மரணித்தும் மறையாத மகாராணி! - சக்தி சக்திதாசன் - இலண்டன் -
ஒரு நாடு ஸ்தம்பித்து போய்விட்டது என்பதை வெறும் கதைகளிலும், கட்டுரைகளிலுமே கண்டு வந்த எமக்கு அதன் தாத்பரியத்தைக் கண் முன்னால் காணும் நிலை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. நான் இங்கிலாந்துக்குள் காலடி வைத்து இப்போது 47 வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆகின்றன. நான் காலடி வைத்த நாள் முதல் நேற்றுவரை இங்கிலாந்தில் மாற்றமின்றி நான் கண்ட ஒரேயொரு அடையாளம், ஒரேயொரு மனிதர் இங்கிலாந்தின் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் என்றால் அது மிகையில்லை. இவர் யார் ? இவர் இத்தகைய ஒரு இடத்தை இங்கிலாந்து மக்கள் மத்தியில் மட்டுமல்ல உலக மக்கள் மத்தியிலும் பெற்றிருக்கக் காரணம் என்ன ? இங்கிலாந்து மகாராணியார் எனும் பதவி ஒன்றினால் மட்டும் எமது மகாராணியார் இத்தகைய பெரு மதிப்பை உலகளாவிய ரீதியில் பெற்றிருக்க முடியுமா ? இக்கேள்விகளுக்கு விடைகாண முயலும்போதுதான் இவரின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. மகாராணி எனும் பதவியிலிருக்கும் போதும் மனிதத்துவத்தை இழக்காமல் கலாச்சார அடையாள விழுமியங்களைப் பாதுகாத்து வாழ்ந்த இவரின் அயராத சேவையைப் புரிந்து கொள்ள முடிகிறது.