- ரொறொன்ரோ கல்விச் சபைத் தமிழ்ப் பாடநூல்கள் பற்றிய விவாதமொன்று பதிவுகள் இணைய இதழில் 2005-2006 காலப்பகுதியில் நடந்தது. அதில் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம், 'காலம்'செல்வம்' , கவிஞர் செழியன் ஆகியோர் பங்கு பற்றினர். அதில் வெளியான கட்டுரைகள்.-
பதிவுகள், மார்கழி 2005 இதழ் 72
சந்திரனைக் காட்டிய விரலைப் பார்த்து அதுவா? என்று கைவிரலைப் பார்த்த அதிபுத்திசாலியின் கதையின் வெளிப்பாடு தான், சமீபத்தில் ரொறொன்ரோ கல்விச் சபையின் தமிழ்ப் பாடநூல்கள் பற்றி பத்திரிகைகளில் நான் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினைகளாக வெளிவந்த பிதற்றல்கள். அதை எழுதியவர்களில் ஒருவர் ‘ஆவி எழுத்தாளர்’ (ghost writer). ‘முப்பது காசுக்காக’ தன் ஆன்மாவை விற்றவர். மற்றவர், குழப்பவாதி. என் கட்டுரையின் நோக்கத்தையோ அதை ஒழுங்காக வாசித்துப் புரிந்து கொள்ளாமலோ, முட்டையில் மயிர் புடுங்குகிறார். ஆனால். அவர் சொல்லியதில் நான் புரிந்து கொண்டது, அது ‘வரைவு’ என்பதால், அதில் பல நூற்றுக் கணக்கான பிழைகள் உள்ளன, அவற்றை நாம் திருத்துவோம் என்பதே. அந்த அளவுக்காவது தங்கள் பிழையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி.
மற்றது. என்னைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ எழுதும் அவதூறுகள், அநாகாரிகமான தாக்குதல்கள், ‘வன்பொருள்’ பாவிப்போம் என்ற பயமுறுத்துதல்கள், கனடிய நாட்டின் குற்றவியல் சட்ட திட்டங்களோ, பத்திரிகைச் சட்ட திட்டங்களோ மனித உரிமை மீறல் சட்டதிட்டங்களோ தெரியாத இனவாதிகளின் (racist utterances) எழுத்துக்கள். ஆன்மாவை ‘முப்பது காசுக்காக’ விற்றவருக்காகவோ, நன்னூலாரின் கடை மாணாக்கா;களுக்காகவோ, இந்தக் கட்டுரையை நான் எழுதவில்லை. இதை நான் எழுதுவது இரண்டு காரணங்களுக்காக.
ஒன்று, இங்கு தமிழ் கற்பிப்பதற்குத் தகுதியும் திறமையும் அனுபவமும் பெற்ற பல நூற்றுக்கணக்கான தமிழாசிரியர்களின் மனம் புண்படும்படியாக மடத் தமிழாசிரியர்களை என்று அவர்களை அவதூறு செய்து ஒரு அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இலங்கையிலும் மற்றும் நைஜீரியா, மாலைதீவு, எதியோப்பியா, செசல்ஸ். சாம்பியா, தென்னாபிரிக்கா, லண்டன் போன்ற பல நாடுகளிலும் கல்வி கற்பித்து நிறைய அனுபவம் பெற்றவர்கள்;, ஆசிரிய பயிற்சியை இலங்கையில் முறையாகப் பெற்று, அங்கு வகுப்பறை ஆசிரியர்களாக பல தசாப்தங்களாகக் கல்வி கற்பித்த அனுபவம் பெற்ற, இங்கும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், ரொறொன்ரோ, பீல், டர்ஹம், யோர்க் போன்ற கல்விச் சபைகளில் தங்கள் தகைமைகளினால் முறையாக நேர்முகப் பரீட்ஷைகளில் தெரிவு செய்யப்பட்டு, பெற்றோர்களாகவும் அதேவேளை நல்லாசிரியர்களாகவும் தங்கள் பணியை ஒழுங்காகவும் கடமையுணர்ச்சியுடனும் செய்து வரும் பல நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் சார்பாகத்தான் இதை எழுதுகிறேன். கல்வித் துறையில், நேற்றடித்த கச்சான் காற்றுக்கு இன்று கரையடைந்த சிப்பிகளும் சோகிகளும் அல்ல, அவர்கள்.