மலையகா: பேராற்றின் சுழிப்பற்ற அமைதியான நீரோட்டம் -தேவகாந்தன் -
1ஜனவரி 2024இல் ஊடறு பதிப்பாக இலங்கை மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பொன்று ‘மலையகா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இலங்கையின் மத்திய பகுதியின் இலக்கியத்தை மலையக தமிழிலக்கியமென்பதா, இந்திய வம்சாவழியினரின் தமிழிலக்கியமென்பதாபோன்ற அரசியல் கருத்துநிலை சார்ந்த வினாக்களுக்கு தெளிவான விடைகள் அடையப்பெறாவிடினும், அதை மரபார்ந்த வழியில்; மலையகத் தமிழிலக்கியமெனல் தகும். தேயிலைப் பரப்பின் அழகும் வளமும் கருதி மலையகப் பெண்களின் இச் சிறுகதைத் தொகுப்பையும் ஒரு பெண் படிமமாக்கி ‘மலையகா’வெனப் பெயரிட்டிருக்கிறார்கள்.
இருபத்துமூன்று பெண் படைப்பாளிகளின் நாற்பத்திரண்டு கதைகள் அடங்கிய இத் தொகுப்பு, அதன் தொகுப்பாகிய தேவை விதந்துரைக்கப்பட்ட அளவுக்கு, அதன் உள்ளுடன் விசாரிக்கப்படவில்லை. அது தொகுப்பின் சிறுகதைகள் சமகால இலக்கிய கட்டுமானம் சார்ந்ததும், விஷயம் சார்ந்ததுமான காத்திரத்தன்மை அற்றுள்ளதன் அடையாளமாகக் கருதப்பட வாய்ப்புள்ளது.
இலங்கைப் படைப்புகள் குறித்து விசேஷ கவனம் எனக்கு இருந்தவகையில் ஏப்ரலில் நூல் கையில் கிடைத்ததுமே வாசிக்கத் தொடங்கினேன். வாசிப்பில் அதன் மொழி சார்ந்ததும், கட்டுமானம் சார்ந்ததுமான கூறுகளின் பின்னடைவு இருந்தபோதும், தொகுப்பு குறித்து எழுதவேண்டுமெனத் தென்பட்டது. ஆயினும் எழுத காலம் தாழ்ந்ததில் நான் மதிப்புரை செய்த பல நூல்களுக்கும்போல ஓர் இரண்டாம் வாசிப்பைச் செய்ய நேர்ந்தது. அப்போது அடைந்த வாசிப்புச் சுகம் அலாதியானது. கட்டாயம் அதை எழுதவேண்டுமென்ற தூண்டுதல் மேலும் வலுத்தது.