அக்டோபர் 31 கலோவீன் தினம்! - குரு அரவிந்தன் -
மேலை நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தினங்களில் கலோவீன் தினமும் (Halloween) ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் 31ம் திகதி கலோவின் தினம் அயர்லாந்து, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இதர நாடுகளில் கொண்டாப் படுகின்றது.
பெரியவர்களும் குழந்தைகளும் மிகவும்வேடிக்கையாக இத்தினத்தை இங்கே கொண்டாடுவர். ஊரிலே பிள்ளைகள் இரவிலே வெளியே திரிவதைத் தடுப்பதற்காகப் பெரியவர்கள் பேய்பிடிக்கும், பிசாசு அடிக்கும், கொள்ளிவால் பிசாசு தொடரும், முனி அடித்தால் வாயால் இரத்தம் கக்கும், என்றெல்லாம் சொல்லிப் பயமுறுத்துவதுண்டு. இப்படித்தான் எங்கள் வீட்டிற்கு சற்றுத் தள்ளியிருந்த புளிய மரத்தில் முனி இருக்கிறது என்றெல்லாம் சொல்லி இரவிலே வெளியே திரியாமல் எங்களுக்குப் பயம் காட்டிப் பெற்றோர் மிரட்டி வைத்திருந்ததை இத்தினங்களில் மீண்டும் நான் நினைவுபடுத்திப் பார்ப்பதுண்டு. இரவிலே வெளிக்கிட்டுத் திரிவதற்குப் பயந்து பயந்தே வாழ்ந்ததொரு காலமது.
பிரித்தானியாவில்தான் முதன்முதலாகக் கலோவீன்தினம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகக் கொண்டாடப்பட்டது. அறுவடைக்காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிப்பதையும், வெளிச்சகாலம் முடிந்து இருட்டுக்காலம் தொடங்குவதையும் இந்தக் கொண்டாட்டம் குறிக்கும். பழைய ஆங்கிலச் சொல்லான கலோவீன் என்றால் தெய்வீகத்தன்மை பெறச்செய்தல் என்ற கருத்துப்படும். பொதுவாக இத்தினத்தில் ஆரேஞ்ச் நிறமும் கறுப்பு நிறமும் அதிகமாகப் பாவிக்கப்படும். அரேஞ்ச் நிறம் அறுவடைக் காலத்தையும், கறுப்பு நிறம் இறப்பையும் குறிக்கும்.