இலண்டனூடாக கங்காரு தேசம் - 3 - ஶ்ரீரஞ்சனி -
இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும், அழகும் செழிப்பும் மிக்க இலங்கையில் பிறந்த எங்களை, அந்த நாட்டில் வாழவிடாமல் துரத்திய விடயங்கள் எங்களுக்கு ஆற்றொணா வேதனைகளையும் இழப்புகளையும் விளைவாக்கியிருந்தாலும்கூட, பல்வேறு நன்மைகளையும் செய்திருக்கின்றன என்பதை எவரும் மறுக்கமுடியாது.
உதாரணத்துக்கு, புலம்பெயர்ந்த நாடுகளில் எங்களுக்குக் கிடைத்திருக்கும் குடியுரிமை நாங்கள் வாழ்கின்ற நாடுகளுக்குள் மட்டுமன்றி, வெளியேயும் எங்களுக்குப் பல தரப்பட்ட அனுகூலங்களை அள்ளித்தந்திருக்கிறது. அவ்வகையில் உலகெங்கும் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் வசதியைப் பயன்படுத்தி அவுஸ்ரேலியாவுக்குப் போகவேண்டுமென்பதுதான் என் நீண்டநாள் கனவாக இருந்தது. என் உற்ற சினேகிதிகள், சகமாணவர்கள், அயலவர்கள் என மனதுக்கு நெருக்கமான பலர் வாழும் அவுஸ்ரேலியாவில்தான் சொந்தச் சகோதரங்களைவிட மேலான சகோதர வாஞ்சையுடன் பழகும் முருகபூபதி அண்ணாவும் வாழ்கிறார் என்பதும் அதன்மேலான மோகத்துக்கும் தாபத்துக்கும் காரணமெனலாம்.
கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ற் கல்லூரியில் நான் கற்பித்துக்கொண்டிருந்த காலங்களில், சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், யோகா பாலச்சந்திரன், ராஐ ஶ்ரீகாந்தன், சோமகாந்தன், பத்மா சோமகாந்தன் எனப் பல இலக்கியக்காரரின் அறிமுகம் கிடைத்திருந்தது. அவ்வகையில் அறிமுகமாகியிருந்த முருகபூபதி அண்ணாவுடனான உறவு அவர் என் அப்பாவின் மாணவர் என்ற முறையில் இன்னும் சற்று நெருங்கியதாகவே இருந்தது.