வாசிப்பு அனுபவம்: அவுஸ்திரேலியாவில் மலர்ந்துள்ள பூமராங் மின்னிதழ் ! - தாமரைச்செல்வி -
புதிதாய் பிறந்த வருடத்தின் ஆரம்பநாளில் பூமராங் எனும் காலாண்டு மின்னிதழ் வெளிவந்திருக்கிறது. அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வெளியீடாக வந்திருக்கும் இவ்விதழ், முதற்பார்வையிலேயே எமது கவனத்தை ஈர்த்துக் கொள்கிறது. அட்டை வடிவமைப்பு இதழை ஆவலோடு புரட்ட வைக்கிறது.
ஆரம்ப காலங்களிலிருந்து அநேகமான சஞ்சிகைகள் எழுத்தாக்கங்களோடு மட்டுமின்றி ஓவியங்களுடனும் சேர்ந்தே நமக்கு அறிமுகமாகியிருக்கிறது. அவற்றை நாம் ரசித்திருக்கிறோம். அப்படியான ஒரு ஜனரஞ்சக இதழாக பூமராங் மின் இதழையும் பார்க்க முடிகிறது. சம காலத்தில் அச்சில் வரும் இதழ்கள் பல பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து தடுமாறுவதை கண்கூடாக பார்க்கிறோம்.
ஒன்றிரண்டு சஞ்சிகைகள் தவிர மற்றவை சில இதழ்களுடன் நின்று விடுவதையும் பார்க்கிறோம். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் பல மின்னிதழ்கள் இலக்கிய உலகில் தமது வரவையும் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதையும் கவனிக்க முடிகிறது.
இலக்கியம் மீது கொண்ட ஆர்வமே இவர்களை முனைப்பாக செயல்பட வைக்கிறது. அந்த விதத்தில் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்ங்கத்தினரின் இலக்கியச் செயற்பாட்டின் ஒரு அம்சமாக பூமராங் மின்னிதழின் வருகை நிகழ்ந்துள்ளது. ஒரு சஞ்சிகைக்குரிய அம்சங்களான சிறுகதை, கவிதை, கட்டுரை, சிறு குறிப்புகள், நிகழ்வுகளின் தொகுப்பு, பாராட்டுச் செய்தி என பல அம்சங்களையும் தாங்கி ஐம்பத்தைந்து பக்கங்களில் வெளிவந்திருக்கிறது இம்மின்னிதழ்.