சாரங்காவின் கடலினை வரைபவள்: ரசனைக் குறிப்பு - நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -
சாரங்கா என்ற குணாளினியை எனக்கு நீண்ட காலமாகவே எழுத்து மூலமாகவே எனக்குத் தெரியும்! திரு. ஞானசேகரன் அவர்களுடைய ’ஞானம்’ சஞ்சிகையில் இவரும் கவிதை சிறுகதை எழுதுவார்;;. நானும் எழுதுவேன். ‘ஏன் பெண்ணென்று’ என்ற ஞானம் விருது பெற்ற சிறுகதைத் தொகுதியை எனக்கு அனுப்பியிருந்தார் (2004). அதன் பின்னர் லண்டனில் சாவகச்சேரி ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு நான் மேடை அறிவிப்பாளராக சென்ற வேளைதான் 2005 – 2006 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். அவரைக் குழந்தையுடன் சந்திக்க நேர்ந்தது. அது ஒரு மகிழ்வான அனுபவம் ஆனால் அன்றுகூட நேரடியாகப் பேசமுடியவில்லை. அதன் பின்னர் அவரை எனது ‘மகரந்தச் சிதறல்’ நிகழ்ச்சியில் நேர்காணலை மேற்கொண்டபோது மிக அனுபவச்செறிவோடு செய்திருந்தார்.
இன்று இந்த கடலினை வரைபவள் என்ற கவிதைத் தொகுதியை பார்க்கும்போது மகிழ்ச்சியைத் தருகின்றது. 37 கவிதைகளை அடக்கி 116 பக்கங்களில் ஜீவநதி வெளியீடாக 2022 ஆம் வெளிவந்திருக்கிறது. கவிதைகள் இப்போ பரவலாக எல்லோராலும் எழுதப்படுகின்றது. வரவேற்பான விடயம். கவிதைகளை விரும்பிப் படிப்பேன். நல்ல கவிதைகள் என்னைத் தொடர்ந்து வரும். மனோபாவத்திற்கேற்ப ஏற்ப அதனை வாசிப்பது. அது ஒரு மாயம் என்றுதான் சொல்லுவேன். இயற்கைச் சுவையோடு, அனுபவங்களோடு, மனித உணர்ச்சிகளை காட்சிப்படுத்துவது அல்லது வெளிப்படுத்துவது கவிதை. கவிதை காலத்தைப் பின்னோக்கிச் செலுத்துகிறது. திரும்பத் திரும்பச் சந்திக்கும்போது நாம் வயதை இழந்துவிடுகிறோம். ஞாபகங்களை சேகரிக்கின்ற அதனைக் காப்பாற்றுகின்ற ஒரு பெட்டியாகப் கவிதைகளைப் பார்க்க முடிகின்றது. ஆனால் பெண்களின் பெயர்கள் வயதாவதில்லை. அது போன்றுதான் கவிதைகளைப் பார்க்கின்றேன். இன்றும் பாரதியார் கவிதை பேசப்ப:டுகின்றதுதானே!