நதியில் நகரும் பயணம் (13) - புருஜ் (Bruges, Belgium)) - நடேசன் -
- காதலர் ஏரி -
அடுத்த நாள் நாங்கள் பஸ்ஸில் ஒல்லாந்தின் பக்கத்து நாடான பெல்ஜியம் சென்றோம் . ஆனால், அங்கு டச்சு மொழி கலந்த ஃபிளாமிஸ் (Flemish)மொழி பேசுவார்கள். சிலமணி நேரத்தில் அங்கு செல்ல முடிந்தது. பெல்ஜியம், நெதர்லாந்திலிருந்து உருவாக்கிய நாடு. அதன் கசப்பு இன்னமும் எங்கள் டச்சு நாட்டின் வழிகாட்டியின் வார்த்தையில் தெரிந்தது. நெப்போலியன் படையெடுப்பின் பின்பாக நெதர்லாந்திலிருந்து பெல்ஜியம் பிரிந்து உருவாகிறது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான்போல்,
மத்தியகால புரூஜ் நகரின் மத்திய பகுதியில் அழகான சந்தை வெளி (Market square) உள்ளது . இதனை சுற்றி அக்கால நகர மண்டபம், தேவாலயம், கடைகள், மணிகோபுரம் (Bell Tower) உள்ளன. அதனருகே அங்குள்ள ஒரு பெரிய தேவாலயம் உள்ளது. அதன் பலிபீடத்தில் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தோய்ந்த துணி, சிறிய கண்ணாடி சீசாவில் வைக்கப்பட்டுள்ளது . அதைக் கேட்டபோது எனக்கு தலையைச் சுற்றியது . மதங்களில் பல நம்பமுடியாத விடயங்கள் உள்ளன என்றாலும் அது கொஞ்சம் கூடுதலாக இருந்தது. சிலுவை யுத்தத்திற்காக ஜெருசலோம் போனவர்கள் கொண்டு வந்து புனித இரத்தத்தை வைப்பதற்காக 12 ஆம் நூற்றாண்டில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது .