அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு - ஒரு கலைத் தரிசனம்! (பகுதி 3) - ஜோதிகுமார் -
VI
“நடு இரவில் (?) விழிக்கும் இவன்! குறைமேகங்களுக்கு மத்தியிலிருந்து இறங்கிய மங்கிய நிலவு பூமி பரப்பின் மீதிருந்த பொருள்களின்; வெளிஉருவத்தை மட்டும் பிரித்துக்காட்டுவதாக இருந்தது… எதிரே ஒரு அரசமரம்… ஓர் அசைவும் காணப்படவில்லை சப்தமே போடாமல் ஃபோட்டோ சிந்தஸிஸ் நடந்துக்கொண்டிருந்தது” (பக்கம் 89-92). போட்டோ சிந்தஸிஸ் என்பது ஒளித்தொகுப்பு என விஞ்ஞானம் கூறுகின்றது. இதற்கு இத்தொகுப்பு நடக்க ஒளி ஓர் முக்கிய அவசியப்பொருள் எனக்கூறப்படுகின்றது.
மறுபுறத்தில், இஸ்லாமிய முரடர்களால், தாக்கப்பட்ட பின் சந்திரசேகரன் சைக்கிளைத்தள்ளிக்கொண்டு அநாதாரவாய் தனித்து நடந்து வருகின்றான். “அந்நேரத்தில் ஒரு மனித பிறவியையும் காண முடியவில்லை. சந்திரசேகரனைத் தடுத்து மூன்ற மாடுகள் குறுக்கே நின்றன”. சந்திரசேகரன் சைக்கிளைப் பிடித்துக்கொண்டே ஒரு மாட்டின் நெற்றியைச் சொறிந்துதர ஆரம்பித்தான். அந்தமாடு அப்படியே முகத்தை நீட்டி அதன் கழுத்தைக் சொறிவதற்கு காண்பித்தது. அந்த மாட்டைப் பார்த்து மற்ற மாடுகளும் சொறிய காத்து நின்றன. சந்திரசேகரனுக்கு விரல்கள் வலித்தன (பக்கம் -69).
இது ஜீவகாருண்யம்தான். ஆனால், இதே காருண்யத்தை வைத்துக்கொண்டுதான், காந்தி, டாடா பிர்லாவின் நெற்றியையும் கழுத்தையும் ஆறுதலாக சொறிந்து கொடுத்தார் என்பது பதிவு. (காந்தியின் பீனிக்ஸ் ஆசிரமத்துக்காக ரூபா 25000 டாடா வால் வழங்கப்பட்டது என்பதும், இந்தியாவில் காந்தி தனது சத்தியhகிரகத்தை நடாத்த ரூபாய் 125000 அந்நாட்களில் டாடா வால், காந்திக்கு வழங்கப்பட்டது என்பதும் பதிவு. இதே போன்று பிர்லாவும், நன்கொடைகள் மாத்திரமின்றி, 1930ல் காந்தியை வட்டமேசை மகாநாட்டில் பங்கேற்கும்படி வற்புறுத்தியதாகவும் (1930) தீவிரவாதிகளான ஸ்வராஜ் கட்சியினருக்குக் காந்தி தரக்கூடியதாய் இருந்த ஆதரவை கேள்விக்கு உட்படுத்தியதாகவும் (1931) இரண்டாம் சட்டமறுப்பு இயக்கத்துக்கு எதிராகக் காந்திக்கு யோசனை கூறியதாகவும் (1932) மாகாண தேர்தலில் காந்தியைப் பங்கேற்கும்படி வற்புறுத்தியதாகவும் (1935) பதிவுகள் உண்டு). 18வது அட்சக்கோட்டில் மிளிரும் காருண்யம் யாரை சொறிவதற்கு உபயோகப்படும் என்பது தெளிவு. “ஒருவேளை இந்தக் காருண்யத்தின், இந்தக் கொடைகளின், இந்த அரசியலின் மறுபக்கமே, ஜெயமோகன்-அசோகமித்திரன்-பாலகுமாரன் ஆகியோரின் எழுத்துக்களின் தாண்டவமாடும் அகோரங்களான, மூத்திரவாடை அல்லது எச்சில் அல்லது அழுகல்கள் அல்லது அடக்குமுறைகள் – என்பதற்கான பின்புலமும் இவற்றாலேயே தோற்றவிக்கப்படுகிறது என்ற எண்ணப்பாடுகளும் இங்கே தோன்றாமல் இல்லை.”