நவீன உலக இலக்கியத்தில் முக்கியமானதோர் இலக்கிய ஆளுமையான செக் நாவலாசிரியரான மிலன் குந்தேரா தனது 94ஆவது வயதில் காலமான தகவலை இணையத்தின் மூலம் அறிந்தேன். அவரது இழப்புக்கான் ஆழ்ந்த இரங்கலைப் பதிவுகள் செலுத்துகின்றது. இவரது இவரது இருப்பின் தாங்க முடியாத மென் தன்மை (The Unbearable Lightness of Being) இவர் எழுதிய நாவல்களில் மிகவும் புகழ்ப்பெற்ற நாவல். இதுவே இவரது மிகச்சிறந்த நாவலாகவும் கருதப்படுகின்றது. இந்நாவலைப்பற்றித் தனது வலைப்பூவில் எழுத்தாளர் ஜெயமோகன் 'மிலான் குந்தரே எழுதிய புனைவுகளில் ஆகவும் சிறந்ததாக The Unbearable Lightness Of Being நாவலை விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த நாவலின் முதல் இரண்டு பக்கங்களின் எந்தப் புள்ளியில் இருந்து அந்த நாவல் அவரில் தொடங்கியது என்பதை எழுதிவிடுகிறார். அதில் நீட்சே வருகிறார். Parmenides வருகிறார். இன்னும் சில தத்துவவாதிகள் வருகிறார்கள். அவர்களது கருத்துக்களை எல்லாம் குறிப்பிட்டுச் சொல்லும் குந்தரே, தனக்குள்ள கேள்விகளையும் முன் வைத்து அவர்களை மறுதலிக்கவும் முயல்கிறார். அதில் இருந்து தனக்கான தேடலை முன்னகர்த்துகிறார். அப்படியாகத்தான் இந்த நாவல் உருக்கொள்கிறது' என்று கூறுவது கவனத்துக்குரியது.
இத்தருணத்தில் எழுத்தாளர் ராம் முரளியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நேர்காணலைப் 'பதிவுகள்' நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கிறது. இந்நேர்காணல் அவரது கலை, இலக்கிய மற்றும் அரசியல் சிந்தனைகளை வெளிப்படுத்துவதால் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்.காம் -
நேர்காணல் ஒன்று: புத்தகத்தின் வெற்றி என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக உண்டாவதில்லை! – எழுத்தாளர் மிலன் குந்தேரா - நேர்காணல்: ஜோர்டன் எல்கிராப்லி, தமிழில்: ராம் முரளி
நம் காலத்தின் மகத்தான படைப்பிலக்கியவாதிகளில் ஒருவர் மிலன் குந்தேரா. பத்து நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, கவிதைகள், கட்டுரைகள் என இவரது இலக்கிய உலக பங்களிப்பு பரந்து விரிந்தது. எனினும், நாவல் எழுத்தையே பெரும்பாலும் தமக்குரிய கலை வெளிப்பாட்டு தேர்வாக கொண்டிருக்கிறார். இலக்கியத்தின் ஒரு அங்கம் என்றில்லாமல், நாவல் எழுத்தே தனியொரு கலை என்பது இவரது கருத்து. தற்போது 90 வயதை கடந்துவிட்ட நிலையில், அவரது படைப்புகள் வெளிவருவது தோய்ந்துவிட்டது. 2014ம் வருடத்தில் வெளியான The festival of insignificance என்பதே கடைசியாக வெளிவந்த இவரது நாவலாகும்.
செக் குடியரசின் புரூனோ நகரில் 1929ல் பிறந்தவர் என்றாலும் 1975ல் இருந்து பிரான்ஸிலேயே வாழ்ந்து வருகிறார். 1993க்கு பிறகு, பிரெஞ்சு மொழியிலேயே தமது புனைவெழுத்துக்களை எழுதி வருகிறார். இளம் பருவத்தில் கம்யூனிஸ இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். ஆனால், செக் குடியரசின் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, அவ்வியக்கத்துடனான தமது உறவுகளை முறித்துக்கொண்டார். விளைவாக, இவரது படைப்புகள் செக் குடியரசில் தடை செய்யப்பட்டன; குடியுரிமையும் ரத்துசெய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, பிரான்ஸுக்கான இவரது இடப்பெயர்வு நிகழ்ந்தது. பலமுறை நோபல் பரிசுக்கான பரிந்துரைகளில் இவரது பெயர் பரிசீலனை செய்யப்படிருக்கிறது என்றொரு வழக்குப் புழக்கத்தில் இருக்கிறது. எனினும், தமது நிலைபாடுகள், செக் குடியரசில் இருந்து வெளியேறியது, சோஷியலிஸ அரசுடனான அவரது சிக்கல் மிகுந்த உறவு போன்றவற்றால், குந்தேராவுக்கு நோபல் பரிசு கிடைப்பது சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது.