”புலம்பெயர்த் தமிழர்களின் இணையத் தமிழ்ப் பங்களிப்பு” - முனைவர் செ சு நா சந்திரசேகரன், தமிழ்ப் பேராசிரியர், வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி.
”உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து வரும், கணிப்பொறியில் வல்லமை பெற்ற தமிழர்கள் தமிழைக் கணிப்பொறி மற்றும் இணையப் பயன்பாட்டில் கொண்டு செல்ல முயன்றனர். அம்முயற்சியின் விளைவே இன்று, இணையப் பயன்பாட்டில் தமிழ், தலைசிறந்து வளர்கிறது. தமிழில் இணையதளங்கள் உருவாகப் பிறிதொரு காரணமும் முக்கியமாகும். 1983 க்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் கலவரத்தால் தமிழர்கள் உலகம் முழுக்க புலம்பெயர வேண்டிய தேவை ஏற்பட்டது. அது போன்று தமிழகத் தமிழர்களின் பணியின் பொருட்டு அயல் நாடுகளுக்குச் சென்றனர். இவ்வாறு சென்ற தமிழர்கள் தாய் நாட்டுடன் தொடர்பு கொள்ளவும், பிற நாடுகளில் வாழும் தமிழர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும், இணையத்தைப் பயன்படுத்தினார். இதில் தங்களை ஒன்றிணைக்கத் தமிழ் வளர்ச்சியில் கவனம் செலுத்தினர்” என்று இலங்கைத் தமிழர்களின் இணையப் பங்களிப்புக் குறித்துத் தமிழ் விகாஸ் பீடியா கூறுகின்றது. இது மிகச் சரியான கூற்றும், வரலாற்றுச் செய்தியும் ஆகும்.
இலங்கைத் தமிழர்கள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து சென்ற நாளிலிருந்து மொழியில் ஏற்பட்டு வரும் இலக்கிய முன்னேற்றம் மிகக் கூர்மையாகக் கவனிக்கப்பட வேண்டியதும், பதிவு செய்யப்பட வேண்டியதுமான விடயமாகும். இப்பின்னணியில் தான் தமிழ், இணையத்தில் வளர்ந்தது என்று திட்டவட்டமாகக் கூறலாம். வேறு காரணிகள் இருப்பின் இக்காரணமே மிகுத்திருக்கும் எனலாம். அந்தளவிற்கு இலங்கைத் தமிழர்கள் இணையத்தின் மூலம் தமிழை மேம்படுத்தி உள்ளனர்.