கடந்த காலம், எதிர்காலத்தைத் திருட விடலாமா? - ஸ்ரீரஞ்சனி -
பொருள் ஒன்றின் பயன்பாடு அல்லது பழக்கப்பட்டுப்போன நடத்தை ஒன்று எங்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றது என்பது தெரிந்தாலும்கூட, அந்தப் பொருளைப் பயன்படுத்துவதை அல்லது குறித்த நடத்தையில் ஈடுபடுவதை எங்களால் நிறுத்தமுடியாமல் இருக்கிறதெனில், அந்தப் பொருள்/நடத்தை எங்களைக் கட்டுப்படுத்துகிறது எனலாம், இல்லையா? இதுவே அடிமையாதல் (addiction) எனப்படுகின்றது.
இவ்வகையான அடிமையாதல் நிலை ஒருவரிடம் காணப்படும்போது, அது அவரின் தெரிவு என்றோ அல்லது அது அவரின் ஒழுக்கப் பிரச்சினை என்றோதான் நாங்கள் பொதுவாகக் கருதுகிறோம். அப்படி அடிமையாவதால், அவருக்கோ அல்லது அவரின் குடும்பத்தவருக்கோ பிரச்சினைகள் ஏற்படும்போது, ‘குறித்த பொருளின் பாவனையை/நடத்தையை நிறுத்த வேண்டியதுதானே,’ என நாங்கள் சுலபமாகக் கூறிவிடுகிறோம். அதேபோல, அந்தப் பழக்கத்தை நிறுத்தமுடியாமல் அல்லல்படுபவர்கள் மேல் கோபப்படுகின்றோம். ஆனால், உண்மை என்னவென்றால் அப்படி நிறுத்திவிடுவது என்பது ஒரு இலேசான விடயமில்லை என்கிறார், NIH’s National Institute on Alcohol Abuse & Alcoholism என்ற அமைப்பின் தலைவரான Dr. George Koob.
இந்த யதார்த்தத்தை எனது மொழிபெயர்ப்பாளர் வேலை ஊடாக நானும் விளங்கிக்கொண்டேன். என் தொழிலின்போது நான் இதுவரை சந்தித்திருந்த மனிதர்களின் அனுபவங்களும், அவர்களுக்கான சிகிச்சைகளின்போது நான் கற்றுக்கொண்டவைகளும் என் கருத்துக்களை மாற்றிக்கொள்வதற்கு மிகவும் உதவியிருக்கின்றன. அவ்வாறாக நான் கற்றுக்கொண்டவற்றை பொதுவெளியில் பகிர்ந்துகொள்வது சிலருக்காவது பயனளிக்கக்கூடும் என நினைத்தேன். அதற்கான சந்தர்ப்பத்தை கனடா உதயன் பத்திரிகையின் வெள்ளி விழா மலரில் வழங்கியிருக்கும் உதயன் ஆசிரியருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி.