ஆய்வு: கவிஞர் மு. மேத்தா கவிதைகளில் பெண்களின் சிக்கல் - முனைவா் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூா் 635 802, திருப்பத்தூா் மாவட்டம் -
- கவிஞர் மு.மேத்தா -
முன்னுரை
"ஆணாதிக்கத்தினின்று விடுதலை சமுதாயத்தில் ஆணுக்கு இணையான உரிமை , எக்காலத்தும் எச்சூழலிலும் எப்பருவத்திலும் ஆணுக்கு நிகரான மதிப்பு, பெண் தன்னம்பிக்கையுடன் தன் காலில் நின்று எதிர்நிற்கும் சிக்கல்களைத் துணிந்து எதிர் கொண்டு தன் இழிவகற்றி முன்னேறுதல், வாழ்வில் தன் இன்றியமையாமையை உணர்த்துதல், பெண்ணை இழிவுபடுத்தும் அனைத்தையும புறக்கணித்து அவற்றை வேரோடு களைதல் ஆகியவற்றை மையமிட்டுப் பெண்ணியம் இயங்குவதாகக் கொள்ளலாம்”
என்று பெண்ணியத்திற்கு விளக்கமாக முனைவா் ச. சிவகாமி அவா்கள் தன் 'காலச் சூழலில் பெண்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளனர்.
'தற்பொழுது பெண் சமுதாயம் பல வகைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது எனலாம். ஆனாலும் அவை முழுமையான அளவை எட்டவில்லை. கடந்த பத்தாண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இருமடங்கு அதிகரித்திருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் குற்றச் செயல் புள்ளிவிவரப் பிரிவு சென்ற ஆண்டில் என்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குற்றங்களைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. ஒவ்வொரு நாற்பத்தேழு நிமிடத்துக்கும் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறாள். ஒவ்வொரு நாற்பத்து நான்கு நிமிடத்துக்கும் ஒரு பெண் கடத்தப்படுகிறாள். ஒரு நாளைக்குப் பதினேழு வரதட்சிணைக் கொலைகள் நிகழ்கின்றன என்றெல்லாம் புள்ளி விவரங்கள் பெண்ணின் அவல நிலையைக் கூறுகின்றன. இந்தநிலை ஓா் ஆரோக்கியமான முன்னேறும் சமுதாயத்துக்கு உரிய அடையாளங்கள் ஆகுமா? '
என்று எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன அவா்கள் 'பெண் விடுதலை' என்னும் நூலில் குறிப்பிட்டிருப்பதின் வாயிலாக அறிய முடிகிறது.
”உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும்
உயிரினும் இந்தப் பெண்மையினிதடா” (பாரதியார் கவிதைகள். ப.235)
என்று ' பெண்கள் வாழ்க' என்ற தலைப்பில் பாரதி எழுதுகிறார்.
பெண்மை என்பது தாய்மையின் வடிவங்களன்றோ! அவ்வியப்பூட்டும் சக்தியைப் பெற்ற பெண்கள் சார்புப் பிராணிகளாக்கப்பட்டு விட்டார்கள். இத்தகைய நிலையில் வானத்து விடிவள்ளி போன்று சில எழுத்தாளர்களில் ஒருவா்தான் கவிஞா் மு. மேத்தா. அவா் எழுதியகவிதைகளில் காணப்படும் பெண்ணியச் சிந்தனைகளை ஆய்வதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.