கம்பராமாயணத்தில் முனிவர்களின் சாபச் சொல் பலிக்கும் என்பது குறித்த பதிவுகள் - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -
முன்னுரை
முனிவர்கள் உலக இன்பங்களைத் துறந்து, பற்றற்று இருப்பர்.. ஐம்புலன்களை அடக்கி காடுகளில் தங்கி தவம் செய்பவர். சடைமுடி வைத்திருப்பர். காவி உடை அணிந்திருப்பர். கையில் கமண்டலம் வைத்திருப்பர்.வேள்விகள் புரிவர். தாம் செய்த தவத்தில், ஆற்றல் பல பெற்றனர். அவர்கள் சொல்லும் சொல்லுக்கு சக்தி உண்டு. கோபத்தினால் சாபமிட்டால் அது பலிக்கும் என்றாலும், தவத்தின் பலன் குறைந்துவிடும் என்பதால், பிறர் செய்யும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்வர். இருப்பினும் சில முனிவர்கள், சில நேரங்களில் சாபமிடுவர்.கம்பராமாயணத்தில் முனிவர்களின் சாபச் சொல் பலிக்கும் என்பது குறித்து ஆராய்வோம்.
தவம் செய்யும் முனிவர்கள்
முக்காலுடன் தவம் செய்பவர். தாமரை மணியாலான ஜெப மாலையையும், ஆமை வடிவமான மணையையும் வைத்திருப்பர். தவசியர் ஆமை வடிவில் உள்ள மணைப்பலகையில் அமர்ந்து தவமிருப்பர். ஆமை துன்பம் நேரும் போது, நான்கு கால்களும், தலையும் ஆகிய ஐந்து உறுப்புகளையும், முதுகு ஓட்டின் கீழே அடக்கிக் கொள்ளும். அது போல் ஐம்புலன்களின் பிணிப்பையும் அகற்ற வேண்டும். ஆமை போல் ஐந்து பற்றையும் தவசியர் அகற்ற வேண்டும் என்பதை நினைவு செய்யும் வகையில், ஆமை போல் செய்யப்பட்ட மணையில் அமர்ந்திருப்பர். தவசியர் புலித்தோலிலும் அமர்வது உண்டு. அப்புலித் தோலும் ஆமை வடிவினதாகக் கிழித்து அமைக்கப் பெற்றிருக்கும். உண்மையாக ஐம்புலப் பற்றை அகற்றி இருப்பர்.
தவசியர் குறித்துத் தொல்காப்பியர்
தவசியருக்கு பூணூல், கமண்டலம், முக்கோல், ஆமை வடிவினாலான பலகை ஆகியவை உரியன என்று தொல்காப்பியர் கூறுகிறார்.
"நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க்குரிய"
(தொல்காப்பியம்-மரபியல்நூ70)
தவம் செய்வோர் சொல்லுக்கு மாபெரும் வலிமை உள்ளது. அச் சொல் காலத்தை வென்று நிற்கிறது. அவர்கள் என்ன சொன்னாலும் அது அப்படியே பலிக்கிறது. துறவியர் சொன்ன சொல் தான் மந்திரமாகும். அவர்கள் செய்த தவத்தின் சக்தி, அவர்கள் சொல்லும் சொல்லில் ஊடுருவி, அச்சொல்லையே மந்திரமாக்குகிறது.