சமரசங்களுக்கு ஆட்படாத எழுத்தாளர் சீ.வி.வேலுப்பிள்ளையின் இலக்கிய அரசியல்! - ஜோதிகுமார் -
- பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஏற்பாடு செய்திருந்த " மலையகம் 200" என்ற நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை. பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைகு என் நன்றி. -
“பிரட்டின் அதிர்விலே
விடியலே அதிர்ந்து போய்
தேயிலையின் மீது
சரிந்துகிடந்து…
… …
தளிர்களின் வடிவில்
அமைந்திட்ட கண்களால்
செழித்த நிரைகளை
அமைவுற நோக்கியே…
சிறிய மெலிந்த
தேர்ந்த விரல்களால்
இரண்டு இலைகள்
ஒரு குருத்து…
இரண்டு இலைகள்
ஒரு குருத்து…”மலையக மக்கள் குடியேறி, கிட்டத்தட்ட 140 ஆண்டுகள் அல்லது நான்கு ஐந்து தலைமுறைகள், கழிந்தப் பின், மலையக மக்கள் தாமும் இந் நாட்டில் ஒரு குடியினர்தாம் என்று தமது சமூக இருப்பை இந்நாட்டில் கட்டமைத்து வேர்பதித்து கொள்ளத்துவங்கியதன் பிரதிபலிப்பாய், அவர்களின் பிரதிநிதியாய் தோன்றியிருக்கக்கூடிய ஒரு கவிஞன் இப்படியாய்ப் பாட முன் வந்தான். பெயர்: சீ.வி. வேலுப்பிள்ளை.
வேலுப்பிள்ளையின் முக்கியப்படைப்புக்களான 'தேயிலைத்தோட்டத்திலே' (In The Ceylon Tea Garden 1952–1953) அல்லது 'உழைக்கப்பிறந்தவர்கள்' (Born To labour 1958–1959) போன்றே 1959 இல் வெளிவந்திருக்கக்கூடிய அவரது 'மலையக அரசியல் தலைவர்களும், தளபதிகளும்' என்ற நூல் மிக முக்கியமானது. அவரது அரசியலை நுட்பமாக வெளிக்கொணரக்கூடியது. ஆனால், அவரது அரசியலைப் போன்றே அவரது கவிதை மனநிலையையும் இங்கே அலச முற்படுவது, இனி மலையகத்தில் உருப்பெறபோகும் இளம் கவிதை மனங்களுக்கு பயன் தருவதாய் அமையக்கூடும். இதனை இசை உலகின் விளிம்புகளில் ஒளிரக்கூடிய சில உதாரணங்களுடன் விளக்க முற்படலாம்.