வெந்து தணிய மறுக்கும் சாதியும் புதிய தலைமுறையின் மீறலும் 'பெத்தவன்' நெடுங் கதையை முன்வைத்து... -முனைவர் ம இராமச்சந்திரன் -
கடந்த பதினைந்து ஆண்டுகளாக நண்பர்கள் பேச்சின் ஊடாக எனது நினைவில் பதிந்து விட்ட எழுத்தாளர் இமயம். 1990களில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாகப் பண்பாட்டுத் தளத்தில் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் சமூகம் சந்தித்தது. மேற்கத்தியத் தொடர்பால் பல புதிய இயக்கப் போக்குகளும் புதிய சிந்தனை வெளிப்பாடுகளும் தமிழ் இலக்கியத்திற்கு வந்து சேர்ந்தன. சமூகத்தின் முதற் பொருளாகப் பேசப்பட்ட பெண்ணியம், தலித்தியம், பின்நவீனத்துவம் அமைப்பியல், போன்ற சொல்லாடல்கள் மேடையேறி பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தின. இந்தப் பேச்சுப் போக்கில் வந்தடைந்தவர் இமையம். கோவேறு கழுதைகள், ஆறுமுகம் போன்ற நாவல்களின் மூலமாகப் புதிய எதார்த்த சூழலை இலக்கியத்திற்குக் கொண்டு வந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருந்தார். அன்றிலிருந்து பின்தொடரும் ஒருவனாக ஆகிப்போனேன். செடல் படித்துவிட்டுக் கதைகளின் ஊற்று மூலம் குறித்த தேடலின் முடிவுக்கு வந்திருந்தேன். புத்தகத் தயாரிப்பில் எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்தி வரும் கிரியா பதிப்பகம் இமையத்தின் அனைத்துப் படைப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருவதையும் கவனிக்கத் தவறியது இல்லை.
ஒரு படைப்பாளியின் படைப்பு ஊக்கம் அவனது கனிந்த இதயத்தில் இருக்கிறது. தான் காணும் மனிதனையும் அவனது வாழ்க்கைச் சிக்கல்களையும் அவனாக உணர்ந்து விழும் கண்ணீரிலும் உயிர்ப்பிலும் ஒரு படைப்பாளி உயிர் பெறுகிறான். இமையத்தின் படைப்புகளில் பயணிக்கும்போது மனிதம் நசுக்கப்படும் ஒவ்வொரு தருணத்திலும் இமையத்தின் ஒரு துளி கண்ணீர் எனது இதயத்தை நினைப்பதைக் காணுகிறேன். தாயின் கருவறையில் மௌனித்து இருக்கின்ற குழந்தையின் உச்ச உணர்வுக்குச் சென்று விடுகிறேன். கண்கள், காதுகள், மனம் செயல்பட மறுத்து நிற்கின்றன அன்றாட வாழ்க்கைச் சூழலில் என்னை இணைத்துக் கொள்ள சில நாட்களை மௌனமாகக் கடந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. சமூகத்தின் ஒரு கண்ணியில் இருந்து விடுபட்டு விடவும் கூடாது அதே வேளையில் அதற்குப் பலியாகவும் கூடாது என்ற எண்ணம் தோன்றாமல் இருப்பதில்லை. பெத்தவனும் இதே பாதிப்பை ஏற்படுத்தியது.
பெத்தவன் நாவலாகவும் வடிவம் பெறாமல் சிறுகதை வடிவத்தையும் மீறி தன்னைக் கட்டமைத்துக் கொண்ட பனுவல். ஒரு அமர்வில் படித்து முடித்து விட்டாலும் எழுந்திருக்க மனமில்லாமல் சுமையோடு ஒவ்வொரு அப்பாவும் தன் மகளைப் பற்றி என்னும் எண்ணம் மேலோங்கி நிற்கிறது.