வாழும் சுவர்கள். - இளவாலை எஸ்.ஜெகதீசன். -
- முன்னொரு காலத்தில் பான்ஸ்கி பற்றி நான் எழுதிய கட்டுரையை மீண்டும் பார்க்க வைத்தது கிறிஸ்டியின் கட்டுரை. இலங்கையில் சுவரோவியங்கள் வீதி ஓரங்களில் உயிர் பெற்ற பொழுது இந்தக் கட்டுரையை பரணில் இருந்து தூசி தட்டி எடுத்து வீதிகளில் காதல் ஆக்கியிருந்தேன். - எஸ்.ஜெகதீசன் - -
முன்பு ஒரு காலத்தில் ஊருக்குள் நம்ப முடியாத செய்திகளை நம்ப வைத்ததில் தெருச்சித்திரங்களுக்கும் பங்கிருந்தது. பாடசாலை கழிவறைகள் தொடக்கம் தெரு மதகுகள் சிதிலமடைந்த மதிற் சுவர்கள் மயான மண்டபங்கள் போன்றன கரித்துண்டுகளாலும் பச்சிலைகளாலும் கிறுக்கர்களின் களமாகி கிறங்கடித்தன. அசுத்தமான இடங்கள் அவர்களுக்கு தடையாக இருந்ததுமில்லை. அசிங்கமான வார்த்தைகளுக்கு அவர்கள் தடை விதித்ததுமில்லை. வியப்பு – திகைப்பு – தவிப்பு – முறைப்பு – வெறுப்பு – கடுப்பு என பல உணர்வுகள் பாதிப்படைந்தவர்களிடம் மட்டுமல்ல அவற்றை பார்த்தவர்களிடமும் ஏற்பட வேண்டும் என்ற கற்பனையுடன் அந்த கிறுக்கர்கள் அநாமதேயமாகவே சிரித்தார்கள். - அந்த கிராமிய நினைவுகள் பலருக்கு இப்பொழுதும் மங்கலாக ஞாபக இடுக்குகளில் அப்பியிருக்கும்.
பரவலாக ஆசியாவில் மட்டுமே இவ்வகை கிறுக்கல்கள் வம்பை வதந்தியாக்கிட ஏனைய கண்டங்களில் அரசை விமர்சித்தும்இவிழிப்புணர்வை ஏற்படுத்தியும்இரகஸிய தகவல்களை பகிரங்கமாக்கியும்இநாட்டு நடப்புடன் கேலி பேசியும் மனங்களை வெள்ளை அடித்தன. மன்னிக்கவும் கொள்ளை அடித்தன. அதனால் அங்கெல்லாம் மறைவிடங்களை விட்டு வெளியேறி பொது இடங்களுக்கு வந்து சிரிக்கும் சந்தியாக சாட்சியளிக்கின்றன. தெருச் சித்திரம் (STREET ART) வரைகலை (GRAPHIC) கிறுக்கல்; (GRAFFITI) சுவரோவியம் (MURAL) போன்ற பல பெயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து தற்காலத்தில் வாழும் சுவர் ( LIVING WALL) என்ற புதுப் பெயர்; பொலிவு பெறுகின்றது.