தமிழ் விக்கி பற்றி....
எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவரது விஷ்ணுபுரம் குழுவினர் இணைந்து உருவாக்கிய தமிழ் விக்கி தளத்தைப் பார்த்தேன். இதனையொரு தகவல் சார்ந்த இணைய இதழாகத்தான் பார்க்க முடியுமே தவிர விக்கிபீடியாவின் தமிழ் வடிவமாக ஒருபோதுமே பார்க்க முடியாது என்பதை இதனைப்பற்றிய அறிமுகக் குறிப்புகளிலிருந்து உணர முடிகின்றது.
இத்தளத்தில் 'வாசகர்களே திருத்தவும் பங்களிக்கவும் வாய்ப்புள்ள பொதுத்தளம் ஆயினும் மூத்த படைப்பாளிகளும் கல்வித்துறை ஆய்வாளர்களும் அடங்கிய ஆசிரியர் குழுவால் சரிபார்க்கப்பட்டு, ஆலோசனைக்குழுவின் ஒப்புதலுடன்தான் திருத்தங்களும் பதிவுகளும் வெளியிடப்படும்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒன்றே இத்தளத்தின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் தடைக்கல்லாக நிற்கப்போகின்றது.
தற்போது நடைமுறையிலிருக்கும் விக்கிபீடியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமே யாரும் தமக்குத் தெரிந்த வற்றை எழுதலாம், தவறுகளை யாரும் திருத்தலாம் என்னும் நடைமுறைதான். அதனால்தான் பலர் உலகின் பல பாகங்களிலிருந்தும் பங்களிக்கின்றார்கள். இவர்களின் நடைமுறையின்படி இவ்விதமான செயற்பாடு இருக்காது. இதழொன்றை நடத்துவதைப்போல் நடத்த எண்ணியிருக்கின்றார்கள். முதலில் ஆலோசனைக்குழுவில் உள்ளவர்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் அல்லர். தாம் அறிந்ததன் அடிப்படையில், தமக்குச் சார்பாக சரியென்று படுவதை மட்டுமே வெளியிடுவார்கள். இந்நிலையில் இக்குழு சார்பானவர்கள் அல்லது அவர்கள் ஏற்றுக்கொண்டவர்கள் பற்றிய தகவல்களே மிக அதிகமாக இடம் பெறும். விக்கிபீடியாவின் வெற்றிக்குக் காரணமான அதன் அடிப்படை அம்சங்களையெல்லாம் மறுக்கும் 'தமிழ் விக்கி' என்னும் தளத்தின் பெயரில் விக்கி என்னும் சொற்பதம் இருப்பதே பொருத்தமற்றது.