மாறுகின்ற உலகமும் அமெரிக்காவும்! - ஜோதிகுமார் -
* ஓவியம் AI
உக்ரைன்-ரஷ்ய மோதலானது, உலகின் முகத்தைத் தீவிரமாக மாற்றியமைப்பதில் வெற்றிகண்டுள்ளது எனச் சிலர் கருதுவர். இன்னும் சிலர் இதனை ஒரு நிரந்தர மாற்றம் எனவும் வாதிப்பர். மேலும் சிலர் இது Uni Polar World என்பதிலிருந்து Multi Polar World என்ற உலகை நோக்கிய ஒரு பயணம் எனவும் விவரிப்பர்.
இது, சுவாரஸ்யமானது.
கிஷோர்-மஹுபானியும் (Kishore-Mahoubani) “அமெரிக்கா தனது இலக்கைச் சரியாகத் தேறாமல் தொடுத்துவிட்ட முட்டாள்தனமான போர் இது” என விசனிப்பர்.
ஹென்றி கிசிஞ்சரைத் துணைக்கு அழைத்து, அவர் மேலும் கூறுவதாவது: “அது ஒரு நீண்ட நண்பகல் உணவு. கிட்டத்தட்ட இரண்டுமணி நேரம். மீட்டுப் பார்க்கும்போது அவர் கூறியதின் மொத்தச் சாரமும், அமெரிக்காவானது தனது இலக்கைச் சரியாக நிர்ணயிக்காமல் போரில் இறங்கி விட்டது என்பதேயாகும்”.
கிசிஞ்சர், ஆரம்பத்தில் மாத்திரம் உக்ரைன் போருக்கு எதிராக இருந்தவர் என்பது தெரிந்ததே.
மீன் தனது இரையைக் கவ்விக்கொள்ள தன் வாயைத் திறந்து, ஈற்றில் ஒரு திமிங்கலத்தையே விழுங்க எத்தனித்தக் கதைதான் இது.
வியட்நாம் யுத்தத்தின்போது, அதனை முழுமையாகப் பார்த்து, அதனை முடிவுக்குக் கொண்டுவருவதே, அமெரிக்க நலன்களுக்குப் பாதிப்பில்லாதது எனக் கிசிஞ்சர் முடிவு செய்கின்றார்.