அஞ்சலி: அல்வாயின் அகள்விளக்கு கலாமணி!வடமராட்சியில் முகிழ்ந்த பெருவிருட்சம் ! - ஐங்கரன் விக்கினேஸ்வரா -
வடமராட்சியில் கடந்த 1987 'ஒப்பரேஷன் லிபரேஷன்’ போது நடந்தேறிய கொடுமைகளின் கோரங்களையும் சிதைவுகளையும் முதலாவதாக ஆண்டு நினைவு கூர்வாகக் கொண்டு வெளியாகும் “கல்லறை மேலான காற்று”கவிதைத்தொகுதிக்கு முன்னுரை ஒன்று அவசியம்தானா என்பது இன்னமும் வினாவாகவே என்னிடம் உள்ளது என ஆசான் கலாமணியின் வார்த்தைகள் இன்னமும் என் மன நினைவுகளில் பதிந்துள்ளது.
இப்படித் தான் எங்கள் இலக்கிய நட்பு முகிழ்ந்தது. காற்றுக் கூட அனலாக வீசிக்கொண்டிருந்த 1988 போர்க் காலகட்டம். அவ்வேளையிலும் விடியலை நோக்கிய எழுச்சியில் சண்டமாருதமாய் எழுந்து நின்ற இளங் கவிஞர்களின் படைப்பே “கல்லறை மேலான காற்று” எனும் கவிதை தொகுப்பாகும்.
வடமராட்சி ஒப்பரேஷன் லிபரேஷன் கொடூர நினைவுகளின் அழியாத, அனல் வீசும் கவிதை தொகுப்பு ஈரோசின் மாணவர் இளைஞர் பொது மன்றத்தால் (GUYS) 1988 இல் வெளியிடப்பட்டது.
இந்நூலின் முன்னுரையில் ‘விமர்சனமாக அமையக் கூடாதென்பதனால் கவிதைகள் பற்றி தனித்தனியாகவே கருத்துக்கூறுதல் பொருத்தமன்று எனினும் இக்கவிதைகள் யாவுமே, இராணுவக் கொடுமைகள் எம்மிடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளன என்பதை வெளிக் காட்டும் பொதுப்பண்பைத் தம்மகத்தே எனக்கூறுதல் சாலப் பொருந்தும். வடமராட்சியில் நிகழ்ந்த கொடுமைகளைக் கூறும் வகையிலும் இதற்கு ஓர் இடமுண்டு’ என எழுதியுள்ளார் ஆசான் கலாமணி.
வடமராட்சி “ஒப்பரேஷன் லிபரேஷன்” ஓராண்டு நினைவுக் கவிதைகளை படைத்த இளங் கவிஞர்களின் படைப்பான “கல்லறை மேலான காற்று” எனும் கவிதை தொகுப்பாக்கு ‘அல்வைக் கலா’ எனும் எங்கள் பேராசான் கலாநிதி த. கலாமணி 31-05-1988 இல் எழுதிய முன்னுரையாகும்.