ஸ்டெம் கல்வி (Stem-Kalvi)தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் “ஆயிரம் தமிழ் வாசிப்புப் புத்தகங்கள்" செயற்றிட்டம். - கலா ஸ்ரீரஞ்சன் -
Website: Stem-Kalvi | Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இச்செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளைப் பற்றி இக்கட்டுரை பேசுகிறது. ஆரம்ப பாடசாலைகளில் மாணவர்களின் வாசிப்பும், வாசிப்புத்திறனும் குறைந்திருப்பதாக அண்மையில் இலங்கையில் யூனிசேப் (UNICEF) நிறுவனம் செய்த ஆய்வொன்று தெரிவித்திருந்தது. இதையடுத்து ஸ்டெம் கல்வி தன்னார்வத் தொண்டு நிறுவனம் இதன் அடிப்படையில் புதிதாக இளம் மாணவர்களுக்காக ஒரு வாசிப்புத் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது.
இது குறித்து ஸ்டெ ம் கல்வி தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் கலாநிதி குமாரவேலு கணேசன் பின்வருமாறு குறிப்பிட்டார்.
"அண்மையில் யூனிசேப் நிறுவனத்தால் இலங்கையில் நடாத்தப்பட்ட 3ஆம் வகுப்பு மாணவர்களின் வாசிப்புத்திறன் பற்றிய ஒரு ஆய்வில் தமிழ் பிரதேசங்கள், முக்கியமாக வடமாகாணம், மிகவும் பி ன்தங்கி ய நிலையில் இருந்ததை நாம் எல்லோரும் அவதானித்தோம். வடமாகாணத்தில் 16% ஆன 3ம் வகுப்பு மாணவர்களும், கிழக்கு மாகாணத்தில் 25% ஆன 3ம் வகுப்பு மாணவர்களுமே அவர்களின் வயதுக்கேற்ற வாசிப்புத்திறனைக் கொண்டுள்ளதாக இவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 3ம் வகுப்பு தமிழ் மாணவர்களின் வயதிற்கேற்ற வாசிப்புத்திறன் வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழர்கள் அதிகம் வாழும் மத்திய மாகாணத்தில் 11% ஆகவும், தென் மாகாணத்தில் 5% ஆகவும், ஊவா மாகாணத்தில் 12%ஆகவும், சப்பிரகமுவா மாகாணத்தில் 19% ஆகவும் காணப்படுகின்றது. மேல் மாகாணத்தில் கூட சிங்கள மாணவர்களின் வாசிப்புத்திறன் 52% ஆகக்காணப்படும்போது தமிழ் மாணவர்களின் வாசிப்புத்திறன் 30% ஆகவே காணப்படுகின்றது. இக்குறைபாட்டை கூடிய விரைவில் நிவர்த்தி செய்யாவிடில் எமது இளம் சமுதாயம் திறமையாக வாசிக்க முடியாத ஒரு எதிர்கால சந்ததியை உருவாக்கி விடும்.