சரித்திரப் புனைகதைச் சேகரிப்பாளர் திரு.சுந்தர் கிருஷ்ணன் அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் மூலம் அறிந்தேன். துயருற்றேன். இவர் முகநூல் அறிமுகப்படுத்திய என் முகநூல் நண்பர்களில் ஒருவர். தமிழ் சரித்திர நாவல்கள் மீது தீராத பற்று மிக்கவர். அவற்றைப்பற்றிய விபரங்களை ஆவணப்படுத்துவதற்காக 'தமிழ் சரித்திர நாவல்கள்' என்னும் வலைப்பதிவினை வைத்திருந்தார்.
இவ்வலைப்பதிவின் முதற் பக்கத்தில் சுந்தர் கணேசன் பின்வருமாறு கூறியிருபார்:
"தமிழ் சரித்திர நாவல்கள் வணக்கம் இன்றைய உலகில் தமிழ் நாவல்கள் அதுவும் சரித்திர நாவல்களின் தகவல்கள் இங்கு சேமித்து கொடுக்கப்படுகின்றன. இதுவரை 752 நாவல்கள் கிடைத்துள்ளன. இந்த வலை பதிவு சரித்திர நாவல் பிரியர்களுக்கு உரிய தகவல்களை ஒரே இடத்தில் தரவேண்டும் என்ற நோக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பாருங்கள்..உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன் சுந்தர் கிருஷ்ணன்"
என்னுடன் 2020ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்பிலிருந்தார். சரித்திர நாவல்கள் பற்றிய தகவல்களுக்காக அவ்வப்போது என்னுடன் தொடர்பு கொள்வார். ஒரு முறை கல்கி ஃபேர்க்லி சிறுகதைப்போட்டியில் வரலாற்றுக் கதைப்பிரிவில் முதற் பரிசு பெற்ற எழுத்தாளர் அய்க்கணின் 'இளங்கோவின் துறவு' என்னிடமுள்ளதா என்று கேட்டு மெசஞ்சரில் தகவல் அனுப்பியிருந்தார். இணையத்தில் இருக்கும் கல்கி சஞ்சிகைகளைத் தேடி அக்கதையின் பக்கங்களைப் புகைப்படங்களாக எடுத்து அனுப்பினேன். இன்னுமொரு தடவை எழுத்தாளர் ஜெகசிற்பியனின் ராணி முத்துப் பிரசுரமாக வெளியான 'நந்தவர்மன் காதலி', சாண்டில்யனின் சரித்திர நாவற் பக்கங்கள் சிலவற்றை அனுப்பும்படி கேட்டிருந்தார். அவற்றையும் அலைபேசியில் படமெடுத்து அனுப்பினேன்.
என் பால்ய,பருவத்தில் வாசித்த புனைகதைகள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை ஒரு நினைவுக்காகச் சேகரிப்பதில் ஆர்வம் மிக்கவன் நான். அக்காலகட்டத்தில் தினத்தந்தியில் தொடராக வெளியான எழுத்தாளர் கோவி மணிசேகரனின் 'ராஜசிம்மன் காதலி' தொடர் நாவலின் சில அத்தியாயங்களை வாசித்திருந்தேன். அந்நாவல் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. ஆனால் அப்போது அந்நாவலை நான் முற்றாக வாசிக்கவில்லை. சுந்தர் கிருஷ்ணன் அவர்களிடம் அந்நாவல் பற்றி விசாரித்தபோது அவர் அந்நாவல் ராஜசிம்ம பல்லவன் என்னும் பெயரில் மணிவாசகர் பதிப்பக வெளியீடாக வெளிவந்த தகவலையும், ராஜசிம்மன் காதலி என்னும் பெயரில் ராணிமுத்துப் பிரசுரமாகவும், வள்ளுவர் பண்ணைப் பிரசுரமாகவும் வெளியான தகவல்களையும் அறியத்தந்தார்.
அத்துடன் அந்நாவலின் பிடிஃப் கோப்பை அனுப்பி உதவ முடியுமா என்று கேட்டதும் உடனடியாக அந்நாவலின் பிடிஃப் கோப்பினை அனுப்பியிருந்தார். அதன் மூலம் என் நீண்ட காலத்து ஆசையொன்று நிறைவேறியது. அதற்காக அவருக்கு என் நன்றி.
மேலும் என்னிடமிருந்த வரலாற்று நாவல்களின் பிடிஃப் கோப்புகள் சிலவற்றையும் அனுப்பியிருந்தேன்.
தமிழ் வரலாற்று நாவல் வாசகர் வட்டம் (Tamil Historical Fiction Readers) என்னும் குழுவுக்கும் என்னை அறிமுகப்படுத்தியிருந்தார். அக்குழு இவர் உருவாக்கியதா அல்லது வேறெவராவது உருவாக்கினரா என்பது சரியாகத் தெரியவில்லை. அதில் தமிழ் சரித்திர நாவல்கள் பற்றிய தகவல்களைப் பலரும் பதிவு செய்வார்கள். தமிழ் சரித்திர நாவல்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய குழு இக்குழு.
இன்னுமொரு விடயத்துக்காகவும் இவரை என்னால் மறக்க முடியாது. வருடா வருடம் எனது பிறந்தநாள் அன்று இவரது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி முகநூல் மெசஞ்சரினூடு என்னை வந்து சேரும்.
திரு. சுந்தர் கிருஷ்ணனின் திடீர் மறைவு எதிர்பாராதது. துயர் தருவது. இவரது பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர் மற்றும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.