1. அழைப்பிதழ்!
அழைப்பு வந்திருந்தது.
பிரித்துப் படித்ததில் ஆச்சரியம்..
கண்களுடன்,
மனதும் வியந்தததுடன்
ஒருவித அச்சமும் வந்தது.
மனைவியிடம் கொடுத்தேன்.
இதில் உங்கள் பெயர் இல்லையே
என்றாள்.
அப்படியாயின்
உனக்காக இருக்குமோ?
அவள் பயந்தாள்.
இருவரும் எதுவும் செய்ததில்லையே..
நல்லது செய்தாலும் அச்சமே நண்பன் சொல்லியிருந்தான்.
நாளை உனக்கான தண்டணை நிறைவேற்றப்படும்.
அவை கடுமையாக இருக்கும்..
ஆயுதங்களின் கடிதங்களை யாரிடமும் காட்டிக்கொள்ளமுடியாது..
கடவுளின் தண்டணையைவிட
ஆயுதங்கள் முன் தன்னைப் பலியிடுதல் என்பது
கொடூரம்தான்..
நாங்கள் முழந்தாளிட்டுள்ளோம்.
பரமபிதாவே!
2. அகதி!
ஊரிலிருந்து
முற்றாக நீங்கி வந்திருக்கவேண்டாமோ என நினைக்கத்தோன்றுகிறது.
அதிகாலையில்
பால் கொண்டுவரும் வெள்ளச்சி..
முற்றத்தின் அசிங்கங்களை மணலால் மூடி
பெருக்கும் அம்மம்மா.
'தின்னவேலிசந்தைக்குப் போறன்'
கிறீச் கிறீச் சத்தமிட மிதிச்செல்லும்
எம் எஸ் எனும் கந்தசாமி மாமா..
தோழிகளுக்கென தன் கொம்பாஸ் பெட்டிக்குள்
சில மாங்காய் நறுக்குக்களுடன்...சில புளியங்காய்காய்களும்..அம்மா கத்துவாள்.
ஆயினும்
தினசரி கடைக்குட்டி சர்மிளி சின்னதாய் இப்படி களவுகள் செய்யாமல் இருந்ததில்லை.
யாரோ ஒருத்திக்காய்
யாரோ ஒருவனிடம் அடிவாங்கிவரும் தம்பி...
மாலையானதும்,
சோமசுந்தரம் கடைக்குப் பின்னால் ஒன்று கூடி நண்பர்களுடன்,
சீட்டாடி,குடித்து,தோற்றுப்போய்..
மகாபாரத்து தருமனாய் அப்பா..
நல்லவேளை அவர் அம்மாவை கடசிவரை அடைவு வைக்கவில்லை.
கொடுத்த சீதனம் போதவில்லை என தாய் வீட்டிலேயே தங்கிவிட்ட அக்காவிற்கு
நான்கு பிள்ளைகள்...
கூட்டுக்குடும்பம் என்பார்களே அதுவா..இது..
யாரும் புறுபுறுத்ததில்லை..
யாரும் யாரிடனும் நோவதில்லை..
சமயங்களில்
தனி தீவுகளாயும்,
சில சமயங்களில் ஜனநாயக அணிகளாயும் எனது குடும்பம்...
முற்றத்தில் அதுவாய் பெய்யும்...
அதுவாய் எரிக்கும்..
அதுவாய் வீசும்..
மழையும் வெயிலும்,காற்றும்..
இங்கும் பெய்கிறது..
இங்கும் உள்ளதுதான் சூரியனும் காற்றும்..
ஆனாலும் எல்லம் இழந்த தனிமைச் சிறையில்..
அகதியாய்..
எப்போதாவாது அதிகாரிகள் வரலாம்.
எப்போதாவாது கூடிக்கதைக்க நண்பர்கள் என சிலர் வரக்கூடும்.
எப்போதாவது கையில் கொஞ்சம் பணம் கிடைக்கும்.
நினைக்காத போது வரும் கடவுளரைப் போன்று
எப்போதாவது வதிவிட அனுமதி கிடைக்கலாம்...
அகதியாய் கொஞ்சகாலம் வாழ்ந்துபார்ப்போம்.
3. இன்னும் காத்திருக்கிறோம்..
வந்தாயிற்று
ஒரு நிலத்திலிருந்து...
இன்னொரு நிலத்திற்கு.
சிறை இதுவென்றார்கள்.
பாதுகாப்பு வலயம் என்றார்கள்.
எதுவாயினும்
அழைத்து வாராமல்
இழுத்துவரப்பட்டிருக்கிறோம்
முழுநிர்வாணமாக...
இனி எதை மறைக்க?
மகளின் முன் அப்பா..
யாரோ ஒருவனின் முன் ஒருத்தி..
நாகரிகம் மிக்க சமூகம்
மீண்டும்
ஆதிகாலத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறதோ?
முட்கம்பி வேலி பாதுகாப்பானதாம்..நிர்வாணம் மறைக்க
எதுவும் தரப்படவில்லையே..
மேலதிகாரி வரலாம்...
தீர்ப்புக்கள் எழுதப்படலாம்.
ஒவ்வொருவராக காணாமல் போகலாம்.
ஒவ்வொருவராக
தங்களை இழக்கலாம்..
யாரோ ஒருவன் வந்து தன் இரவு உணவாக
யாரையும் அழைத்துச் செல்லலாம்..
இதுவரை மழையை,வெய்யிலைத் தவிர
யாரும் வரவேயில்லை.
யாரோ ஒருவருக்கு புள்ளியீட்டோமே..
அவர்கள் பாதுகாப்பாக சொகுசாக
இருக்க,விரல்தொட்டு முனை அழுத்தச் சொன்னவர்கலும்
அருகில் இல்லாமல் போனார்கள்.
இன்னும் காத்திருக்கிறோம்...
மேலதிகாரிகளின் கட்டளைக்கு...
நிர்வாணமா...
(எப்போதோ நடந்ததாயினும் இப்போதும் எங்காவது நடந்துகொண்டிருக்கலாம்.)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.