல்லது சாதியை உருவாக்குவார்களேயானால் மார்க்சியர் களின் புரட்சிகரச் சிந்தனைக்கு நேர்மாறாகப் பாலினங்களுக்கிடையே முரண் ஏற்படும். பாலினங்கள் இரண்டும் முழுமையாகப் பிரிக்கப்படவில்லையென்றால் ஆணும் பெண்ணும் எப்பொழுதும் எதிரிகளாக இருக்கவேண்டியதுதான்.

மார்க்சிய வாதிகளாக நமக்கு நேர்மறையான சிந்தனையுண்டு. பெண்ணின் இரண்டாம் நிலை அல்லது தாழ்வு நிலை அவளது உடற்கூறால் ஏற்பட்டது என்ற கூற்றை நாம் மறுக்கலாம். பெண்களின் விளிம்பு நிலையும் பாலினங்களுக் கிடையேயான போரும் கடந்த சில ஆண்டுகளாகவே ஏற்பட்டது. இந்நிலை சமுதாயத்தில் ஏற்பட்ட தீவிர மாற்றத்தின் விளைவாக குடும்பம், தனிச்சொத்து, அரசு இவற்றின் தோற்றத்தால் ஏற்பட்டது. வரலாற்றின் இத்தகையதொரு கோணம் சமத்துவமற்ற நிலையை ஏற்படுத்தும் சமூகப்பொருளாதார உறவை வேருடன் அழிப்பதன் வழியாகப் பாலின சம்த்துவத்தைப் பெறவேண்டியதன் தேவையை வலியுறுத்துவதாக அமைகிறது. இத்தகையதொரு சமதர்ம சமுதாயத்தைப் பெற வேண்டியே நாம் போராடுகிறோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R