நேர்காணல் பகுதி ஆறு (இறுதிப் பகுதி) : ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
கேள்வி: சென்றமுறை கதைக்கும் போது, தூரிகையானது நிறங்களில் எப்படி தோய்த்தெடுக்கப்படுகின்றதோ அதைவிட முக்கியமாக வாழ்வில் தோய்த்தெடுக்கப்பட வேண்டி இருக்கின்றது என கூறினீர்கள். அதாவது இவ்விரு அம்சங்களுமே ஒரு ஓவியத்தின் வெற்றியை அல்லது அதன் சாரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுவதாக கூறினீர்கள். முக்கியமாக ஓவியத்தில் வெளிப்படும் கருப்பொருளானது ஓர் ஓவியரின் வாழ்க்கை யதார்த்தத்தை பிரதிபலித்தே ஆகும் என்பதனை பிக்காசோவின் ஓவியங்களை கொண்டு நீங்கள் வாதித்தீர்கள். இப்பின்னணியில் இளைய தலைமுறையினருக்கான உங்களின் செய்தி என்னபதில்: இளைய தலைமுறையினருக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு தகுதியுடையவன் என்று என்னை நான் கருதி கொள்ளவில்லை. ஆனால் இதை சொல்லலாம். அதாவது இளைய தலைமுறையினர் ஆழ்ந்து, மிக ஆழ்ந்து கடந்த கால ஓவிய பிரமாண்டங்களை கற்க வேண்டும். அது கொன்ஸ்டாபிளாக இருக்கலாம். அல்லது மொனேயாக இருக்கலாம். அல்லது பிக்காசோவாக இருக்கலாம். இது ஒரு துறை. ஆழமான, கண்டிப்பான, மிக பரந்த பரப்பிது. கடும் உழைப்பையும், அர்ரப்பணிப்பையும் கோரக்கூடியது இது.