உக்ரைன் தலைநகர் கிவ்வில் ‘ஸ்னைப்பர் வாலியின்’ நடமாட்டம்! - குரு அரவிந்தன் -
யார் இந்த சினைப்பர் வாலி? என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான ‘ஸ்னைப்பர் வாலி’ என்ற புனைப் பெயரைக் கொண்ட இவர் கனடாவின் 22வது படைப்பிரிவில் 12 வருடங்கள் கடமையாற்றியவர். உக்ரைனின் அழைப்பை ஏற்று 40 வயதான கணனி மென்பொறியியலாளரான இவர் அங்கு சென்று சுயவிருப்பத்தின் பெயரில் படையில் இணைந்திருக்கின்றார். ஸ்னைப்பர் மூலம் யாரையும் குறிபார்த்து வீழ்த்துவதில் வல்லவர். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் சேவையாற்றிபோது, ஸ்னைப்பர் தாக்குதலுக்குப் புகழ் பெற்றவர். ஒரு நாளில் சாதாரணமாக ஒரு ஸ்னைப்பர் வீரனால் ஐந்து அல்லது ஆறு பேரைத்தான் சுட்டு வீழ்த்த முடியும். ஆனால் இவர் ஒரே நாளில் 40 பேரைச்சுட்டு வீழ்த்தக்கூடிய வல்லமை படைத்தவர் என்ற புகழாரம் சூட்டப்பட்டவர். இப்போது உக்ரைனுக்கு உதவும் நோக்கத்தோடு, ரஸ்ய படையினருக்காகத் தலைநகரான கீவ்வில் தனது .338 ஸ்னைப்பர் ரைபிளுடன் வீதியில் காத்திருக்கின்றார். இவரைப் போலவே, பிரபல டென்னிஸ் வீரரான சேர்ஜி ஸ்ராகேவஸ்கியும் உக்ரைன் ராணுவத்தில் இணைந்திருக்கின்றார்.
உக்ரைன் - ரஸ்யா யுத்தம் ஆரம்பித்து 22 நாட்கள் கடந்துவிட்டன. சென்ற பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ரஸ்யாவால் இந்த இந்த யுத்தம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ரஸ்யா நாட்டின் மீது எந்தத் தாக்குதலும் இதுவரை நடக்காத படியால், யுத்தம் உக்ரைன் நாட்டில் நடப்பதால், இந்த யுத்தத்தில் உக்ரைன் மக்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய போலாந்து நாட்டுப்பிரதமர், செக் குடியரசுப் பிரதமர், ஸ்லோவேனியா பிரதமர் ஆகியோர் உக்ரைனுக்கு சென்று, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி உக்ரைன் அதிபரைச் சந்தித்து உரையாடினார்கள். உக்ரைன் தலைநகரான கீவ்வில் இந்த சந்திப்பு இடம் பெற்றது. ஒரு வாரத்தில் முடிந்திருக்க வேண்டிய யுத்தம், நேசநாடுகள் உக்ரைனுக்கு உதவியதால் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதே நேரம் உக்ரைன் நாட்டின் மீது ரஸ்யா தனது தாக்குதல்களை அதிகரித்து இருக்கின்றது. தலைநகரான கீவ்வையும், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வையும் கைப்பற்றினால் உக்ரைன் பலமிழந்து விடும் என்ற கணிப்பில் இந்தத் தாக்குதல்கள் ரஸ்யாவால் மேற்கொள்ளப் படுகின்றன.