வெற்றிச்சிகரத்தை நோக்கி (4) : மாற்றத்தை புரிந்து நட! எண்ணம் மற்றும் எழுத்து! - கி. ஷங்கர் (பெங்களூர்) -
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். - ஆசிரியர் -
இந்த உலகில் மாறாத ஒன்று உண்டென்றால், அது மாற்றம்தான். நம் கல்வியறிவு, பொருளாதார நிலை, குடும்பச் சூழ்நிலை, நாட்டின் அரசியல் நிலைமை, தட்பவெட்ப நிலை என்று எல்லாவற்றிலும் மாற்றங்களை காண்கிறோம். நம் மனநிலையே சூழ்நிலைக்கு தக்கவாறு மாறிக்கொண்டே வருகிறது. இப்படி வரக்கூடிய மாற்றங்களை எப்படி எதிர் கொள்வது? மாற்றங்களை ஏற்காமல் அப்படியே இருந்து விடுவதா? இல்லை, மாற்றங்களுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொள்வதா? ஆளுமை வளர்ச்சிக்கு மாற்றங்களை எதிர் கொள்ளும் குணம் எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி இந்த இதழில் உங்களுக்கு எடுத்துரைக்க போகிறேன். இதை பற்றி முதல் அத்தியாயத்தில் நான் ஏற்கனவே ஒரு குறளை மேற்கோள் காட்டி சொல்லியிருக்கிறேன்.
"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்".
என்று அன்றே வள்ளுவர் கூறினார். இதன் பொருள் என்னவென்றால் "தகுந்த காலமறிந்து, இடத்தோடு பொருந்துமாறு செய்தால், ஒருவன் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும்" என்பது. வெற்றிக்கான காரணங்கள் காலத்திற்கேற்றவாறு மாறுபடுகிறது. அந்தந்த காலத்தின் தேவைகளை புரிந்து கொண்டு, அந்த மாற்றங்களுக்கேற்றவாறு செயல்படுபவர்களே வெற்றிக் கனியை பறிக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த மாற்றம் பற்றி எழுதும் போது முக்கியமாக ஒரு விஷயத்தை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். விப்ரோ (WIPRO) ஒரு உலக புகழ் பெற்ற கணிணி மென்பொருள்(Computer Software) நிறூவனம். இந்த நி¢றுவனத்தின் தலைவர் அசிம் ப்ரேம்ஜியும் கூட மிக புகழ் பெற்ற மனிதர். உலகிலுள்ள மிக பெரிய பணக்காரர்களில் ஒருவர். கடும் உழைப்பாளி.. சமீபத்தில் அவர் மாற்றங்களை பற்றி குறிப்பிட்டு ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அதிலிருந்து சிலவற்றை உங்களுக்காக சொல்கிறேன். இந்த சொற்பொழிவு ஒரு மிக பெரிய பாடமாக கருதப்படுகிறது. அவர் சொன்ன சாராம்சத்தை எடுத்துக் கொண்டு என் கருத்துக்களையும் சேர்த்து சொல்லுகிறேன்.