'தீர்த்தக்கரை' சாந்திகுமாரின் சமூக, அரசியற் செயற்பாடுகள் பற்றியதொரு பார்வை! (1-2) - ஜோதிகுமார் -
திரு.சாந்திகுமாரின் எழுத்துக்கள் இரு தளங்களில் உருவாகின. ஒன்று இலக்கியம். மற்றது சமூக-அரசியல்-வரலாற்று கட்டுரைகள். இலக்கியம் அவரது சிறுகதைகளையும், இலக்கிய விமர்சனங்களையும், உலக இலக்கியத்தின் மொழிபெயர்ப்புகளையும் உள்ளடக்கும். அவரது சமூக வரலாற்று அரசியல் கட்டுரைகள் மலையக வரலாறு, மலையக சமூக உருவாக்கம், தத்துவ அரசியல் விமர்சனங்கள் என்ற வகையில் வகைப்படும். இங்கு, அவரது அரசியல் சார்ந்த தத்துவார்த்த பார்வை பின்புலமாய் இருக்க இன – சாதீய அடிப்படைகளை கேள்விக்குட்படுத்திய கட்டுரை இது.
1
"ஒவ்வொரு முன்னெடுப்பும் மனிதனாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. அவை, ஒவ்வொன்றும் மனிதனாலேயே, மேலும், பிரமாண்டமடைகின்றன." -மக்ஸிம் கார்க்கி-
“மலையகம்”; என்ற குறியீடு, பல கேள்விகளையும், பதில்களையும் உள்ளடக்கிய ஒரு யதார்த்தம் என 1980களில் நந்தலாலா எழுத நேர்ந்தது. ஒரு 200 வருட கால நகர்வின் பின்னர் மலையகம் என்ற இவ்யதார்த்தம், வந்து சேர்ந்திருந்த, ஒரு வரலாற்று புள்ளியை, தன் வாழ்வின் மிக ஆரோக்கியமான காலப்பகுதியில், சரியாக எதிரொலித்த ஒரு சிலரில், சாந்திக்குமாரின் பெயர் மிக துலாம்பரமானது என்பதிலேயே அவரது முக்கியத்துவம் உள்ளடக்குகின்றது எனலாம். அது காலம் வரை, மலையகம் தொடர்பில் பனிமூடம் போன்ற ஓர் கற்பனை படர்ந்த கலங்கலான கருத்துப்படலமே எங்கும் பரவியிருந்ததாய் காணப்பட்டது. இது பொதுவானது. அதாவது, பனிமூடங்கள் என்பன உலகில் பொதுவானவைதான். ஏனெனில் கனவுகளிலும், பனி மூடங்களிலும் ஜீவிதம் நடத்துவதென்பது ஒருவகையில் வசதிகளையும், வாய்ப்புகளையும் உள்ளடக்குவதுதான் என ஆகிறது – யதார்த்தம் அதன் குரல்வலையை நசித்துப் போடும் வரை.
2
இவ்வகையில், இடதுசாரிகளின் கனவுகளிலும், மலையகம் என்ற இவ்யதார்த்தம், ஒரு பிரச்சினைகளும் இல்லாததாய் ஜீவிதம் கண்டது–புரட்சி வரட்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன். இருந்தும், 1930களில், இடதுசாரிகளின் கோட்டைகள் என வர்ணிக்கப்பட்ட இம்மலையகம், 50களில் தமது கட்சிகளின் தத்துவார்த்த புரள்வுகளினாலும், உள்ளிருந்து முகிழ்த்த புதிய யதார்த்தங்களினாலும், தன் இடதுசாரி சோபையை ஓரளவு களையத் தொடங்கியிருந்தது எனலாம்.