கிளிம்மின் சரித்திரம் - கார்க்கியின் இறுதி நூல் ஓர் அறிமுகம்! (சென்ற இதழ் தொடர்ச்சி) - ஜோதிகுமார் -
கார்க்கியே ஒரு கட்டத்தில் கூறுவார்: அடிமைகளின் ஒழுக்கமுறை போலவே எசமானர்களின் ஒழுக்கமுறையும் எனக்கு அந்நியமானதுதான். கலகம் செய்ய நிமிர்ந்தவனுக்கு உதவி செய் என்ற ஒழுக்கமுறை எனக்குள் வளர்ந்திருந்தது, என. ஒரு புறம் பைபிள் போன்றவை ஏற்படுத்தியிருந்த அல்லது நியாயப்படுத்தியிருந்த ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் வசதியாக ஏந்திக் கொடு என்பது போன்ற அடிமைகளின் கலாச்சாரம். மறுபுறம், நீட்சே போன்றோர் நியாயப்படுத்தியிருந்த – ‘மக்கள் என்போர், ஒரு சிலரால் அடக்கி ஆளப்பட பிறந்தவர்களே’ என்று போதித்த முதலாளிகளின் அறம். இவ்அறங்களிடையேத்தான், தான் தனது மூன்றாவது ஒழுக்கமுறையை கைக்கொண்டதாக கார்க்கி கூறுவார்.
அவர் மேலும் கூறுவார்: “ வாழ்க்கையில் செயல்பட்டு வருகிற ஏதோ ஒரு சக்தி எல்லோரையும் விகாரப்படுத்தி வருகின்றது. அந்த ‘சக்தியைத்தான்’ இலக்கியம் பிரதிபலிக்க வேண்டுமே தவிர அது விகாரப்படுத்தி வைத்திருக்கும் ‘விஷயங்களை’ அல்ல” என்று. இக்காரணங்களின் நிமித்தமே, சாராம்சத்தில், தஸ்தவாஸ்க்கி முதல் மேலும் அநேகரில் இருந்து கார்க்கி அடிப்படையில் வித்தியாசப்படுவதாய் இருக்கிறார். இப்பார்வையில் நின்றே, கார்க்கி, கிளிம் என்ற பாத்திரத்தை அணுகி உள்ளார் என நம்பலாம். இத்தகைய ஓர் பின்னணியில் கிளிம் ஒரு புதிய படைப்பாக புதிய வார்ப்பாக தோன்றுகிறான். (இதுவரை கார்க்கி படைத்தளித்த தாயின் பாவெல், பிரம்மச்சாரி மாட்வி போன்றவர்களிடமிருந்து வித்தியாசமுற்று…)