- எழுத்தாளர் 'கம்பிகளின் மொழி' பிரேம் அவர்களின் அகால மரணம் பற்றிய எழுத்தாளர் யோ.புரட்சியின் முகநூற் பதிவு. போர்ச்சூழலில் பாதிப்புகளுக்கு உள்ளாகி, மீண்டும் தன் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கையில் எழுத்தாளர் பிரேமுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். - பதிவுகள்.காம் -
கை ஒன்றினையும் கால் ஒன்றினையும் போராட்ட காலத்தில் இழந்த கம்பிகளின் மொழி பிரேம் அவர்கள் 05.07.2024 இரவு மரணித்தார். சிறை வாழ்வும் அனுபவித்தவர். அதன் தாக்கத்தால் 'கம்பிகளின் மொழி பிரேம்' என தன்னை அடையாளப்படுத்தியவர். இப்படம் 2017இல் பிரேம் எடுத்தது. தன்னைப் போலவே போரில் காயமுற்ற ஒருவரை திருமணம் செய்தவர். இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆனவர்.
2016இல் 'காய்ந்து போகா இரத்தக்கறை' எனும் நாவலினை யாழ்ப்பாணம் நெல்லியடியில் வெளியீடு செய்திருந்தோம். அந்நாவல் இவர் எழுதியது. இக்காலத்தில் இவர் அச்சு ஊடகம் ஒன்றில் பணியாற்றியிருந்தார் இந்நூலுக்காக பின்னட்டைக் குறிப்பினை எழுதிக் கொடுத்திருந்தோம். அதன் பின்பு 'மறந்திடுமோ மனதை விட்டு' கவிதை நூலினை யாழ்ப்பாணத்திலும், 'பொன்னான பரிசு' நூலினை மன்னாரிலும் வெளியீடு செய்திருந்தார்.
'குமரிக்கண்டம் முதல் முள்ளிவாய்க்கால் வரை' நூலினை அச்சாக்க நிலையில் வைத்திருந்த பிரேம் அவர்கள் 05.07.2024 இரவு திடீர் மரணமுற்றார். பிரேம் அவர்களுடன் இணைந்து அநேக நூல் வெளியீடுகள், இறுவட்டு வெளியீடுகள், கலை இலக்கிய நிகழ்வுகளில் வடக்கு கிழக்கில் பங்கேற்ற சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு.
பிரேம் அவர்கள் வலிமைமிக்க வலையொளி(யூரியூப்), இணைய வானொலி சார்ந்த இலத்திரனியல் ஊடகங்களில் பணியாற்றியுள்ளார். சில வலிமைமிக்க ஊடகங்களை இலங்கையில் நிறுவுகின்ற தொடர்பாளராகவும் செயற்பட்டு இருக்கின்றார்.
அநேக சமூகப் பணிகளை மேற்கொண்டு இருந்தார். போருக்குப் பின்னரான வாழ்க்கையிலும் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்தபடி பயணித்தும் இருந்தார். இப்படத்திற்காக 2017இல் இடப்பட்ட பகிர்வு கீழே. வட்டக்கச்சி வினோத் அவர்களின் 'காலநதி' கவிநூல் வெளியீட்டு விழாவேளை கவிஞர் கம்பிகளின் மொழி பிரேம்(இளந்தொழிலதிபர்) பிடித்த சுயபடம். அருகே காவலூர் அகிலன்(கிளிநொச்சியின் இளம்புயல்) மற்றும் புரட்சி.
நன்றி: யோ.புரட்சி