“பாருவதி….. இனிக்காலத்தில ஓம்மூஞ்சீல முழிக்கவே கூடாதிண்ணுதான் நெனைச்ச்சுக்கிட்டிருந்தேன்….. என்னபண்ண…. ஊருக்கு நாட்டாமைப் பொறுப்பில இருக்கிறதால, யாருகிட்டயும் மானரோசம் பாக்க முடியாத வெறுவாகெட்ட பொழைப்பாயெல்லா போச்சு ஏம்பாடு… சரிசரி… நம்ம எல்லைச்சாமி கோயில் கொடைக்கு குடும்பத்துக்கு நூத்தியொரு ரூவா குடுத்திடணும்னு ஊர்க் கூட்டத்தில முடிவுபண்ணினது தெரியுமில்லே…. ஒரு வாரமாகியும் துட்டு ஏதும் குடுக்காம இருந்தா என்ன அர்த்தம்….”
கேட்டுக்கிட்டே நாட்டாமை நாச்சிமுத்து ஐயா எங்கவீட்டு குச்சி வாசல் ஓரமா ஒக்காந்துகிட்டாரு.
எங்கம்மா மொகத்த பாக்கவே ரொம்பவும் பாவமா இருந்திச்சு. அழுகை ஒண்ணுதான் வராத கொறை.
“தப்பா நெனையாதீரும் நாட்டாமை ஐயா…. வர்ர வெள்ளிக்கிழமைதான் பீடிக்கடையில சம்பளம் போடுவாங்க…. வாங்கின கையோட குடுத்துப்புடுறேன்…..”
கெஞ்சிற மாதிரி பேசிச்சு எங்கம்மா.
நாட்டாமை நாச்சிமுத்து விடல்ல.
“ ஒன்னய மாதிரி ஆளுங்க கஷ்டப்படக் கூடாதுண்ணுதான், நாம நூத்தி ஒண்ணுண்ணு வரிய பிரிச்சோம்…. இல்லேன்னா போனமாசம் தெற்கு ஊர்க்காரனுக நடத்தின கொடையில, அவங்க போட்ட ஆட்டத்துக்கும், காசைக் கொட்டி ரொம்ப ஜோரா பண்ணின திருவிழாவுக்கும், நாம பதிலுக்குப் பதிலு பண்ணிக் காட்டணும்னு, வீட்டுக்கு வீடு இருநூத்தம்பதோ, முன்னூறோன்னு பிரிச்சிருப்போம்…. பரவாயில்ல…. ஏற்கனவே ஊர்ப்பணம் கொஞ்சம் இருக்கு…. அதையும் போட்டு இந்தத் தடவை நம்ம சாமிக்கு, கொடைய ஜாம்ஜாம்னு நடத்திப்புடலாம்…. பாட்டுக் கச்சேரிக்கெல்லாம் டவுண்லயிருந்து ஆளு வருது…. தெரியுமா…..”
“பாட்டுக் கச்சேரியும், வாண வேடிக்கையும் வெச்சுக் கூத்தடிச்சாத்தான் சாமி வரங்குடுக்குமா ….. காசை கொட்டிக் கரியா ஆக்கித்தான் சாமி கும்பிடணும்னு நெனைக்கீரா நாட்டாமை ஐயா ….”
இப்ப கொஞ்சம் அம்மாகிட்ட துணிவு தெரிஞ்சிச்சு. நாட்டாமை ஐயாக்கு கோவம் வந்திருக்கணும்போல.
“இந்த எடக்குப் பேச்சுத்தான் வேண்டாங்கிறது…. தெற்கு ஊர்க்காரனுகளை விட , நாம ஒண்ணுங் கொறைஞ்சவங்க இல்லைங்கிறத காட்டிக்க, வேற என்னதான் வழி இருக்கு…. மனுசனுக்கு கவுரவம்னு ஒண்ணு இருக்கில்லையா…. இதப்பத்தியெல்லாம் நீ எங்கே நெனைச்சுப் பாக்கப்போறே…. நீ இதுமாதிரி நடந்துக்கப் போயிதான், காளிமுத்து ஒன்னையையும், ஓம் புள்ளைங்க ரெண்டையும் விட்டுப்பிட்டு அவ பின்னாடியே போய்ட்டான்…..”
இன்னும் என்னமோ எல்லாம் பேசினாரு. எங்கம்மா மெதுவாத்தான் பதில் சொல்லிக்கிட்டிருந்திச்சு. ஆனா என்னாலதான் முழுசா புரிஞ்சிக்க முடியல்ல.
ரெண்டு நாளைக்கு முன்னாடி, கோவாலு தாத்தாவோட டீக்கடையில வெச்சு, ரெண்டுபேரு என்னயபத்தி பேசினது நெனைப்பில வந்திச்சு.
“பதினைஞ்சு வயசு வந்திச்சிண்ணாத்தான் கொஞ்சம் வெவரம் புரியும்…. பாவம், பத்துவயசுப் பயலுக்கு என்ன புரியப்போவுது….”
எனக்குப் பத்து வயசு.
எங்கம்மாகிட்ட கேட்டேன்.
“ஏம்மா…. எனக்குப் பத்து வயசிண்ணு எல்லாரும் சொல்றாங்க…. பத்து வயசா இருக்கிறதாலதானே நான் சின்னப் பையனா இருக்கேன்….. இருவது வயசாயிருந்தா, உன்னய உக்கார வெச்சு சோறு போடுவேனில்ல….”
அம்மா பதிலொண்ணும் சொல்லாமெ என்னய அணைச்சுக்கிரிச்சு. தலையைக் கோதிவுட்டு, எனக்கு முத்தம் குடுத்திச்சு. அது கண்ணிலயிருந்து கண்ணீர் வழிஞ்சு எம்மேல வுழுந்திச்சு.
“நான் ஒண்ணும் தப்பா சொல்ல்லியே…. அப்புறம் அம்மா எதுக்கு அழுது…. புரியல்லியே….”
“ஏம்மா…. நான் இப்ப இருவது வயசுப் பையனாகணும்…. சின்னப் பையனா ஏம்மா பெத்தே…. யம்மா…. யம்மா….. என்னய பெரிய பையனா பெத்துக்கிறியாம்மா….”
எங்கம்மா பெரிசா சிரிச்சிரிச்சு. ரொம்ப நாளைக்கு அப்புறமா அது சிரிச்சத பாக்கிறப்போ, ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆனா இப்போ எதுக்கு சிரிச்சிச்சிண்ணும் புரியல்ல.
உச்சந்தலையைச் சொறிஞ்சுகிட்டேன்.
நைட்டு சாப்பாட்டை நேரத்துக்கே சாப்பிட தந்து, என்னையையும் தங்கச்சியையும் தூங்க வெச்சதுக்கு அப்புறமாத்தான் எங்கம்மா சாப்பிட்டுத் தூங்கும்.
சாப்பிட்டுப் படுத்து ரொம்ப நேரமாகியும், எனக்குத் தூக்கம் வர்ரமாதிரித் தெரியல்ல. இண்ணைக்கு பகல்ல நாட்டாமைக்கார ஐயா வந்து அம்மாகிட்ட சத்தம் போட்டதையும், அம்மா அழுகிற மாதிரி நிண்ணு பேசிக்கிட்டிருந்ததையும் திரும்பத் திரும்ப நெனைச்சுக்கிட்டிருந்ததால என்னால தூங்க முடியல்ல.
அத்தோட முன்னய மாதிரி இல்லாம, இப்பெல்லாம் எங்கம்மா அடிக்கடி இருமிக்கிட்டே இருக்கு.
கோவாலு தாத்தா டீக்கடை பக்கமா நாலைஞ்சு நாய்க சண்டை போடுற சத்தம் நல்லாக் கேக்குது. மேற்கை போற ரயிலு சத்தம் காதைப் பொழக்குது.
“ரெண்டுமணி மெயிலுண்ணு இதைத்தானே சொல்லுவாங்க…. ஓ…. அப்பிடீன்னா இப்போ நைட்டு ரெண்டுமணி….”
“எங்கூட கோலி வெளாடுற பய முத்துராக்கு வூட்டு டீவீல நல்ல சண்டைப்படமா பாத்துக்கிட்டு இருந்தாக்கூட, என்னால ரொம்ப நேரம் பாத்துக்கிட்டிருக்க முடியாம வந்து படுத்துக்குவேன்…. இன்னிக்கு என்ன ஆச்சு….”
அம்மா அங்கிட்டும், இங்கிட்டுமா பெரண்டு பெரண்டு படுத்துக்கிட்டிருந்திச்சு. இருமலோட என்னமோ எல்லாம் வாயில பேசிப் பொலம்பிக்கிட்டே அழுதுகிட்டும் இருந்திச்சு.
எனக்கு முதுகைக் காட்டிக்கிட்டு, அம்மா படுத்துக் கெடந்ததால, நானு எந்திரிச்சு அது பக்கத்தில போயி உக்காந்ததைத் தெரிஞ்சுக்கலை.
கவனமாய் கவனிச்சேன். அப்பாவ நெனைச்சுத்தான் அழுதுகிட்டிருந்திச்சு.
கடைசியா எங்கப்பா எங்களை விட்டுப் பிரிஞ்சு போனது கொஞ்சம் கொஞ்சமா என் நெனைப்பில வரத் தொடங்கிச்சு.
முடிஞ்ச தீவாளிக்கு மொதல்நாளு நைட்டு. எங்கப்பா யாரோ ஒரு கொத்தனாருக்கு கையாளா, வெளியூரில தங்கு வேலைக்குப் போனிச்சு.
வர்ரப்போ அம்மாக்கு சேலை. எனக்கு ஸ்பைடர்மேன் பேண்டு சட்டை. தங்கச்சிக்கு பூப்போட்ட சட்டைன்னு எல்லாமே வாங்கிகிட்டு வர்ரதா சொல்லிச்சு.
எனக்கு தூக்கமே வரலை. முத்துராக்கு வூட்டு டீவீல ஸ்பைடர்மேன் வந்து சண்டை போடுறதெல்லாம் நெனைச்சுப் பாத்து, அதுமாதிரி நானும் பாஞ்சு பாஞ்சு, ரொம்பத் தரக்கா கீழ விழுந்து விழுந்து எந்திரிச்சேன். வலியே தெரியல.
நாளைக்கு ஸ்பைடர்மேன் ட்ரெஸ்சை போட்டுக்கிட்டு இதுமாதிரி சண்டை பண்ணிக் காட்டினா ரொம்ப ஜோரா இருக்குமில்லே. போன பொங்கல் டயிமில, முத்துராக்குவுக்கு அவுங்கப்பா இதேமாதிரி ஸ்பைடர்மேன் ட்ரெஸ்சை வாங்கிக் குடுத்தப்போ, அதுமாதிரி ட்ரெஸ்சு கேட்டு நானு அழுதுகிட்டிருந்தேனெல்லே…. இருக்கட்டும், இருக்கட்டும்…. நாளைக்கு விடியட்டும்…. நானும், தங்கச்சியும் புது ட்ரெஸ்சு போட்டுக்கிட்டு, இந்தத் தெருவிலயிருந்து அங்கை வரைக்கும் போய்ட்டு வரணும்…. மொதல் வேலையா முத்துராக்கு வூட்டுக்குப் போயி, வெளாட வர்ரியான்னு கேக்கணும்…. அப்பத்தானே அவன்கிட்ட எங்கவுட்டு புது ட்ரெஸ்சை காமிக்க முடியும் இல்லியா….!
“ஏம்மா…. தீவாளி நாளுண்ணா, மொதல்நாள் நைட்டு விடியிறத்துக்கு ரொம்ப நேரம் ஆகுமாம்மா…..”
அடிக்கடி அம்மாகிட்ட கேட்டுக்கிட்டே இருந்தேன்.
அம்மா ரொம்பவும் அமைதியா எனக்கு பதில் சொல்லிக்கிட்டே இருந்திச்சு.
வெளியூருக்கு வேலைக்குப் போன பக்கத்து வூட்டு தங்கராசு மாமாகூட அவுங்க வூட்டுக்கு ட்ரெஸ்சு, வெடி, மத்தாப்பூன்னு நெறய வாங்கிக்கிட்டு வந்து, வெடிக்க வெச்சுக்கிட்டு இருக்காங்க….
மேல வூட்டு சின்னாத்தா அத்தை, அவுங்க வூட்டு அடுப்பங்கரையில பணியாரம் தயார்பண்ணுற வாசம் மூக்கைத் தொழைக்கிது…. பெரிய இரும்புச் சட்டி எண்ணைல, ஒண்ணொண்ணா போட்டுப் போட்டு எடுக்கிறப்போ, “சொர்ரு….சொர்ரு….” வர்ர சத்தம் நல்லாவே கேக்குது.
முந்திரிக் கொத்து போடுறாங்க போல…. போட்டாப்போல நமக்கா குடுக்கப்போறாங்க…. இத்துனூண்டு இத்துனூண்டா கோலிக்காய் மாதிரி செஞ்சு, ஆளுக்கு ரெண்டு ரெண்டா தருவாங்க…. வாயில தண்ணிய ஊத்தி, மாத்திரை முழுங்கிற மாதிரிகூட முழுங்கிப்புடலாம்….
இந்தத் தடவை எங்க வூட்டிலையும் பண்டம் பண்ணித் தாறதா எங்கம்மா சொல்லியிருக்கு…. அதுக்கு மாவு, சீனி, எண்ணை எல்லாத்தையும் வாங்கிகிட்டு வர்ரதா அப்பா சொல்லியிருக்கு….
“ஏம்மா…. அப்பா வந்த உடனயே நீ பண்டம் போட ஆரம்பிச்சிடணும்…. நானு வெளிய வெடி போட்டுக்கிட்டே இருப்பேன்…. சரியாம்மா….”
சொல்லிக்கிட்டே தங்கச்சிய பாத்தேன். படுத்துக் கெடந்தா. பக்கத்தில போயி தோளைப் புடிச்சு உலுக்கினேன்.
“தங்கச்சிய தூங்க விடுப்பா…. சாயந்தரமே தலைவலிண்ணு பொலம்பிக்கிட்டிருந்தா…. தைலம் தேச்சிருக்கேன்…. அவபாட்டில தூங்கட்டும்….”
இது அம்மா.
ஆனா நானு விடல்லை.
“போம்மா…. நாளைக்கு தீவாளிக்காக அப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில ட்ரெஸ்ஸு வாங்கிக்கிட்டு வந்திடும்…. அப்ப பாரு…. தலைவலின்னா என்னண்ணு கேப்பா தங்கச்சி….”
பக்கத்து வீட்டுப் பசங்க எல்லாம் அவங்கவுங்க அண்ணன்,தம்பி அக்கா தங்கச்சிகூட தெருவையே கலக்கிட்டிருக்காங்க. எனக்கிண்ணு இருக்கிறது ஒரே தங்கச்சி. விட்டுருவேனா நானு.
“தங்கச்சி…. தூங்காத தாயி…. இப்ப அப்பா வந்திடுமா…. வந்த உடனை அண்ணன் வெடி போடுவேனா…. அப்ப எங்க தாயி வாசல்ல நிண்ணு மத்தாப்பூ சுத்துவீங்களாம்…. சரியா தாயி….”
கண்ணைக் கசக்கிக்கிட்டு தலையை ஆட்டினாள் தங்கச்சி.
“அண்ணே…. நாம பெரிய ஆளா வந்ததுக்கு அப்புறமும், இதுமாதிரி தீவாளிக்கெல்லாம் வெடி போடணும்…. மத்தாப்பூ சுத்தணும்…. அப்புறமா நாம ரெண்டு பேரும் ஒரே சைக்கிள்ள ஸ்கூலு, அப்புறமா காலேஜுன்னு போகணும்….”
என்னய கட்டிப் புடிச்சுக்கிட்டே சொன்னாள் தங்கச்சி.
கோவாலு தாத்தா கடைப்பக்கம் ஒரே சத்தக்காடா இருந்திச்சு.
ரொம்பப் பேரு அந்தப் பக்கமா ஓடுற சத்தம் கேட்டிச்சு. நானும் வெளியே வந்து எட்டிப் பாத்தேன். என் பின்னாடியே எங்கம்மா வந்து, என்னய பிடிச்சு இழுத்துக்கிட்டு வூட்டுள்ள போயிரிச்சு.
“வெளியயெல்லாம் போகாதீங்கப்பா…. விடிஞ்சா தீவாளி…. அதை இப்பவே ஆரம்பிச்சிட்டாங்க போல….”
கொஞ்ச நேரத்துக்குள்ள கோவாலு தாத்தாட பெரிய பொண்ணு, கண்ணம்மா அத்தை எங்க வூட்டுக்கு பதறிட்டே ஓடிவந்தாங்க.
“பாருவதி அக்கா…. அந்த முத்துப்பேச்சி வூட்டுக்குள்ள காளிமுத்து அண்ணே ஒண்ணா இருந்தாங்கண்ணு, கதவ அடைச்சு வெளிய கொண்டிய போட்டு, புடிச்சு வெச்சிருக்காங்க…. சீக்கிரமா வாங்கக்கா….”
சொல்லிப்புட்டு ஓடிட்டா கண்ணம்மா அத்தை. அவுங்க காளிமுத்துன்னு சொன்னது எங்க அப்பாவை.
“அடப் பாவி மனுசா…. இப்பிடிப் பண்ணிப்புட்டியே….”
தலையில அடிச்சுக்கிட்டே ஓடிச்சு அம்மா.
“முத்துப்பேச்சி அத்தை வூட்டுக்குத்தானே அப்பா போனிச்சு…. அதுக்கு ஏன் புடிச்சு வெக்கணும்…. அம்மா எதுக்கு அழுதுகிட்டே போகணும்…. புரியலியே….”
இருந்தாலும், அம்மா அழுதுகிட்டு ஓடுறத பாத்ததும், நானும் தங்கச்சியும் அழுதுகிட்டே பின்னாடி ஓடினோம்.
எங்கம்மா சத்தம்தான் பலமா இருந்திச்சு.
“அடப் பாவிகளா…. ஊரில இருக்கிற எல்லாப் பயலுவளும் இவளுகிட்ட போய்வர்ரது எனக்குத் தெரியாதிண்ணு நெனைச்சீங்களா…. கடசில இழிச்சவாய் பயலா எம்புருசன் போன ஒடன எல்லாப் பயலுமா சேந்து, பேச வந்திட்டிய….. எத்தனை நாளா பிளான் பண்ணிக்கிட்டு இருந்திய…. சொல்லுங்கலே….”
முத்துப்பேச்சி அத்தையும், எங்கப்பாவும் தலைய தொங்கப்போட்டுக்கிட்டு நிண்ணாங்க.
நாட்டாமை தாத்தாதான் அம்மாகிட்ட பேசினாரு.
“இந்தா பாரு பாருவதி…. நடந்ததை திரும்பத் திரும்ப பேசிப் பிரயோசனம் இல்லை…. மொதல்ல இந்த முத்துப்பேச்சிய ஊரைவுட்டே வெரட்டணும்…. விட்டுவச்சா ஒவ்வொரு குடும்பமா கெடுத்துக்கிட்டே இருப்பா….”
“ஆமா…. சரியாச் சொன்னீரு, நாட்டாமை ஐயா…. இவள உசிரோடயே வைக்கக் கூடாது….வெட்டிக் கொன்னுபுட்டு நானு ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்ல…. செருக்கி முண்டை வெளிய வாடி….”
அம்மா சத்தமா பேசிக்கிட்டே முத்துப்பேச்சி அத்தையின் தலைமுடியைப் பிடிச்சு இழுத்து, மூஞ்சையில தாறுமாறா அறைஞ்சு அவங்களை தள்ளிக்கிட்டு போயி செவத்தோட மோதிச்சு.
தங்கச்சி எங்கிட்ட மெதுவா கேட்டிச்சு….
“அண்ணே…. எதுக்கு எங்கம்மா அந்த அத்தையை போட்டு இந்த அடி அடிக்கிது….”
“அந்த அத்தை எங்கப்பாகூட பேசிக்கிட்டிருந்தாங்களாம்….”
“பேசினா என்ன…. அதுக்கு ஏன் அடிக்கணும்….”
“அதுதான் தெரியல்ல தாயி…. அப்புறமா கேட்டுக்குவோம்….”
வலி தாங்க முடியாம முத்துப்பேச்சி அத்தை அலறிச்சு.
கூட்டமா நிண்ண பொம்பிளைங்களைப் பாத்து நாட்டாமை கத்தினாரு.
“யம்மா…. சொன்னமாதிரி அவளை இவ கொன்னாலும் கொன்னுபோட்டுருவா போல இருக்கு…. அப்பிடி ஏதும் ஆச்சுன்னா, நாளக்கு விடிஞ்சதும் நம்ம அத்தனை பேருக்குமே தீவாளி, போலீஸ் ஸ்டேசனிலதான் ரெண்டு பேத்தையுமே பிடிச்சு நகட்டியிருங்க….”
பொம்பிளைங்க ஊடையில வுழுந்து பாடுபட்டு நகட்டி, எங்கம்மாவை இந்தப் பக்கமா கூட்டிவந்தாங்க.
நாட்டாமை தாத்தா அம்மாகிட்ட சொன்னாரு.
“இந்தா பாரு தாயி…. நீயும் ஒரு பொம்பளைதான்…. பெண்பாவம் பொல்லாததுண்ணு சொல்லுவாங்க…. இருந்தாலும் அதுக்காக இவளை ஊருக்குள்ளை வைக்க முடியாது…. போதாக் கொறைக்கு ஓம்புருசன் வேற இவகூட கையும் களவுமா மாட்டியிருக்கான்…. புருசனை விட்டுப்பிட்டு நாளைக்கு நீ ரெண்டு புள்ளைங்களையும் வெச்சு சமாளிக்கச் சங்கடப்படுவே…. அதனாலதான் சொல்றேன்…. அவ கையில நாலோ, அஞ்சோ குடுத்து தீத்துப்புடு…. இவளை இந்தப்பக்கமா வெரட்டிப்புட்டு, ஓம் புருசனை அந்தப்பக்கமா கூட்டிக்கிட்டுப் போயிடு…. நாளைக்கு காலையில தீவாளி நல்லநாள் இல்லியா…..”
சாதாரணமாகப் பேசினாரு நாட்டாமை.
அம்புட்டுத்தான்….. எங்கம்மாவுக்கு சாமிவந்த மாதிரி ஆடிச்சு….. இதுக்கு முன்னாடி இப்பிடி எங்கம்மாவை நாங்க பாத்ததே இல்லை.
“ஏன்யா…. ஊரான் மாடெல்லாம் மேயணும்…. பிடிபட்ட மாடு மட்டும் மொத்தத்தில தெண்டம் கட்டணுமோ…. நானு டீபி நோயோட கெடந்து செத்துக்கிட்டிருக்கேன்…. மருந்து வாங்கக்கூட துட்டு இல்லாம, ஒவ்வொரு பண்டம், பாத்திரமா வெச்சும், முடியலைன்னா வித்தும் காலத்த கடத்திக்கிட்டிருக்கேன்…. இந்தப் படுபாவி மனுசன் சம்பாத்தியம் பண்ணுறதில பாதிக்கு மேல குடிச்சிட்டு வந்து தெண்டத்துக்கு கெடக்கான்…. இந்த லட்சணத்தில இவனுக்கு கூத்தியா வேற கேக்குதோ…. நானும் இருமி, இருமி நெஞ்சு வலியோட ஒரு நாளைக்கு பதினைஞ்சு கட்டு பீடிகூட சுத்த முடியாம என்ன பாடு பட்டுக்கிட்டிருக்கேன்னு ஆண்டவனுக்குத்தான் தெரியும்…. இந்தச் சின்னஞ் சிறிசுகளோடை எப்பிடிக் காலந்தள்ளப்போறேன்னு தலைய பிச்சுக்கிட்டிருக்கேன்….
இதெல்லாத்தையும் தூரத் தள்ளிப்புட்டு, நாலாயிரமோ ஐயாயிரமோ இந்தப் பத்தினி அம்மாளுக்கு குடுத்து, ஏம்புட்டு உத்தம புருசனை அழைச்சிட்டுப் போவணுமா…. அதெல்லாம் சரி…. இதில உமக்கு எம்புட்டு கமிசன் நாட்டாமை ஐயா….”
நாட்டாமைக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்திச்சு. கண்ணாலயே எரிச்சுப் போடுறமாதிரி அம்மாவைப் பாத்தாரு…. துள்ளினாரு…. அம்மாவைப் பாத்து, கோவத்தோட ஏசினாரு….
“இந்தாப் பாரும்மா…. இதுதான் இந்த ஒலகத்தில நல்லதே பண்ணக்கூடாதிங்கிறது…. ஓம்புருசன் கையுங்களவுமா பிடிபட்டத ஊரே பாத்துக்கிட்டிருக்கு…. இப்பகூட இந்தப்பொண்ணு முத்துப்பேச்சி போலீசுக்குப் போனாண்ணா, போலீசு வந்து ஓம்புருசனை, நாயை அடிக்கிறமாதிரி அடிச்சு, இழுத்துக்கிட்டு போவாங்க தெரியுமா…. ஏதோ பாவம், நீயும் ஒரு சீக்குக்காரி, சின்னப் புள்ளைங்களை வெச்சுக்கிட்டு செரமப்படக்கூடாதுண்ணுதான் நானும் பாடுபட்டேன்…. அது உனக்கென்னமோ வேறமாதிரி தோணுது….”
எங்கம்மா கதறிக்கிட்டே பேசினாங்க.
“நீங்க ஒருத்தரும் எங்களுக்காக உருக வேணா…. எம் புள்ளைங்களை எப்பிடி வாழவைக்கணும், என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியும்…. இந்தப் படுபாவி மனுசனை நீங்கெல்லாம் போலீசில குடுத்தாலுஞ்சரி…. பொரிச்சுத் திண்ணாலுஞ்சரி…. இல்ல, அந்தச் சிறுக்கிகூட ஒண்ணாப் பொணைச்சு வெரட்டிவுட்டாலும்சரி…. இத்தோட தொலைஞ்சு போவட்டும்…. இனி இந்தச் செருக்கிமவன் என்வூட்டு நடையில கால்வெச்சான்னா அப்புறமா கட்டைவாரியாலதான் அடிபடுவான்…. நாளைக்கு காலங்காத்தால எம்புள்ளைங்க ரெண்டையும் கூட்டிக்கிட்டுப் போயி, இவனுக்காக மொட்டை போட்டுக்கிறதுதான் எங்களுக்கு தீவாளி…. இவனுங்க ஊரெல்லாம் மேஞ்சுபுட்டு வருவானுவ…. நாங்க பொத்தி வெச்சுக்கிட்டு காத்துக்கெடக்கணும்…. ஏன்னு கேக்கப்போனா , பொண்ணாப் பொறந்தவளுக்கு இதுதான் தலையெழுத்துண்ணு சொல்லி, ஒரே கவுத்தா கவுத்துப்புடுவிய…. என்னயப்பத்தி எந்தப்பய என்ன சொன்னாலும் பரவாயில்லை…. இப்பிடியான ஒரு எச்சிக்கல பயகூட வாழுறதவிட, தனியாவே இருந்திட்டுப் போறேன்…. எம்புள்ளைங்க நாளைக்கு மானம்,மருவாதியோட வாழணுங்கிறதுதான் எனக்கு முக்கியம்…. கழுத்துக்குப் பாரமா தாலிவேற….”
ஏசிக்கிட்டே கழுத்திலயிருந்த மஞ்சள் கயித்த எடுத்து எங்கப்பா மூஞ்சையில வீசிப்புட்டு, என்னையையும் தங்கச்சியையும் இழுத்துக்கிட்டு, அழுதபடியே வீட்டுக்குப் போனிச்சு அம்மா.
பொலபொலண்ணு பொழுது விடிஞ்சுகிட்டிருக்கிறப்பவே என்னையையும், தங்கச்சியையும் கூட்டிக்கிட்டு புறப்பட்டிச்சு அம்மா. எங்கே….எதுக்குண்ணு நாம எதுவுமே கேக்கல.
பொறப்பட்டு வர்ரப்போ வாய்க்கால்கரைப் பக்கமிருந்து, வேப்பங்குச்சி வெச்சுப் பல் தேச்சுக்கிட்டு வந்தாரு கோவாலு தாத்தா.
“பாருவதி…. நைட்டு நீங்கெல்லாம் போனதுக்கு அப்புறமா, ஓம் புருசனும், அந்தச் சிறுக்கியும் யாருகிட்ட எதுவுமே பேசாமெ, பொறப்பட்டு போய்ட்டாங்க…. அதுமாதிரி யாரும் எதுவுமே கேக்கவே இல்லை…. எங்கே போனாங்கண்ணு யாருக்குமே தெரியல….
அதுசரி…. இந்தக் காலங்காத்தால புள்ளைங்களையும் கூட்டிக்கிட்டு….”
அவங்க பேசி முடிக்கிறத்துக்குள்ள அம்மா பதில் சொல்லிச்சு.
“சுடுகாட்டுக்குப் போறோம்….. நேத்து நைட்டு இந்தப் புள்ளைங்களோட அப்பன் மண்டையைப் போட்டுட்டான்…. மொட்டை போட்டு, கொள்ளிக்குடம் ஒடைச்சிட்டு வரணுமில்லியா…..
பேசிக்கிட்டே நிக்காம எங்களையும் இழுத்துக்கிட்டு நடந்திச்சு எங்கம்மா.
நேரா டவுனுக்குப் போனோம். அம்மாவுக்குத் தெரிஞ்ச நகைக்கடைக்கு கூட்டிப்போனிச்சு. அம்மா காதிலமட்டும் ஒருசோடி தோடு இருந்திச்சா…. அதைக் குடுத்து துட்டு வாங்கிச்சு.
அப்புறம் ஜவுளிக்கடைக்கு கூட்டிப் போனிச்சு. தங்கச்சிக்கு பூப்போட்ட சட்டை. எனக்கு ஸ்பைடர்மேன் ட்ரெஸ்சு. அம்மாக்கும் ஒரு சேலை வாங்கிச்சு.
முடிவெட்டுற கடைக்கு கூட்டிப்போயி எனக்கு மொட்டைபோட வெச்சிச்சு. நேரா ஆத்துக்குபோயி குளிச்சோம். அங்கையே எங்களுக்கு புது ட்ரெஸ்சு.
அம்மாவும் புதுசேலை கட்டிச்சு. ஆனா, அது வெள்ளை வெளேராய் இருந்திச்சு. பாக்கிறப்போ நெஞ்சுக்குள்ள என்னமோ பண்ணிச்சு. என்னண்ணு சொல்லத் தெரியல.
நேரா கோயிலுக்கு கூட்டிப்போனிச்சு. விபூதி பூசி சந்தனம், குங்குமப் பொட்டெல்லாம் எங்களுக்கு அழகா வெச்சுவிட்டிச்சு. தனக்கு விபூதிய மட்டும் பூசிச்சு………..
முடிஞ்சுபோன கதைங்க எல்லாத்தையும் நெனைச்சுக்கிட்டு, வீட்டுக் கூரையைப் பாத்தேன்.
“ஒங்கள யாரு பாக்காட்டியும், நானு கண்டிப்பா பாத்துக்குவேன்…..”
சொல்லிக்கிட்டே கூரையில ரொம்ப ஓட்டை போட்டுகிட்டு, உள்ளை எட்டிப்பாத்துகிட்டிருந்திச்சு நெலா.
தங்கச்சி நல்லா தூங்கிகிட்டிருந்திச்சு.
நானு எங்கம்மா முதுகோட அணைஞ்சு ஒக்காந்துகிட்டேன். திரும்பிப் படுத்த அம்மா என்னய தன்னோட நெஞ்சோட அணைச்சுக்கிடிச்சு.
“தூங்கலியாப்பா…….”
கேட்டுக்கிட்டே என் தலைய தடவிவிட்டிச்சா…. வானத்தில பறந்துபோறமாதிரி இருந்திச்சு…..”
அம்மா வேர்வை ஒட்டிக்கிட்டிருந்த சேலயிலயிருந்து வர்ர மணத்தை மோந்து பாக்கிறப்போ, அதுக்கு என்ன சொல்ரதிண்ணு எனக்கு தெரியல…. ஆனா, மோந்துகிட்டே தூங்கணும்போல இருந்திச்சு….
என்னமோ தெரியல்ல….. அந்த நேரத்தில பாத்து, எங்கவீட்டு மேலவரிசையில, நாலாவது வீட்டு பரசு மாமாவும், ராமாயி அத்தையும் என் நெனைப்பில வந்தாங்க.
பரசுமாமா ஒரு லாரில கிளினரா இருக்காரு. சனி,ஞாயிறு நாளில மட்டுந்தான் வூட்டுக்கு வருவாரு. அதுவும் ரொம்பக் குடிச்சிட்டே வருவாரு.
ராமாயி அத்தையும் எங்கம்மாபோல பீடிதான் சுத்துவா. பீடிக்கடையில எலை குடுக்கிற சேதுமாமா, ராமாயி அத்தை வூட்டுக்கு ரொம்பத்தடவை வருவாங்க. சாப்பிடுவாங்க. துட்டெல்லாம் குடுப்பாங்க.
அப்பப்போ அவுங்களுக்குத் தொணையா நைட்டு தங்கீட்டு, அதிகாலையில போயிடுவாங்கண்ணு, ராமாயி அத்தை பையன் குமாரு எங்கூட கோலி வெளாடுறப்போ சொல்லியிருக்கான்.
தனக்கு அழகான சட்டை , செருப்பு , பென்சில் , நோட்டுண்ணு வாங்கிக் குடுக்கிறதாகூட சொல்லியிருக்கான்.
அதே சேதுமாமா இண்ணிக்கு சாயங்காலம் எங்க வூட்டுக்கு வந்து, எங்கம்மாகிட்ட என்னமோ பேச, அம்மா ரொம்பக் கோவமா திட்டி அனுப்பினதை நான் பாத்தேன். அப்போ நானு கோலி வெளாடிகிட்டிருந்ததால, என்னண்ணு கேக்கல.
பரவாயில்ல. அப்புறமா கேட்டுக்கலாம்….!
நைட்டில தூங்கிறப்போ, அம்மா நடுவில தூங்க, நானும் தங்கச்சியும் ரெண்டு சைடிலும் தூங்குவோம்.
ஒரு கையைத் தூக்கி , அம்மா கன்னத்தில படம் வரிஞ்சுகிட்டே கேட்டேன்.
“ யேம்மா………..”
“சொல்லுப்பா……”
“இண்ணிக்கு சாயங்காலம் பீடிக்கடை சேதுமாமா இங்க வந்தப்போ, ஏதோ சத்தம்போட்டு வெரட்டிவுட்டியே….. ஆனா, ராமாயி அத்தையெல்லாம் அப்பிடியொண்ணுமே பண்ணலியே…. அவங்களுக்கெல்லாம் அந்த மாமா எம்புட்டுத் துட்டெல்லாம் குடுக்காங்க தெரியுமா…. குமாரு பயலுக்கு அவரு குடுக்கிறப்போ, ரொம்பத்தடவை நானே பாத்திருக்கேன்….
அதுமாதிரி, நம்ம வூட்டுக்கும் வந்தாருண்ணா, நமக்கும் துட்டுக் கெடைக்கும். நல்ல டாக்டரா பாத்து மருந்து வாங்கினா, உனக்கு சீக்கிரமா கொணமாகிடுமில்லியா….
அம்மா என்னய ரொம்பக் கோவமா பாத்திச்சு.
“நான் என்ன தப்பா பேசிட்டேன்….” கொழம்பிக்கிட்டேன் நானு.
அடுத்து, கொஞ்ச நேரத்தில என்னய அணைச்சுக்கிரிச்சு.
“அப்பிடி துட்டுவாங்கி, டாக்டரைப் பாத்து, நோயை சொகமாய் ஆக்கிறதைவிட , டாக்டரையே பாக்காம செத்துப் போயிடலாம்…..”
எனக்கு ரொம்பவும் பயமாப் போயிரிச்சு. அழுதுகிட்டே கேட்டேன்.
“யம்மோ….. நீ என்னதான் சொல்லுறே…..”
“ஆமாப்பா…. நீ சின்னப் புள்ள….. உனக்குப் புரியாது…. ராமாயி அத்தைபோல துட்டுவாங்கிக்கிறது நல்ல பொழைப்பு இல்லைப்பா….. அப்பிடி வாங்கிப் பொழைச்சா சாமிகூட மன்னிக்காது…..”
“அதுக்காக எதுக்கு நீ செத்துப்போகணும்னு பேசிறே…..”
அம்மா என்னய இன்னும் பலமா அணைச்சுக்கிரிச்சு.
நான் கேட்டேன்.
“நீ சொன்னமாதிரி ஆயிருச்சின்னா, அப்புறமா எங்களை யாரும்மா பாத்துக்குவா…..”
“நானு இருக்கிறவரைக்கும் நேர்மையா இருந்திட்டேன்னா, அப்புறமா நானு இல்லாமல் போனாலும், நிச்சயமா உங்களை கடவுள் காப்பாத்துவாரு…. நானு தப்பா போனாத்தான் அந்தப் பாவம் ஒங்களைப் புடிக்கும்…. இத மனசில ஆழமா வெச்சுக்கப்பா…..”
“சரிம்மா…. இனிமேல் நான் இப்பிடியெல்லாம் பேசமாட்டேன்…. மன்னிச்சுக்க…..”
அம்மாவின் கண்ணிலயிருந்து கண்ணீர் வழிஞ்சிச்சு. கையால தொடைச்சுவுட்டேன்.
அம்மாவே பேசிச்சு.
“இனி இந்த ஊரு நமக்கு சரிப்பட்டு வராதுப்பா…. இந்த ஜனங்க எப்பவுமே ஒறங்கிக்கிட்டுத்தான் இருப்பாங்க…. அவுங்களும் எந்திரிக்க மாட்டாங்க…. எந்திரிக்கப் போறவங்களையும் விடமாட்டாங்க…. நாம வெளியூரு எங்காச்சும் போயிடுவோம்….”
அம்மா சொல்லி முடிக்கலை. அதுக்குள்ளை வாசல்பக்க தட்டிக்கதவ பிரிச்சுக்கிட்டு ரெண்டுபேரு உள்ளையே வந்துட்டானுவ.
“எங்களுக்குத் தெரியாமெ நீ எந்த ஊருக்குடி போகப்போறே…. விட்டுருவோமா…..”
அது சேதுமாமா. பக்கத்தில நாட்டாமை நாச்சிமுத்து தாத்தா. ரெண்டு பேருகிட்டயிருந்தும் ஜாஸ்தியா சாராய வாடை வந்துகிட்டிருந்திச்சு.
படுத்துக்கிட்டிருக்கிற எங்கம்மாமேல வுழுந்து, அம்மா வாயையும், மூக்கையும் ஒருகையால பொத்திக்கிட்டு மல்லுக்கட்டி உருண்டுகிட்டாங்க சேதுமாமா.
நாட்டாமைக்காரரு முதுகுப் பக்கமிருந்து சட்டைக்குள்ளால ஒரு வீச்சரிவாளை கையில எடுத்து, எனக்கு நேரா புடிச்சாரு.
“வெட்டிப்புடுவேன் ராஸ்கல்…. கண்ணுரெண்டையும் மூடிக்கிட்டு குப்புறப் படுடா….”
எனக்கு ஒதறத் தொடங்கியிரிச்சு. மேலை எதுவுமே பண்ணத் தோணலை.
எதுவுமே கேட்டுக்காது, தன்னை மறந்துபோயி தூங்கிக்கிட்டிருந்தா தங்கச்சி.
எங்கம்மா பலம் கொஞ்சம் கொஞ்சமா கொறைஞ்சுகிட்டு வர்ரது தெரிஞ்சிச்சு. சேதுமாமா மட்டும் வேகமா மூச்சுவிடுற சத்தம் கேட்டிச்சு.
அந்தநேரம் பாத்து எனக்குள்ள அப்பிடி ஒரு வேகம் எப்பிடி வந்திச்சோ தெரியல.
படுத்துக் கெடந்தபடியே ஒரு காலை மொடக்கி, ஓங்கி நாட்டாமை கால்ல ஒரு எத்து, வைத்தேன். அவரு தடுமாறி விழுந்தப்போ, கையில வெச்சிருந்த வீச்சரிவா எங்கம்மா கைக்குப் பக்கத்தில போயி வுழுந்திச்சு.
அடுத்த நிமிசம், அந்த வீச்சரிவாளை வசமா கையில புடிச்சுக்கிட்ட அம்மா, ஒரு திமுறு திமுறிச்சு பாருங்க….
சேதுமாமா உருண்டுகிட்டே போயி, எந்திரிக்க ட்ரை பண்ணினாரு. அதுக்குள்ள எங்கம்மா, வீச்சரிவாளால போட்ட போட்டில, அவரு தலை மட்டும் துண்டா வுழுந்திச்சு.
தரையெல்லாம் ஒரே ரத்தக்காடா ஆகியிரிச்சு.
இதைப் பாத்த நாட்டாமை, வெளிய ஓடப் பாஞ்சாரு. நானு அவரு காலில ஒண்ணை இழுத்துப் புடிச்சேன். அம்மாவும் விடல்லை.
கையிலயிருந்த வீச்சரிவாளுக்கு வேலை குடுத்திச்சு. நான் இழுத்துப் புடிச்சுக்கிட்டிருந்த அவரு காலு, முழங்காலோட துண்டா வந்திரிச்சு.
“அய்யய்யோ…. எங் காலுபோச்சே…….” பயங்கரமா அலறினாரு.
எனக்குள் ஒரு குழப்பம் தெரிய அம்மாவைப் பாத்தேன்.
“ஏம்மா…. தலையே துண்டா போனவருகூட மூச்சுக்காட்டாம கெடக்காரு….. காலுபோனவரு எதுக்கும்மா இந்தக் கத்து கத்துறாரு…..”
அந்தக் கோவத்திலகூட எங்கம்மா குலுங்கிக்கிட்டே சிரிச்சிச்சு.
கண்ணில ரொம்ப கோவத்தை காட்டிக்கிட்டே , எங்கழுத்தில கையை வெச்சு நசுக்கினாரு நாட்டாமை.
“ஏலே…. செருக்கி மவனே…. ஆத்தாளும் புள்ளையுமா எங் கால வெட்டிப்புட்டிய இல்லியா…. இப்ப பாருடா…. ஓங் கழுத்த நானு கையிலயே பிச்சுப்புடுறேன்….”
“ஏலே நாட்டாமை….. ஏம் புள்ளைமேல கைய வெச்சியா…. இனி உனக்கு கையும் ஒண்டிதாண்டே ….”
சொல்லிக்கிட்டே நாட்டாமையோட பின்பக்கத் தோளிலே வீச்சரிவாளால ஒரு போடு போட்டிச்சு எங்கம்மா.
நாட்டாமை சுருண்டு விழுந்தப்ப சத்தத்தையே காணல.
அம்மா என்னைய பாத்து அவசர, அவசரமாய் சொன்னிச்சு.
“ஓடிப்போயி கோவாலு தாத்தாகிட்ட சொல்லிட்டுவா….”
“நான் மட்டும் எதுக்கு போகணும்…. தங்கச்சியையும் கூட்டிக்கிட்டு நீயும் வாம்மா….”
“இல்லைப்பா…. அம்மா இப்போ கொஞ்சம் அசிங்கம் ஆகிட்டேன்…. சுத்தப் படுத்திக்கணும்மில்லியா…. தங்கச்சியும் இனி அம்மாகூடத்தான் இருக்கணும்…. தூங்கிக்கிட்டிருக்கா இல்லியா…. அவ தூக்கத்த யாருமே கெடுக்க வேணாம்.... நிம்மதியா தூங்கட்டும்….. சரியாப்பா…..”
சொல்லிக்கிட்டே என்னையை, நெஞ்சோட அணைச்சு மாறி,மாறி முத்தம் குடுத்திச்சு.
“அடுத்த சென்மம்னு ஒண்ணு இருந்திச்சிண்ணா ஒனக்கு புள்ளையாப் பொறப்பேன்…..”
அம்மா இன்னும் சொன்னிச்சு.
“அப்பன் தப்பு பண்ணினமாதிரி, புள்ளையும் இருக்காண்ணு பேரு எடுக்காம, அவங்க அம்மாக்காரி மானத்தோட வாழ்ந்த மாதிரி மவனும் வாழுராண்ணு பேரு எடுக்கணும்…. எம்புட்டுத்தான் கஷ்டம் வந்தாலும், அதையெல்லாம் சமாளிச்சுக்கிட்டு, ஆம்புளை சிங்கமா வளந்து, பெரிய ஆளா ஆகணும்….”
அம்மா சொல்றதெல்லாம் புதுசு புதுசா இருந்தாலும், அதெல்லாமே புரியிறமாதிரி எனக்கு தோணிச்சு. தலையை மட்டும் ஆட்டினேன்.
கோவாலு தாத்தா வூட்டுக்குபோயி, அவங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லி முடிச்சப்போ, எல்லாரும் ஆடியே போய்ட்டாங்க.
அடுத்த நிமிசம் எங்கம்மா, தங்கச்சியோட பயங்கரமான அலறல் சத்தம், அத்தோட நாட்டாமை சத்தமும் சேந்து ஊரையே உலுக்கீரிச்சு.
ஆமாங்க…. எங்க வூடு பத்திக்கிட்டு எரியிது. அதுக்குள்ள எங்கம்மாவும், தங்கச்சியும் இருக்கிறது நெசம். கூடவே நாட்டாமையும், சேது மாமாவும் எரியிறதும் நெசந்தான்.
எங்கம்மா, தங்கச்சி அலறும் சத்தத்தில் நானு எரிஞ்சுகிட்டிருந்தேன்.
என்னையையும்,தங்கச்சியையும் கோவாலு தாத்தா வூட்டுக்கு அனுப்புறப்போ கடைசியா எங்ககிட்ட போட்ட “பில்ட்-அப்” எல்லாமே இதுக்காம்மா….
“அம்மா….. அம்மா……………….”
சத்தம்…………..போட்டுக் கத்திக்கிட்டே பாயப்போன என்னயை யாரோ வந்து இழுத்துப் பிடிச்சு, அங்கிட்டுத் தூக்கீட்டுப் போனாங்க.
கண்ணுரெண்டும் இருட்டிக்கிட்டே வந்திச்சு. அம்மா, தங்கச்சி, மூஞ்சி மட்டும் வெளிச்சமாத் தெரிஞ்சிச்சு.
கண்ணை முழிச்சுப் பாத்தப்போ, கோவாலு தாத்தா வூட்டு பின்பக்க ஸ்டோரு ரூமுக்குள்ள பாயில படுத்துக் கெடந்தேன். கோவாலு தாத்தா மக கண்ணம்மா அத்தை ஒரு ஓரமா ஒக்காந்து அழுதுகிட்டிருந்திச்சு.
சன்னல் கிரில்வழியா வெளிய பாத்தேன். சாயங்காலம் ஆகிரிச்சு.
எங்கம்மாக்கு அப்புறமா, எங்கிட்ட பாசமாப் பேசிறது கண்ணம்மா அத்தை ஒண்ணுதான்.
கண்ணம்மா அத்தை ஒரு தட்டில சாதம் போட்டு பெசைஞ்சுகிட்டே வந்திச்சு.
“ராத்திரியிலயிருந்து நீ ஒண்ணுமே சாப்பிடாம வெறுவயித்திலயே இருக்கே…. அத்தை ஊட்டி விடுறேன்….. எந்திரீப்பா …..”
“எங்கம்மா பத்தி ஏதாச்சும் தெரியுமா அத்தை….?”
கேட்டேன் நானு.
கண்ணம்மா அத்தை தரையைப் பாத்து அழுதுகிட்டே இருந்திச்சு.
“சொல்லுங்க அத்தை…..”
மெதுவா நிமிந்து என்னய பாத்திச்சு.
“நாலுபேருமே சாம்பலா போய்ட்டாங்கப்பா…. சேதுவும், நாட்டாமையும் சாகவேண்டியவங்கதான்….. இதில உங்கம்மாவும்,தங்கச்சியும் செத்ததுதான் வயித்தெரிச்சல்…..”
“அப்பிடீன்னா, இனி எனக்கிண்ணு ஒருத்தருமே இல்லியாத்த…. எனக்கு சோறு ஊட்டிவிட அம்மா….. எங்கூட சேந்து வெளாட தங்கச்சி…. இனி யாரு வருவா அத்தை….”
கண்ணம்மா அத்தை ரொம்ப மெதுவா பேசிச்சு.
“இந்தா பாருப்பா…. நைட்டு நீ ஓடிவந்து சமாச்சாரத்த சொன்ன கையோட, உங்கம்மா தனக்கும் தங்கசிக்கும் கெரசினை ஊத்திக்கிட்டு, தீயைக்கொழுத்திக்கிரிச்சு…. ஏற்கனவே செத்துப்போன சேதுவும், இந்தா அந்தான்னு இழுத்துக்கிட்டிருந்த நாட்டாமையும் இவங்ககூட சேந்து எரிஞ்சுகிட்டாங்க…. போலீசு வந்திச்சு….பத்திரிகைக்காரங்க, அவங்க இவங்கண்ணு பெரிய கும்பலே வந்திச்சு….. வெசாரணை, அது இதெண்ணு ஒரே கலக்கு….. நீ எங்க வூட்டில இருக்கிறது தெரியாமை நீயும் எரிஞ்சிட்டியா, இல்ல எங்கயாச்சும் ஓடிப்போய்ட்டியான்னு வெசாரணைக்குமேல வெசாரணை…..”
“அப்பிடீன்னா என்னய உசுப்பிவிட்டு எந்திரிக்கவெச்சிருந்தா, நான் போயி நடந்ததை போலீசுகிட்ட சொல்லியிருப்பேனில்லியா….”
கொஞ்சம் சத்தமா பேசப்போன என் வாயைப் பொத்திச்சு கண்ணம்மா அத்தை.
“ சத்தம் போட்டிடாத…. சேதுட ஆளுகளும், நாட்டாமையோட ஆளுகளும் பணத்தாலயே சட்டத்த வெலைக்கு வாங்கியிருவானுங்க….. உங்கம்மாமேலதான் தப்பு இருக்கிண்ணு கதையையே மாத்திப்புடுவானுக…. நல்ல ஒழுக்கத்தோட வாழ்ந்த ஒங்கம்மா செத்ததுக்கு அப்புறம் கெட்டபேரு எடுக்கணுமா சொல்லு….. அதுமட்டுமில்லாம அந்தப் பசங்க உன்னைய தேடிப்புடிச்சு வெட்டணும்ணு வெறியோட அலையிறானுவ…. அப்பிடி ஏதாச்சும் நடந்திரிச்சிண்ணாலும், ஒனக்கு ஆதரவா பேச யாருமே வரமாட்டாங்கப்பா…. ஊரு கட்டுப்பாடு, அது இதுண்ணு அறுவத்தெட்டு காரணத்த சொல்லி கைய விரிச்சிடுவாங்களே தவிர,உம்மை பேசவோ, நாயத்த சொல்லவோ வரமாட்டானுவ…. ”
கையு, காலு, மேலு பூரா நடுங்கிக்கிட்டே இருக்கு. பல்லோட பல்லு ஒண்ணோட ஒண்ணு ஒட்டிக்கிட்டமாதிரி, பேசவே கஷ்டமா இருக்கு…. எனக்குள்ள என்னமோ விண்ணுண்ணு இழுக்கிறமாதிரி தெரியிது. மெதுவாவே பேசினேன்.
“அப்பிடீன்னா நானு என்ன பண்ணணும் சொல்லுங்கத்தை….”
“பயப்பிடாத….. பார்வதி அக்காகூட பழகின பாசத்துக்காக இந்த ஒதவியும் செய்யேல்லன்னா நானெல்லாம் என்ன பொறப்பு….. கெழக்கை ஆத்துக்கு அந்தப்பக்கமா எங்க பெரியண்ணன் இருக்காரு தெரியுமில்லே….”
“தெரியுமே…. ஒரு கறுப்புக்கலர் பைக்கில வருவாங்களே…. அந்த மாமாதானே….”
“ஆமா…. பெரியண்ணன்கிட்ட வெவரம் எல்லாத்தையும் தெளிவா போன்பண்ணிச் சொல்லிப்புட்டேன்…. அவங்க நிச்சயமா ஒனக்கு ஹெல்ப்பு பண்ணுறதா சொல்லியிருக்காங்க…. ஆனா, ஊரு இருக்கிற சிட்டிவேசனில அவங்க பைக்கில வந்து ஒன்னய கூட்டிக்கிட்டு போறது இப்போ சரிப்பட்டு வராது….. அதனால நைட்டு பன்ரெண்டு மணி ஆவட்டும்…. வீட்டுக்கு பின் வாசல்புறமா உன்னய கூட்டிக்கிட்டு, வயக்காட்டு வரம்பு வழியா போயி, ஆத்தங்கரையில விட்டுடுறேன்…. நம்ம நல்லநேரத்துக்கு இப்போ ஆத்தில தண்ணி, இடுப்புக்கும் கம்மியாத்தான் போகுதுண்ணு பேசிக்கிட்டாங்க…..”
“நெசந்தான் அத்தை….. நேத்துக் காலையிலகூட ஆத்துக்குப் போயிருந்தேன்….. அந்தக் கரைக்கு நடந்தே போயிடலாம்….”
“அதனாலதான் சொல்றேன்…. ஆத்தங்கரை வரைக்கும் அத்தை வந்து விட்டிட்டுப் போயிடுறேன்…. அங்கிட்டு எங்கண்ணன் வெயிட் பண்ணிக்கிட்டிருக்கும்…. அவங்ககூட போயிடு…. அவங்களுக்கு பிரெண்டு ஒருத்தரு தூத்துக்குடியில கடை வெச்சிருக்காரு…. எங்கண்ணன் உன்னய பத்திரமா கொண்டுபோயி அந்தக் கடையில சேத்திடுவாரு…. நல்லபடியா வேலைவெட்டிய பழகி, நல்ல மனிசனா வளரணும்….
புரிஞ்சிதாப்பா…..”
ஒண்ணுமே பேசாம இருந்தேன்.
“என்னப்பா யோசனை பண்ணிக்கிட்டிருக்கே…. அத்தைகிட்ட சொல்ல என்ன பயம்…. எதுவானாலும் சொல்லுப்பா….”
“ஒண்ணுமில்லை அத்தை…. இனி நானு இந்த ஊருக்கு வருவேனா, வரமாட்டேனா தெரியாது….. வயக்காடு போறவழியிலதானே எங்க வீடும் இருக்கு…. வீட்டுக்கு பின்பக்கமா போயி, ஒருதடவை அதைப் பாத்திட்டுப் போகலாம்ணு ஆசையா இருக்கு…..”
“என்னத்தைப் பாக்கப்போறே…. எல்லாமே எரிஞ்சுபோச்சே….”
“இல்லை அத்தை…. ஏம்புட்டு நெனைப்பெல்லாம் அப்பிடியேதான் இருக்கு…. அதை யாராலயுமே எரிக்க முடியாதில்லையா ….”
கண்ணம்மா அத்தை என்னய நெஞ்சோட அணைச்சுக்கிரிச்சு…. அதோட கண்ணிலயிருந்து வழிஞ்ச கண்ணீரு, மழை பெஞ்சமாதிரி எந்தலையில வுழுந்திச்சு….
அடிக்கடி என்னய அணைச்சுக்க அம்மாவும் இல்லை…. கண்ணம்மா அத்தையும் இனிமேல் இதுமாதிரி அணைச்சுக்க சான்சு இல்லை…. என்னய அறியாமலே அத்தையை இறுக்கமா அணைச்சுக்கிட்டேன்.
இன்னொரு அம்மாவா தெரிஞ்சிச்சு கண்ணம்மா அத்தை.
நைட்டு ஊரவுட்டு கெழம்புறப்ப போறவழியில எங்க வூட்டை பாக்க நடந்தேன்….
முன்பக்கத்தில, மண்ணுல செஞ்சு வெச்சிருந்த குட்டைச் செவருத் திண்டு எரிஞ்சு கரிபடாம இருந்திச்சு…..
நேத்தைக்கு மதியம் இந்த்த் திண்டிலதான் நானும் தங்கச்சியும் உக்காந்து வெளாடிக்கிட்டே சாப்பிட்டோம்…. பழைய சாதத்தில உள்ளிய அரிஞ்சுபோட்டு, கொஞ்சோண்டு ஊறுகாயும் வெச்சுப் பெசைஞ்சு பெசைஞ்சு எங்கம்மா ஊட்டிவுட்டிச்சு….
இதே திண்டில நிண்ணுகிட்டுத்தான் ஒருநாள் தங்கச்சி சொல்லிச்சு….,
“ “அண்ணே…. நாம பெரிய ஆளா வந்ததுக்கு அப்புறமும், இதுமாதிரி தீவாளிக்கெல்லாம் வெடி போடணும்…. மத்தாப்பூ சுத்தணும்…. அப்புறமா நாம ரெண்டு பேரும் ஒரே சைக்கிள்ள ஸ்கூலு, அப்புறமா காலேஜுன்னு போகணும்….”
மூச்சு நிண்ணு நிண்ணு வர்ரமாதிரி, நெஞ்சு குலுங்கிக்கிட்டிருக்க….. கண்ணில தண்ணி முட்டிக்கிறமாதிரி தெரிஞ்சிச்சு…..
கஷ்டப்பட்டு தொடைச்சுக்கிட்டேன்….!
தங்கச்சியும், நானும் சண்டை போட்டுக்கிட்டே சாப்பிடுறப்போ புடுங்கிப் புடுங்கி எடுக்கிற சில்வர் தட்டு எரிஞ்சு நெளிஞ்சுபோயி கெடந்திச்சு.
உள் ரூமில வெச்சிருந்த தகரப்பொட்டி, கரி புடிச்சுக் கவுந்து கெடந்திச்சு…. ஓரமா போயி, ஒரு கம்பால தட்டி பொரட்டு பொரட்டினேன்…..போன பொங்கல் டயிமில, எங்கப்பா எங்ககூட இருந்தப்போ நாலுபேரும் சேந்து, எங்க வூட்டுக்கு முன்னாடி வெச்சு எடுத்துக்கிட்ட போட்டோ. எங்க ஊரு பக்கமாயிருக்கிற ஒரு போட்டோ ஸ்டூடியோகாரரு , பொங்கல் டயிம்ல ஊர் ஊரா வந்து, கொறைஞ்ச ரேட்டில எடுத்துக் குடுத்தது அது.
பிரேம் போட்டிருந்த கண்ணாடி, நொருங்கிப்போய் கெடந்திச்சு. போட்டோ மேலயும் லேசா தீப்பிடிச்சு, அப்பா மூஞ்சிமட்டும் எரிஞ்சுபோயிருந்திச்சு. அம்மா, தங்கச்சி, நானு எல்லாம் சிச்சுக்கிடே இருந்தோம்.
உசிரோட இருக்கிற அப்பா, போட்டோல எரிஞ்சிருக்காரு. நெசத்தில எரிஞ்சுபோன அம்மாவும், தங்கச்சியும் போட்டோல சிரிச்சுக்கிட்டிருக்காங்க.
போட்டோல மட்டுமில்ல. என்னோட நெனைப்பிலயுந்தான்.
பக்குவமா அந்தப் போட்டோவ உரிச்செடுத்து, தங்கச்சிக்கும் அம்மாக்கும் முத்தம் குடுத்திட்டு, கவனமா சட்டைப் பைக்குள்ள வெச்சுக்கிட்டேன்.
கண்ணம்மா அத்தை நிமிந்து என்னய பாத்திச்சு.
“ அத்தை…. இந்த ஊரைவுட்டு ஒத்தையில போரேன்னு இம்புட்டு நேரமும் கொஞ்சம் கவலையா இருந்திச்சு…. இப்ப அதுக்கு சான்சே இல்லை…. ஏங்கூட அம்மாவும், தங்கச்சியும் வர்ராங்க…..”
அத்தை திரும்பவும் என்னய அணைச்சு முத்தம் குடுத்திச்சு.
“ நெசந்தாம்பா…. எல்லாமே எரிஞ்சுபோன நெலையிலயும், அவுங்க போட்டோமட்டும் எரியாம ஒனக்கிண்ணு காத்துக் கெடந்ததை பாக்கிறப்ப, அவுங்க ரெண்டுபேருமே எப்பவும் ஓங்கூட தெய்வமா இருக்கிறது உறுதி…. நிச்சயமா நீ ஜெயிப்பே…..”
அத்தையோட கையைப் புடிச்சுக்கிட்டு வயல்வெளிப் பாதையில ஆத்துப்பக்கமா நடந்துகிட்டிருக்கேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.