இலங்கைப் பயணக் கதையினை எழுதுவது எப்படி ? - அமரர் கல்கி, மணியன், சாரு நிவேதிதா, அராத்து, அ.மார்க்ஸ், சரவணன் மாணிக்கவாசகன் மற்றும் புலம்பெயர் இலக்கிய ஆளுமைகள் எழுதிய இலங்கைப் பயணக் குறிப்புக்கள் தொடர்பாக --- - வாகீசன் -
எனது புத்தக அடுக்குகளில் இருந்து அமரர் கல்கி எழுதிய 'இலங்கைப் பயணக் கதை' நூல் எனது கண்ணில் பட்டது. இதனை நான் ஒரு தற்செயலான நிகழ்வாகக் கருதவில்லை. இன்று தமிழகத்தில் இருந்தும் மேற்குலக நாடுகளில் இருந்தும் புற்றீசல்கள் போல் இலங்கை நோக்கி படையெடுத்து பலரும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் 'இலங்கைப் பயணக் கதைகள் ' குறித்து நானும் ஏதாவது எழுத்தவேண்டும் என்ற சமிக்ஞையாகவே புரிந்து கொண்டேன். இது பற்றி எழுத வேண்டுமாயின் இதயம் பேசுகிறது மணியன் எழுதிய 'இலங்கை பயணக் கட்டுரை ' நூலும் மிக அவசியமானதாக எனக்குப் பட்டது. பல மணி நேரப் பிரயத்தனங்களின் பின் கேட்பாரற்றுக் கிடந்த அந்த நூலையும் என் கையில் எடுத்துக் கொண்டேன்.
கல்கியின் 'இலங்கைப் பயணம்' 1938 இல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. மணியனின் 'இலங்கைப் பயணக் கட்டுரை'யும் ஆனந்த விகடனிலேயே தொடராக 1978 இல் வந்து, பின் 1979 இல் நூலாக வெளி வருகின்றது. இருவருமே பார்ப்பனிய எழுத்தாளர்கள். இருவரது எழுத்துக்களிலும் அவர்களது சாதியபிமானம் பல்வேறு சமயங்களிலும் தலை தூக்கும். மணியன் பத்திற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்து அதனைப் பயணக் கட்டுரைகளாக எழுதியவர். முன்னரெல்லாம் ஒரு பயணக் கட்டுரையினை எப்படி எழுதக் கூடாது என்பதற்கு இவரை உதாரணமாகக் கொள்வார்கள். ஆனால் இப்போதுள்ள நிலையில் இவர்களிடமே ஆலோசனை கேட்க வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம். கல்கி பின்னர் 'இலங்கையில் ஒரு வாரம்' என்ற நூலையும் 1950 வாக்கில் எழுதியிருப்பதாக அறிய முடிகின்றது. ஆயினும் அது எனது பார்வைக்குக் கிட்டவில்லை.
கல்கிக்குத் தெரியும் அவரது வாசகர்கள் இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் இருப்பதென்பது. ஆயினும் அவர் தனது பயணத்தினை பயமின்றி நேர்மையாகப் பதிவு செய்கிறார். இராவணன் ஒரு முட்டாள் என்பதாகக் கூறிக் கொண்டே தனது கட்டுரையினை ஆரம்பிக்கின்றார், இலங்கை அரசு அன்று இந்தியப் பயணிகள் மீது இந்தியர்கள் மிகவும் சுகாதாரக் குறைவானவர்கள் என்ற வகையில் விதித்திருந்த கடுமையான கட்டுப்பாடுகளைக் கடுமையாகச் சாடுகின்றார். யாழ்ப்பாணத்தின் கல்வி மேம்பாடு அவரை அசர வைக்கின்றது. யாழ்ப்பாணத்துச் சாதீயக் கொடுமைகள் குறித்து அவர் எதுவும் பேசவில்லையாயினும் இங்குள்ள சீதன முறைமை தமிழகத்தை விட மிக மோசமாக உள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.