'மாமன்னன்' விட்ட பிழையும், சரியும்! - ஊருலாத்தி -
அண்மையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சனாதனத்தைக் கொசுவை அழிப்பதுபோல் அழிக்க வேண்டுமென்றூ கூறியது இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் பலத்தை சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மதவெறி பிடித்த இந்து மதகுரு ஒருவர் உதயநிதியின் தலைக்குப் பத்துக் கோடி என்று அறிவித்திருக்கின்றார். நல்லவேளை உதயநிதி வட இந்திய மாநிலங்களில் வசிக்கவில்லை. வசித்திருந்தால் அந்தச் சாமியாரின் கட்டளையை ஏற்று ஒரு கூட்டம் புறப்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்காக உதயநிதி இந்த எச்சரிக்கையை இலேசாக எண்ணிவிடக்கூடாது. அவதானமாகவுமிருக்க வேண்டும். இவ்விதம் கொலை அச்சுறுத்தல் விட்ட அந்தச் சாமிக்கெதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்.
இந்தச் சர்ச்சையையைக் காரணமாக வைத்து தமிழகத்தின் ஆட்சியைக் கலைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அரசியற் கோமாளியான சுப்பிரமணியன் சுவாமி அதற்கான எச்சரிக்கையை ஏற்கனவே விட்டிருக்கின்றார். போதாதற்கு ஆளுநர் ரவியுடனான தமிழக அரசின் முரண்பாட்டையும் மறந்துவிட முடியாது. அப்படியேதும் நடந்தால் மிகப்பெரிய வெற்றியுடன் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். இன்றுள்ள திமுகவின் வசீகர ஆளுமைகளில் முன்னிலை வகுப்பவர்கள் உதயநிதியும், கனிமொழியும்தாம். ஸ்டாலின் தன் தொடர்ச்சியான அரசியற் செயற்பாடுகளால் இன்றுள்ள நிலைக்கு உயர்ந்திருப்பவர். ஆனால் உதயநிதி, கனிமொழி போல் மிகுந்த வசீகர ஆளுமை மிக்கவரல்லர். கனிமொழியின் 'தமிழ்', 'ஆங்கிலப்புலமை, உதயநிதியின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' தோற்றம், கலைஞரைப்போல் சமயத்துக்கேற்ப உதிர்க்கும் சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் பதில்கள், திரைப்பட நடிப்பு காரணமாக திமுகவின் முக்கிய பலமாக இருப்பவர்கள் இவர்கள். உண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் பலமும் இவர்கள்தாம்.