ஆய்வுச் சுருக்கம்
தமக்கென்று வாழாது பிறர்க்கென்று வாழும் உண்மையானச் சான்றோர்கள் வாழ்வதால் தான் இந்த உலகம் இன்றளவும் அழியாமல் இருக்கின்றது. மனிதன் தாம் வாழும் காலங்களில் பல்வேறு ஒழுக்க நியதிகளைக் கடைபிடித்து வாழ்கின்றான். இத்தகைய ஒழுக்க நியதிகளையே பண்டையத் தமிழர் பண்பாடு என்று போற்றிப் பேணிக்காத்தனர். இது தமிழர்களுக்கு மட்டுமல்ல. இவ்வுலகத்தில் தோன்றிய மாந்தர் அனைவருக்கும் பொருந்துவனவாகும் என்பதை அனைத்து மக்களும் உணர்ந்து போற்றி ஒழுக வேண்டும். அதிலும் குடும்ப வாழ்வு என்பது சமூகத்தின் அடிப்படை அலகு. அத்தகைய குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வாழ்வியல் நெறிகளின் ஒன்றான, விட்டுக்கொடுத்தலை பின்பற்றினால் மட்டுமே அமைதி நிலவும். தனக்கென வாழாது தன் துணையின் இன்ப துன்பங்களையும் உணர்ந்து புரிதலுடன் வாழ வேண்டும். அத்தகைய வாழ்க்கை முறையே நமது பண்பாட்டின் வேர். என்பதைத் தற்காலத்தில் உள்ள நவீன இலக்கியமான கண்மணி குணசேகரன் சிறுகதையின் வழி அறியலாகிறது.

முன்னுரை
சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம். கணவனும் மனைவியும் இணைந்து வாழ்தல் என்பது அவர்கள் இருவரின் வாழ்க்கை நலனைச் சார்ந்தது மட்டுமல்ல. ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியை உள்ளடக்கியது. சமூகத்தில் அன்பும், அறனும் விளையக் அத்தகையக் குடும்பமே ஆதாரமாக திகழ்கின்றது என்பதை வள்ளுவர்,

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. 1

இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் தனிமனிதன் சமுதாயத்திற்கு இயற்ற வேண்டிய பணிகளையும் கோடிட்டுக் காட்டுகிறார். இத்தகைய இல்லற வாழ்வில் மனிதநேயத்துடன் கூடிய வாழ்வியல் முறையை கடைப்பிடித்தால் மட்டுமே குடும்பமும் சமூகமும் சிறக்கும் என்பதை மண்வாசத்தோடு தனக்கென்ற ஒரு பாதையை உருவாக்கி, மக்கள் வாழ்வில் நடைபெறும் வாழ்வியல் நெறிகளை, உண்மை நிகழ்வின் அடிப்படையில் தனது படைப்பாற்றளின் வழி பல்வேறு இலக்கியங்களை கொண்டு சித்தரித்துக் காட்டுபவர் படைப்பாளர் கண்மணி குணசேகரன். இப்படைப்பாளரின் சிறுகதைகளின் வழி மனித நேயத்திற்கான அடித்தளம் குடும்பத்திலிருந்தே இடம்பெறுகிறது. குடும்பமே மக்களைப் பிறப்பித்துச் சமுதாயத்தில் உலவவிடுகிறது என்பதை எடுத்துக்காட்டி மக்களை நெறிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்காகும்.

விட்டுக்கொடுத்து வாழ்தல்
குடும்பம் என்ற அமைப்பில் ‘விட்டுக்கொடுத்து வாழ்தல்’ என்ற பண்பு அரண் போன்றது. இத்தகைய பண்பு குடும்பத்தில் வாழும் அனைவரிடமும் நிறைந்திருக்க வேண்டும். அப்போழுது தான் முழுமையான இன்பத்தை நுகருவதற்கு ஏதுவாக இருக்கும். அதிலும் கணவன், மனைவியிடையே மிகச் சிறந்த புரிதல் இருந்தால் மட்டுமே இல்லற வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும். இல்லற வாழ்வில் தனது இணையின் கடந்த கால வாழ்க்கையின் கசப்பான நிகழ்வுகள் தெரிய வந்தாலும் அதனைப் பற்றி ஆய்ந்தறியாமல் நிகழ்காலத்தை மட்டுமே பங்கிட்டு வாழ்வதே சிறப்பானதொன்றாகும். இவ்வாறு வாழும் போது மட்டுமே, ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு நிறைந்து, இருவருக்குள்ளும் ஆன்ம பினைப்பு உருவாகி, உருகுலையாத பந்தத்தை வாழ்நாள் முழுதும் ஏற்படுத்தும். விட்டுக்கொடுப்பதால் நம் உறவை வலிமைப்படுத்துகிறோம். மற்றவர்களை உறவாக்கிக் கொள்கிறோம். மற்றவர்களின் பகைமையை விரட்டுகிறோம். விட்டுக்கொடுத்தல் விவேகம் நிறைந்தது. நமது வாழ்க்கையை வளமாக்கும் வழியுமாகும். இதனைக் குறுந்தொகைப் பாடலொன்றில் அன்றில் பறவைகளின் புனிதமான அன்பை சிறைக்குடி ஆந்தையார்,

”பூவிடைப் படினும் யாண்டு
கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக ………” 2

மகன்றில் பறவை நீரில் எப்பொழுதும் சேர்ந்தே இருக்கும். அவைகளுக்கிடையே பூ ஒன்று குறுக்கே வரும் போது சிறிது நேரப் பிரிவு நேரிடும், அத்தகைய பிரிவு ஓராண்டுகள் கடந்தாற் போன்று அப்பறவைகளுக்குத் துன்பத்தை உண்டாக்குமாம். இதுபோன்று காதல் கொண்டவராகக் கணவன் மனைவி ஒருமித்தக் கருத்துகளுடன் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாகும் என்பது இப்பறவைகளில் பிரிதல் துயர் கொண்டு அறியலாகிறது.

- எழுத்தாளர் கண்மணி குணசேகரன் -

வாழ்க்கைக்கு அன்பே மூலதனம்
இல்லறத்தை நல்லறமாக நடத்த உதவுவது அன்பு தான். அதுவே வாழ்வின் அடிப்படைக்கூறு. ஒருவர் மீது ஒருவர் அன்பு கொள்ளாமல் வாழ்வார்களேயானால் இன்பம் அங்கு நிறைந்திருக்காது. அன்பு இருந்தால் மட்டுமே ஒருவரின் பிழையை மற்றவர் பொறுத்தருள முடியும். இவற்றை அகநூல்களில் நிறைந்து காணக்கிடப்பதை அறியலாம்.

பரத்தை வீட்டிற்கு சென்றிருந்த கணவன் மேல் மனைவி மிகுந்த கோபத்ததுடன் இருந்தாள். அவனைக் கண்டவுடன் அவள் கோபம் மாறிவிட்டது. இதற்கு மூலமாக திகழ்வது அன்பே. வாழ்க தோழியே! நான் இன்று நெறி தவறியவனைக் கண்டவுடன் கோபித்துக் கொள்ள வேண்டும் என்றும், அவனை வீட்டுக்குள் நுழையாமல் தடுக்க வேண்டுமென்றும் எழுந்து சென்றேன். பின்னர் அவனுடைய பழைய அன்பை நினைத்து அவனிடம் இரக்கம் கொண்டு திரும்பிவிட்டேன்

“அம்ம வாழி தோழி யான் இன்று
அறன் இலாளன் கண்ட பொழுதில்
சினவுவென் தகைக்குவென், சென்றெனென்,
பின்நினைந்து இரங்கிப் பெயர தந்தனனே.” 3

இப்பாடல் காதலி கணவனிடம் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது. பண்டைத் தமிழ்ப் பெண்களின் சிறந்த குணத்தை இப்பாடல் மூலம் காணமுடிகிறது. இல்லற வாழ்வில் ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும் விட்டுக்கொடுக்கக் கூடிய அன்பு இருந்தால் மட்டுமே வாழ்க்கையை இன்பமுடன் வாழமுடியும் என்பது இப்பாடலின் வழி உணரலாகிறது.

இலக்கியத்தில் இல்லாளின் மாண்புகள்
இல்லறத்திலே இன்பம் தவழ வேண்டுமாயின் இல்லாள் கற்புடையவளாக இருக்க வேண்டும். தன் கணவனுக்கு தோழியாகவும், தாயாகவும், மனைவியாகவும் இருந்து உதவி செய்வதே கற்புள்ள பெண்ணின் கடமை என்று கூறுகிறது ஒரு பாடல் அதாவது,

“நல்விருந்து ஓம்பலின் நட்டாளாம்; வைகலும்
இல்புறம் செய்தலின் ஈன்றதாய் - தொல்குடியின்
மக்கள் பெறலின் மனைக்கிழத்தி, இம்மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன்.” 4

நல்ல விருந்தினரைப் பாதுகாப்பதினால் கணவனுக்கு நட்பினளாம், இல்லறத்தை வழுவாது நட்ததலால் பெற்ற தாயாவள் தன் பழமையான குடும்பம் விளங்குதற்குரிய மக்களைப் பெறுவதனால் மனையாள் இம்மூன்றும் கற்புள்;ள மனைவியின் கடமையாகும்.

பன்னீர் செல்வத்தின் பெருந்தன்மை
மல்லிகா திருமணத்திற்கு முன்பு காதலித்த சக்கரவர்த்தி இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டதும், உடல் முழுதும் நடுக்கத்துடன் தலையில் இடி விழுந்தது போன்று, தடுமாறி அமர்ந்தாள். மல்லிகாவின் தடுமாற்றத்தை அறிந்த கணவன் பன்னீர்செல்வம்,

“என்னப்பா எதாவது முக்கிய சேதியா” 5

என்று அவளின் கேட்டான். மல்லிகா சக்கரவர்த்தி இறந்த செய்தியைக் கூறியதையும், பன்னீர் செல்வத்தின் மனம் பதைபதைத்தது, குற்ற உணர்ச்சிக்கு ஆளான படியே,

“நேத்திக்கு விருத்தாசலத்துல ஒங்க பெரியப்பாவ பாத்தப்ப இந்த மாதிரி சக்கரவத்திக்கு ரொம்ப சீரியசா இருக்குதுன்னு தான் சொன்னாரு. ஓங்கிட்ட சொல்றதுக்கு மறந்துட்டன்…” 6

என்று மனைவியிடம் மன்னிப்புக் கேட்கும் தோணியில் கூறினான். ஏனெனில் மல்லிகா சக்கரவர்த்தியை காதலித்தாள் என்பது பன்னீர் செல்வத்திற்கு ஊரார் சொல்லத் தெரிந்ததால், சக்கரவர்த்தி சாகக் கிடப்பதை சொன்னால் மனைவி துன்பப்படுவாளோ என நினைத்துத் இச்செய்தியை மனைவியிடம் சொல்லாமல் விடுத்தான். ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில் இறந்து விடுவான் என்பதை அவன் அறிந்திலன். அத்தருணம் மல்லிகாவைப் பார்க்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் தலை கவிழ்ந்து நின்றான்.

மல்லிகாவின் மனவாழ்க்கை
தான் ஆசையாசையாய் காதலித்த சக்கரையை கட்டாயப்படுத்தி, பாப்பாத்தி மகள் மீனாட்சியை திருமணம் செய்து வைத்தனர். அச்செய்தி அறிந்த மல்லிகா வாழ்க்கையின் மீது எவ்வித பற்றும் இன்றி நடைபிணமாக வாழ்ந்தாள். மல்லிகாவின் மனநிலையை மாற்ற எண்ணி அவளுக்கு திருமணம் செய்து வைத்தனர். அவளின் மனம் முழுதும் காயம், ஏமாற்றம், வெறுமை போன்றவை முழுவதுமாக நிறைந்து இருந்தாலும் தன் குடும்பத்தினரின் மகிழ்வுக்காக திருமணத்தை ஏற்றுக் கொண்டாள். கைப்பிடித்த கணவனை காயப்படுத்தாமல், மனதில் இருந்தவைகளை மறைத்தவளாய், மறந்தவளாய் அவனுக்காக சமைக்க, துவைக்க, படுக்க, பண்ணை கொல்லை குடிகளை கவனிக்க என்று ஒரு சராசரி பெண்ணாய் வாழ்ந்து, கணவன் மனதில் நீங்கா இடம் பிடித்தாள். மல்லிகா வந்த நேரம் பன்னீர் செல்வத்தின் வாழ்வில் முன்னேற்றம் மட்டுமே இருந்தது. மல்லிகாவை அவளைப் புகழ்ந்தாலும் அப்பழுக்கற்றவளாய்,

“இதற்கெல்லாம் காரணம் நம்ம மகாலட்சுமி பிறந்த நேரம் தான்” 7

என்று தான் கடந்து வந்த அனைத்தையும் மறந்தவளாய், முதல் இளவரசியாக பிறந்த மகாவை உச்சி முகர்ந்து முத்தம் பொழிவாள். எத்தனை வலிக்கும் காலம் மருந்து போடும் என்பது மல்லிகாவின் வாழ்க்கையே உதாரணமாகிப் போனது. அனைவரின் வாழ்விலும் இழப்பு என்பது ஏற்படக்கூடிய ஒன்றே. அதனை மனோபலத்துடன் கடந்து வரவேண்டும் என்பதை மல்லிகாவின் வாழ்வைக் கொண்டே அறியலாகிறது.

சக்கரையை ஊர் மக்கள் தூற்றுதல்
குடிகாரன் என்ற பட்டத்தை சக்கரை இளம்வயதிலேயே பெற்றிருந்தாலும், பெண்களிடம் மிகவும் கண்ணியமாகவே நடந்து கொள்வான். அவன் ஒழுக்கத்துடன் வாழ்ந்தாலும், அவன் கட்டுக்குலையாத உடல் மீதுள்ள மோகத்தினால் திருமாண பெண்களும், திருமணமாகாத பெண்களும் ஏக்கத்துடன் சுற்றிச் சுற்றி வந்தனர். கொல்லையில் முந்திரித் தோப்பில் அவரவர்கள் விரித்த வலையில் சிக்காத வெறுப்பிலும், சமயத்தில் வலை விரித்ததை எங்கு சொல்லி விடுவானோ என்கிற பயத்திலுமாக சம்மந்தப்பட்டப் பெண்கள், என்னைக் கையைப் பிடித்து இழுத்தான்; கல்லைவிட்டு எறிந்தான்; என்று பெண்கள் பொறுக்கிப் பட்டம் கட்டி ஊர் மக்கள் இகழ்ந்து பேசும் அளவிற்கு தூற்றிவிட்டனர். அளவற்ற அவமானங்களை பல பெண்கள் சுமத்தினாலும் அவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல், பொறுத்துக் கொண்டு தலை குனிந்த படியே நடந்து செல்வான். ஏனோ அதீத போதையுடன் ஊதாரியாகச் சுற்றினாலும் பெண்கள் என்றால் பல அடிகள் தூரத்திலேயே பயணிப்பான். இத்தகைய குணம் கொண்டவனை ஊரார் கடைசி வரை தவறாகவே நினைத்துக் கொண்டனர்.

சக்கரையின் கண்ணியம்
சக்கரை ஒரு சமயம் தன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரத்தில் இலையைக் கழித்துக் கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டு மல்லிகா தவிர்க்க முடியாத சூழலில் இலைகளின் மறைவில் பயத்தோடு குளிக்க அமர்ந்தாள். எங்கே தன்னை சக்கரை பார்த்துவிடுவானோ என்ற பயத்தோடு, தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றினாள். மளமளவென சத்தம் இவளை மறைத்திருந்த கிளை வெட்டப்பட்டு விழுந்ததும், வெறித்த மரத்தின் கீழ் இறக்கை பிய்த்து எரியப்பட்டக் கோழியாய் மார்பில் துணியைக் கட்டிக் கொண்டு நிற்கிறாள். சக்கரை இந்நிலையில் மல்லிகாவைப் பார்த்ததும், தீயை மிதித்துவிட்டது போன்று ஒரு திகைப்பு அவனுள் தோன்றியது. பார்க்கக்கூடாத ஓர் பாவச்செயலை பார்த்தது போன்ற திகிலில், கண்கள் முழுதும் மிகவும் பதட்டத்தோடு, கண் இமைக்கும் நேரத்தில் சரசரவென மரத்தைவிட்டு இறங்கி மல்லிகா இருக்கும் பக்கம் சற்றும் திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டிருந்தான். இத்தகைய நடத்தையின் காரணமாக மல்லிகாவிற்கு சக்கரையின் உண்மையான குணம் புரிந்து, அவனை காதலிக்கத் தொடங்கினாள். பெண்கள் மீதும் எப்பொழுதும் மதிப்பு கொண்டவன் சர்க்கரை அந்த கண்ணியமே மல்லிகாவிற்கு அவன் மீது தீராக் காதல் வந்தது என்பதை அறியலாம்.

மல்லிகாவின் மனப்போராட்டம்
மல்லிகா தன் பழைய காதலை மறைத்து, மறந்து வாழ்ந்தாலும், சக்கரை இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் பெருங்காட்டில் தனித்து விட்டது போன்று தனது குடும்பத்தையே மறந்து, சக்கரையின் காதலியாக அவனது நினைவுகள் மனம் முழுதும் அலைமோத, கனத்த இதயத்துடனும் கலங்கிய கண்களுடனும், காதலனின் நினைவோடு தனியொரு உலகத்தில் வாழ்கின்ற நினைவில் கண்ணீர் மல்க கணவன் அழைப்பது கூடத் தெரியாமல் கால்கள் வைக்கும் இடம் தெரியாமல் மனம் போன போக்கில் செல்கிறாள். சக்கரை உயரத்திற்கு மாலையை வாங்கி, அவனையேச் சுமப்பதாக எண்ணி சுமந்து செல்லும் போது அவளின் உண்மையானக் காதல் அழியவில்லை. அவள் மனதில் சக்கரை என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான் என்பது உணரலாகிறது. அவளுள் அழுத்தி வைத்திருந்த சக்கரையின் மீதீருந்த காதலை வாடாத மாலையாக அவன் கழுத்தில் சூட்டினாள். இன்றுடன் இவளின் மனச்சுமை நீங்கி, நிம்மதியான வாழ்க்கையை தொடர்வாளா என்பதும் கேள்விக்குறியே.

பெண்கள் தங்கள் இளமைப் பருவங்களில் காதலில் விழும் போது, அதற்கு ஆதரவு தெரிவிக்காமல் வீட்டார் மறுப்புத் தெரிவித்து உடனடியாக வேறு திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். அத்தகைய சூழலில் திருமணமாகும் பெண்கள் தன் மனதின் எண்ணங்களை கணவனிடமும் கூற இயலாது, அவ்வாறு கூறினால் எத்தனை ஆண்கள் பன்னீர் செல்வத்தைப் போன்று பெருந்தன்மையாக பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவள் உணர்வுகளைப் மதித்துப் போற்றுவார்கள் என்பது சொப்பனமே எனலாம்.

மனிதம் நிறைந்த மனிதன்
பன்னீர் செல்வம் தன் மனைவி மல்லிகா திருமணத்திற்கு முன்பு வேறு ஒருவனை காதலித்துள்ளாள் என்று தெரிந்தும் மிகவும் நாகரிகமாக நடந்து கொண்டான். தற்போது தன்னுடம் வாழும் வாழ்க்கையில் தன்னையும் தன் குடும்பத்தையும் அரவணைப்பதை மட்டுமே அவன் நோக்கினான். மனைவி காதலித்து தோல்வியடைந்த வலியை தனக்கு நேர்ந்ததாக எண்ணி, எத்தருணத்திலும் அவளின் முதல் காதலைப் பற்றி பேசித் துன்பப்படுத்தாமல் அவளை மிகவும் மதித்து அவளின் வலிகளை புரிந்து கொண்டு நல்ல வாழ்க்கைத் துணையாகவே இறுதிவரை வாழ்ந்தான். மனைவி கடந்த காலத்ததை பெரிதுபடுத்தாமல், பெருந்தன்மையோடு மதித்து நடக்கும் குணமும், புரிதலும் பன்னீர் செல்வத்திடம் இருந்தது.

பன்னீர்செல்வம் எங்கு சென்றாலும் மல்லிகாவை தானே அழைத்துச் செல்லும் பேரன்பு கொண்டவன். ஆனால் மல்லிகாவின் காதலன் சக்கரை இறந்த போது, இன்றாவது தன் மனைவியின் மனத்துயரங்களை தனியாகச் சென்று இறக்கி வைத்துவிட்டு வரட்டுமே என்று அவளை தனியே செல்ல அனுமதிக்கிறான். ஆனால் அவன் மனம் முழுவதும் மல்லிகாவைச் சுற்றியே தவித்துக் கொண்டிருந்தது. தன் மனைவியின் துன்பம் எண்ணி மிகவும் வருந்தினான். இத்தகைய பெருந்தன்மையான குணம் கொண்டவனாகவும், மனிதம் நிறைந்த மனிதனாகவும் பன்னீர்செல்வம் வாழ்வது பெருமைக்குரிய ஒன்றாகும்.

முடிவுரை
மனிதநேயம் என்பது மனிதனின் அடிப்படைப் பண்பு. இது நாம் மற்றவர்களிடம் காட்டும் அன்பு, நட்பு கருணை ஆகியவற்றுடன் தொடர்புடையது. மனிதர்களாகப் பிறந்தவர் அனைவரிடம் விட்டுக்கொடுத்தல் என்ற தலைசிறந்த பண்பு நிறைந்திருக்க வேண்டும். தம்பதியரிடையே ஒருவர் தவறு செய்தால், அவர்களை வெறுத்து ஒதுக்காமல், மற்றொருவர் சரிசெய்து அவர்களுடன் உறுதுணையாக இருந்து மடைமாற்றம் செய்வதே உண்மையான அன்பாகும். அவ்வாறு கணவன் மனைவிடையே ஏற்படும் துன்பங்களை தம் துன்பமாக ஏற்று அரவணைத்து வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாகத் திகழும் என்பது படைப்பாளர் கண்மணி குணசேகரன் எழுதிய இச்சிறுகதையின் வழி அறியலாகிறது.

சான்றெண் விளக்கம்

1. திருக்குறள் - 45
2. குறுந்தொகை –பா. 57
3. குறுந்தொகை – பா.111
4. திரிகடுகம் - பா.64
5. வாடாமல்லி சிறுகதைத்தொகுப்பு - ப.56
6. மேலது - ப.56
7. மேலது - ப.58

பார்வை நூல்கள்
1. திருக்குறள் - மு.வரதராசனார் உரை.
2. ஐங்குநுறூறு, புலியூர்க் கேசிகன் உரை (தெளிவுரை).
3. கண்மணி குணசேகரன் - வாடாமல்லி, சிறுகதைத்தொகுப்பு.
4. திரிகடுகம் – பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், அறிஞர்.ச.வே.சுப்பிரமணியன் உரை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


* கண்மணி குணசேகரின் 'வாடாமல்லி' சிறுகதையை வாசிக்க


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R