- தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் பாவண்ணனின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, நாவல், இலக்கியத் திறனாய்வு மற்றும் மொழிபெயர்ப்பு என இவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகப்பட்டது. மொழிபெயர்ப்புக்காக இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதமியின் விருது பெற்றவர். தமிழ் இலக்கியத் தோட்டத்தின் (கனடா) 2022 ஆம் ஆண்டுக்குரிய வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது பெற்றவர். விளக்கு அமைப்பின் வாழ்நாள் சாதனைக்கான புதுமைப்பித்தன் விருது பெற்றவர். புதுச்சேரி அரசின், இலக்கியச் சிந்தனையின் சிறந்த நாவல் விருது பெற்றவர். இவை தவிர மேலும் பல இலக்கிய விருதுகளைச் சிறுகதை, கட்டுரை, குழந்தை இலக்கியத்துக்காகப் பெற்றவர். பாவண்ணன் பதிவுகள் இணைய இதழுக்கு வழங்கிய நேர்காணல் இது. -
வணக்கம் பாவண்ணன், முதலில் உங்களுக்கு இயல்விருது 2022 வாழ்நாள் இலக்கியச் சாதனைக்காகக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியும் , வாழ்த்துகளும். உங்களது இலக்கியச் செயற்பாடுகளை அனைவரும் அறிந்திருக்கின்றோம். பதிவுகள் இணைய இதழிலும் உங்களது நெடுங்கதையான 'போர்க்களம்' வெளியாகியுள்ளதை இத்தருணத்தில் நினைவு கூர்கின்றோம். முதலில் உங்கள் இளமைக்கால அனுபவங்களை, பிறந்த ஊர் போன்ற விபரங்களை அறிய ஆவலாகவுள்ளோம். அவை பற்றிய உங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
வணக்கம். உங்கள் வாழ்த்து மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மிக்க நன்றி. பதிவுகள் இணைய இதழில் எழுதிய பழைய நினைவுகளும் உங்களோடு பகிர்ந்துகொண்ட மின்னஞ்சல்களின் நினைவுகளும் பசுமையாக என் ஆழ்மனத்தில் பதிந்துள்ளன. அவற்றை ஒருபோதும் மறக்கமாட்டேன். தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த வளவனூர் என்னும் கிராமமே எனக்குச் சொந்த ஊர். விழுப்புரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையில் இக்கிராமம் இருக்கிறது. தொடக்கப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளிப்படிப்பு வரை வளவனூரிலேயே படித்தேன். பிறகு புகுமுக வகுப்பை விழுப்புரம் அரசு கல்லூரியிலும் பட்டப்படிப்பை புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியிலும் படித்தேன். என் ஆசிரியர்களே எனக்குச் சிறந்த வழிகாட்டிகளாக இருந்தார்கள். வளவனூர் மிக அழகான கிராமம். மொத்த ஊரே நாலு சதுரகிலோமீட்டருக்குள் அடங்கிவிடும். கிராமத்தைச் சுற்றியுள்ள பல சிற்றூர்களுக்கு பாசன வசதியைக் கொடுக்கும் அளவுக்கு பெரியதொரு ஏரி இருக்கிறது. தென்பெண்ணை ஆற்றோடு ஏரியை இணைக்கும் நீண்ட கால்வாயும் உண்டு. கோடைக்காலத்தில் வறண்டிருந்தாலும் மழைக்காலத்தில் ஏரி நிரம்பி வழியும். அப்போது பலவிதமான பறவைகளை ஏரியைச் சுற்றியுள்ள மரங்களில் அமர்ந்திருக்கும் அழகைப் பார்க்கமுடியும். எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் விரிவான நிலப்பரப்பைக் கொண்ட இடம். ஒரு பெரிய தோப்புக்குள் கட்டப்பட்ட வீட்டைப்போல அக்காலத்தில் இருக்கும். ஆலமரங்கள், அரசமரங்கள், நாவல் மரங்கள், இலுப்பைமரங்கள், நுணா மரங்கள் என எல்லா வகை மரங்களும் நிறைந்திருக்கும். அந்த மரங்களின் நிழலில்தான் நானும் என் நண்பர்களும் இளமைக்காலத்தில் ஆட்டமாடிக் களித்தோம். திசைக்கொரு கோவில், அழகான கிளை நூலகம், கட்சி சார்ந்த வாசக சாலைகள் எல்லாமே வளவனூரில் இருந்தன. அந்தக் கிராமத்தில் நான் கழித்த இளமைக்காலப் பொழுதுகள் இன்னும் என் நினைவில் பசுமையாகப் பதிந்துள்ளன. இன்றும் தேவைப்படும்போதெல்லாம் அந்த அனுபவங்களின் சுரங்கத்திலிருந்து ஒரு சிலவற்றை என் படைப்புகளில் பயன்படுத்திக்கொள்கிறேன்.