தொடர் நாவல்: பயிற்சி முகாம்! (4) - கடல்புத்திரன் -
- எழுத்தாளர் கடல்புத்திரனிடம் ஒருமுறை பேச்சுவாக்கில் 'ஏன் நீங்கள் உங்கள் இயக்கப் பயிற்சி முகாம் அனுபவங்களைப் பதிவு செய்யக்கூடாது" என்று கேட்டேன்.எழுதுவதாகக் கூறிச் சிறு நாவலாக எழுதியுள்ளார். பெயர்களை மாற்றியிருக்கின்றாரென்று தெரிகின்றது. இருந்தாலும் தளத்திலியங்கிய அமைப்பின் பயிற்சி முகாமொன்றின் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்-
அத்தியாயம் நான்கு: தொடரும் பயிற்சி!
நண்பகல் பயிற்சியின் போதும் சிவா ஆசிரியர் வந்து சேரவில்லை. செழியனும், பாரியுமே பயிற்சிகளைக் கவனித்தார்கள். மூன்றரை மணி போல தடைப் பயிற்சியின் போதே ஆசிரியர் வந்து சேர்ந்தார். இரவில் அரசியல் வகுப்பு நடைபெற வேண்டும் என்பதை ஏ.ஜி.ஏயுடன் கலந்தாலோசிக்கவே சென்றிருக்கிறார். " இன்னிரவு உங்களுக்கு அரசியல் வகுப்பு நடைபெறும் " எனக் கூறினார். தடைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றார் . நிமிர்ந்து நிற்கிற பனை மரத்தில் 15 அடி உயரத்தில் ஒரு ஆள் சுயாதீனமாக நின்று சுற்றிவரப் பார்த்து நடமாடக் கூடியதாக 5 அடி நீளமும், 6 அடி அகலத்தில் பனையின் ஒரு பக்கத்தில் இரண்டடியாகவும், மறுபுறத்தில் நாலு அடியுமாக மரப்பீடம் வெளித்தள்ளலாக கயிறுகளால் வரிந்து இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தது. அதில் சாரணர்களின் அனுபவம் தெரிந்தது. நிலத்திலிருந்து துலா போன்ற பனைக்குற்றி(கால்) பீடத்திற்கு ஏறக் கூடியதாக கயிற்றுக்கட்டுடன் கிடந்தது. வழக்கம் போல ரஜனி, தியாகுவும் சரிவான கோலிலே கையால் பிடியாமலே , நிலத்தில் ஓடுறது மாதிரியே ஓடி பீடத்தில் ஏறினார்கள். பிறகு மேலே இருந்து ஒருவர் பின் ஒருவராக நிலத்தில் குதித்தார்கள். சாதாரணமாக எழும்பி வந்தவர்களை "கால் நோகவில்லையா ? " என ஜீவன் கேட்டான் . " இல்லை. நெடுகக் குதித்தால் நோகப் பார்க்கும் " என்று தியாகு பதிலளித்தான். ஆனைக்கோட்டைத் தோழர்கள் முதல் தடவைக் குதிக்கிறார்கள் போல இருக்கிறது. சரிவில் அரைவாசிக்கு ஓடி ஏறியவர்கள் மீதி தூரத்தைத் கையால் பிடித்து, பிடித்து விரைவாகத் தட்டிற்கு வந்தார்கள். குதிக்கிற போதும் சிறிது தடைப்பட்டு நின்று விட்டு குதித்து விட்டார்கள். இந்தப் பயிற்சிகள் குறைந்த பட்சம் இரண்டு நாள்களாவது நடை பெறும்.எனவே, சமையற்குழு பயிற்சி எடுக்கத் தவறி விடுவதில்லை.