ரஷ்ய ,உக்ரைன் யுத்தச் சிந்தனைகள்! - ஜோதிகுமார் -
பகுதி ஒன்று!
அமெரிக்காவின் பட்டறைகல்லுக்கும், ரஷ்யாவின் கொடூர சம்மட்டி அடிகளுக்கும் இடையே அகப்பட்டு, நசுங்கி போன ஒரு தவளையின் கதையைப் போல இருக்கின்றது உக்ரைனின் இன்றைய நிலைமை என உலக விமர்சகர்கள், உக்ரைனின் நிலைமையை விசனத்துடன் வர்ணித்துள்ளார்கள்.
இவர்களின் விசனம் இருவகைப்பட்டது. ஒன்று அமெரிக்கா சார்பை அடிப்படையாகக் கொண்டது. மற்றது, அமெரிக்காவுக்கு எதிரான ரஷ்ய சார்பை அடிப்படையாக கொண்டது.
அமெரிக்காவின் கிழக்கு நோக்கிய விஸ்;தரிப்பானது, கட்டுக்கடங்காமல் சென்று, தனது வாசற்படிக்கே வந்து விட்டது என குமுறும் ரஷ்யாவும், இல்லையில்லை – நானொரு முதலாளித்துவவாதி – எனவே, பொருளியல் அம்சங்களுக்கான போட்டியில் ஈடுபடுவது அல்லது இறங்கி விடுவது சகஜமானது என வாதிடும் பைடனும், ஒருவருக்கொருவர், இன்று கச்சைக்கட்டிய நிலையில் உள்ளனர்.
அதாவது, நீதி–நியாயம் என்பன இரண்டாம் பட்சம். இதனை ஒரு பக்கமாய் கிடத்தி விடுங்கள். போட்டி ஒன்றே வாழ்வும் அதன் அர்த்தப்பாடும் ஆகும். எனவே, சமயத்திற்கு ஏற்ற வகையில், அத்தனை ஆயுத பிரயோகங்களும் நியாயமானதுதான் என்ற ரீதியில் அவர் அமெரிக்க காங்கிரஸில் ஆற்றிய, அண்மித்த, உக்ரையின் தொடர்பிலான உரை அவதானத்துக்குரியதே.
காரணம், “போட்டி சகஜமானது” என்றும் “நானொரு முதலாளித்துவவாதி” என்றும் அவர் வாதிடும் போது, இக்கூற்றானது, ஆயிரம் உள் அர்த்தங்களையும் ஆழமான பரிமாணங்களையும் கொண்டதாகி விடுகின்றது. மறுபுறத்தில், ரஷ்யா அடுக்கும் காரணங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவே உள்ளது.