1
உக்ரைன் - ரஷ்ய போர்:
ஒக்டோபர் 8 இல், கிரைமியா பாலத்தை, தனது குண்டுவெடிப்பால் உக்ரைன் தகர்த்தெரிந்த முயற்சியுடன், ‘ரஷ்யா–உக்ரைன் போர்’ ஒரு புது பரிணமிப்பை எட்டிப்பிடித்தது எனலாம். இதே நாளில், ரஷ்யா, தனது போர் முனைக்கான, புதிய எளபதியையும் நியமித்தது–– Sergei Surovikin . Surovikin னின் நியமிப்புடன், ரஷ்யாவின் ‘யுத்த அணுகுமுறை’, புதிய மாற்றங்களை கண்டது. இதுவரை பாவித்திராத ஏவுகணைகளையும், ஆயுதங்களையும் ரஷ்யா பெருமளவில் பாவிக்க தொடங்கியது என்பது இரண்டாம் பட்சமே. முக்கியமானது, தன் யுத்த ‘அணுகுமுறையை’ ரஷ்யா மாற்றிக் கொண்டது என்பதே இங்கு குறிப்பிடத்தக்கது.
ஓர் ‘எல்லைக்குட்பட்ட, சிறப்பு போர் நடவடிக்கை’ என்ற எண்ணங்கள் அன்றுடன் காலாவதியாகி, இப்போது விரிய தொடங்குவது, இரு நாடுகளுக்குமிடையிலான திறந்த வெளி போர் என்ற எண்ணக்கருவை, ரஷ்யா சுவீகரித்துக்கொண்டது இத்தகர்ப்பு முயற்சியின் பின்னர்தான், என்று கூறினால் அது மிகையாகாது.
‘பெப்ரவரி நடவடிக்கை’, பேச்சுவார்த்தைக்கான ஒரு சூழலை ஏற்படுத்துவதை நோக்காக கொண்டு இயங்கியது. ஆனால் ‘இப்போதைய நடவடிக்கை’, முழு நிறைவான, உக்ரைனின், சரணடைவை, குறிக்கோளாக கொண்டு இயங்குகின்றது. இதுவே இரண்டுக்குமிடையிலான வித்தியாசமானது. இவ்வித்தியாசமானது, ரஷ்ய புதிய தளபதி Sergei Surovikin தனது நியமிப்பை ஒட்டி வெளியிட்ட நேர்காணலிலும் வெளிபடவே செய்தது.
“உக்ரைன் போருக்கு ஒரு ‘சிரிய தீர்வு’ கிடையாது (Syrian Answer) உக்ரைன் போருக்கு ஒரு ‘உக்ரைன் தீர்வே’ உண்டு, என்ற அடிப்படையில் மாத்திரமே, இப் பொறுப்பை நான் இன்று ஏற்றுள்ளேன்” என்பது அவரது கூற்றானது.
கர்ணல் Douglas Macregor போனற இராணுவப் புலனாய்வாளர்கள், இக்கூற்றின் முழு அர்த்தத்தையும் ஆழ உணர தலைப்பட்டவர்களாகவே காணப்பட்டனர். இதன் பொருள்: ‘ஒரு சிரிய அரசு, ஓர் ஈரானிய நலன், ஓர் துர்க்கிய நலன், ஓர் அமெரிக்க நலன், ஓர் குர்தீஷிய, நலன் - இவை யாவற்றையும் கவனத்தில் கொள்ள கூடியதாகவே – ஓர் ‘சிரிய தீர்வு’ – அதாவது, ஒரு ‘ரஷ்ய ராணுவ முன்னெடுப்பு’ அமையும், என்பதே Surovikin இன் ‘சிரிய தீர்வு’ என்ற இரு சொல்லில், அடங்கும் ஆழமான அர்த்தப்பாடாகும். ஆனால் இது போல அன்றி, ‘உக்ரைன் தீர்வு’ என்பது ஒரு ரஷ்ய நலனை தவிர்த்து, வேறு எந்த ஓர் நலனையும் கவனத்தில் கொள்ள சம்மதியாது, என்பதே Surovikin உள் கருத்தாக (வெளிப்படை அர்த்தமாக) அமைந்து போகின்றது.