ஆய்வு: சிலம்பில் மருதநில மக்களின் வாழ்க்கை நிலை! - முனைவர் மூ.சிந்து -
முன்னுரை
மக்கள் குழுவாக ஒருங்கிணைந்து உருவாக்குவது சமூகமாகும். அத்தகைய சமூகத்தின் ஒவ்வொரு சிறப்பும் மனிதனின் சிறப்பாகவே கருதப்படுகிறது. தாம் வாழும் நிலத்தின் தன்மையைப் பொறுத்து மக்கள் பிரிக்கப்பட்டனர் என்பதையும், வயலும் வயல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மருத நில மக்களின் சிறப்பையும், அவர்களின் தொழில் பெண்களின் நிலையையும் எடுத்துக் கூறுவதாக இக்கட்டுரை அமைகிறது.
மருதநில மக்கள்
ஆற்று நீரை வாய்க்கால்கள் மூலம் ஏரி குளங்களில் நிரப்பி நெல், கரும்பு, மஞ்சள் போன்றன பயிரிடும் வயல்களை உடைய நிலம் மருத நிலம் எனப்பட்டது. அங்கு வாழ்வோர் உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர் ஆவர். இவர்கள் வாழ்விடத்தை ஊர், பேரூர் என வழங்கினர். வெண்ணெல் அரிசி, பால், பரும்பின் தீஞ்சாறு போன்றன இவர்கள் உணவில் அடங்கியிருந்தன. மருத நாட்டில் பண்டைய நாகரிகத்தின் வளர்ப்புப் பண்ணையாக இருந்தது என்பது வியக்கக் கூடியதாகும். வளமார்ந்த மருதநில மக்கள் ஏனைய திணை மக்களை விட நாகரிகத்தில் மேம்பட்டவர்களாக இருந்தமையைக் காணமுடிகிறது. சங்க காலத்திலிருந்தே தமிழகம் உழவுத் தொழிலில் சிறப்புற்றிருந்தமையும், மன்னரின் வெற்றி உழவரின் கலப்பையை நம்பியிருந்தனைப்
‘பொருபடை தரூஉம் கொற்றமும் உழவர்
ஊன்றுசால் மருங்கின், இன்றதன் பயனே’ (புறம் பா.எ.35 )
என்ற புறநானூற்று வரிகள் வாயிலாக அறியலாம். ‘திருவள்ளுவர் உழவுக்குத் தனிஅதிகாரம்’ (குறள் அதி.104) அமைத்தார். உழவுத்தொழிலால் உணவும், பிறவும் நிறையப் பெற்று வாழ்ந்தவர்கள் மருத நிலத்தினர். ‘உழுவார் உலகத்தார்க்கு ஆணியாவார்’ (குறள் 1032) மருத நிலத்தினர் காவிரியின் புதல்வரைப் போல் வாழ்ந்தமையைக் காணமுடிகிறது.